Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களை இனவழிப்புச் செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரசுக்கும், அதன் படைகளுக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் அணிதிரண்டு செயற்பட்டு வருகின்றமை பன்னாட்டு சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருவதால், புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் ஒற்றுமையுடன் கூடிய இணைந்த முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை மீண்டும் வலியுறுத்துகின்றது.

பிரித்தானியாவாழ் தமிழர்களின் ஒட்டுமொத்த எழுச்சியானது மீண்டும் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பல மில்லியன் பவுண்ஸ்கள் செலவில் மிகவும் சக்தி வாழ்ந்த ஒரு அரசியல் பரப்புரை நிறுவனத்தின் உதவியுடன் சிறீலங்கா அரசு செய்ய முயன்ற அரசியல் பரப்புரை இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

அரசியல் வெற்றிக்கு மக்கள் பலம் இன்றியமையாதது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ள இந்த நிகழ்வுகள், எமது ஒற்றுமையையும் புதிய அணுகுமுறைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.

நேற்று (வியாழக்கிழமை) லண்டன் டோர்செஸ்ற்ரர் விடுதிக்கு முன்பாக முதன்மைப் போர்க்குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போராட்டத்தில் சிறுவர் முதல் மூதாளர்வரை கடும் குளிரின் மத்தியிலும் பத்தாயிரம் வரையிலானோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானியாவாழ் தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நேற்று கனடா மொன்றியலிலும், ரொறன்ரோவிலும் கனடிய உறவுகள் பிரித்தானியத் தூதரகங்கள் முன்னிலையில் ஆதரவுக் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்பாக சுவிஸ்வாழ் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் உறவுப்பால கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும், தமிழ் அமைப்புக்களும் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிரான பிரித்தானியாவாழ் தமிழ் மக்களின் செயற்பாட்டுக்கு தமது நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துள்ள அதேவேளை, போர்க்குற்ற நபர்களை நாட்டுக்குள் அனுமதித்த பிரித்தானிய அரசுக்கு தமது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

முதன்மைக் குற்றவாளி மகிந்தவுடன், களத்தில் நின்று எமது உறவுகளின் உயிர் குடித்து பேரவலத்திற்குள்ளாக்கிய படைத் தளபதிகளில் ஒருவராகிய 53வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சஜி கலகே (தற்பொழுது அரச அதிபர் அலுவலகத்தில் முதன்மைப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பணியாற்றுகின்றார்) மகிந்தவுடன் இங்கு வந்திருந்த போதிலும், அவருக்கு எதிரான சாட்சியங்களை உடனடியாகப் பெறுவதில் எமக்கு சிரமம் இருந்தது.

எனவே முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பாதிக்கப்பட்ட எமது உறவுகள், ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிர்வரும் 15ஆம் நாளுக்கு முன்னர் தமது சாட்சியங்களை சமர்ப்பிக்கும் அதேவேளை, போர்க்குற்ற நபர்கள் தொடர்பாகவும், அவர்கள் இழைத்த போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் எம்முடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது.

பிரித்தானியாவாழ் தமிழ் உறவுகளின் அழுத்தமும், விரைந்த ஒற்றுமையான செயற்பாட்டினாலும் அச்சமடைந்த மகிந்த தனது ஒக்ஸ்போர்ட் சங்க உரையை இரத்து செய்தது மட்டுமன்றி, விடுதியில் இருந்து பின்புறமாக தளபாட பாரவூர்தி ஒன்றிலேயே தப்பிச் சென்று, இடை வழியில் மகிழூந்தில் ஏறி சிறீலங்கா தூதரகத்திற்குள் தஞ்சடைந்ததாக சிங்கள ஊடக நண்பர்கள் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையைப் பொறுத்த வரையில் இனவழிப்புக் குற்றவாளிகள் மற்றும் போர்க்குற்ற நபர்களுக்கு எதிரான எமது செயற்பாடுகளும், சட்ட நடவடிக்கைகளும் தொடரும் என்பதையும், இது பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் மக்களுடன் பகிரப்படும் எனவும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தொடர்ச்சியான இந்த செயற்பாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் இருந்து அந்நியப்படுத்தி எமது தேசத்தின் விடுதலையின் அவசியத்தையும், நியாயத்தையும் உலக நாடுகள் விளங்கிக்கொள்ள உதவும்.

கொசோவோ, கிழக்கு திமோர், சூடான் போன்ற இவ்வகையான மாற்றமே அவர்களது விடுதலைப் போராட்டத்தினை நியாயப்படுத்தி வருகின்றன. ஆனால் இதுவொரு நீண்ட பயணம். அறத்தின் வளியிலான இந்த நீண்ட பயணத்திற்கு சகல தமிழரின் பங்களிப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகளே தாயகத்தில் எமது மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு, அடிமை வாழ்விற்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்டு, விடுதலைக்காக ஓயாது உழைப்பதும், போர்க்குற்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளும் பொறுப்பு எம்எமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு, எமது எந்தவொரு செயற்பாட்டிலும் இணைந்தே பயணிப்போம் என திடசங்கற்பம் கொள்வோம்.

நன்றி.

பிரித்தானிய தமிழர் பேரவை

0 Responses to சிறீலங்காவின் போர்க் குற்றத்திற்கு எதிராக அணி திரள்வோம்: பிரித்தானிய தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com