Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்

பதிந்தவர்: தம்பியன் 04 December 2010

நான் ஒரு அதிபர்...என்னை என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் இங்கிலாந்து சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கைது பயத்தை உண்டாக்கி நடுங்க வைத்திருக்கிறார்கள் அயலகத் தமிழர்கள். 6 கோடி தமிழகத் தமிழர்களால் முடியாததை 3 லட்சம் பிரிட்டன் தமிழர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளசோடு இந்திய பிரதமரை சந்தித்து விருந்துண்ண முடிந்த ராஜபக்சேவால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றக் கூட முடியவில்லை.

ராஜபக்சேவின் இங்கிலாந்து பயணத்தின் போது தமிழர்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஒன்றுபட்ட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கூடவே இங்கிலாந்து தொலைக்காட்சியான சேனல் 4 வெளியிட்ட ஆவணங்கள் ராஜபக்சேவின் போர்க்குற்ற நடவடிக்கைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின. கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போய் வெள்ளையர்களே ராஜபக்சேவுக்கு எதிராக திரண்டிருக்கிறார்கள்.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காட்சிகளைக் கண்ட வெள்ளையர்கள் கொந்தளித்துப் போனார்கள். மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் நாடாக இருக்கும் இங்கிலாந்தில் மகிந்தவின் கோரமுகத்தைப் பார்த்தவர்கள் எங்களோடு சேர்ந்து நின்று எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். மைனஸ் எட்டு டிகிரி என்கிற அளவிற்கு தட்பவெப்பம் இருந்ததால் சாலைகளில் ஒன்றரை அடி உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. அந்தக் குளிரிலும் குழந்தைகளோடு பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து ராஜபக்சேவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கிலாந்தில் கொலைக்குற்றம் சாட்டி புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் புகார்கள் அடிப்படையில் ஆயிரக்கணக்கான எஃப்..ஆர்.களும் பதிவாகியிருக்கின்றன. 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பிறகும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இனி ராஜபக்சேவும் அவருடைய சகோதரர்களும் ஐரோப்பிய நாடுகளில் கால் வைக்கவே முடியாது”- லண்டனில் புலிக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழ சகோதரர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக இப்படி கூறுகிறார்.

தமிழகத்தில் தன் சகுனி வேலையை சிறப்பாக செய்து முடித்த கையோடு இங்கிலாந்துக்கு போன இலங்கைத் தூதர் அம்சாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கிலாந்துக்கு போனால் எதிர்ப்பு வலுவாக இருக்குமே... கைது அபாயம் இருக்குமே என்றெல்லாம் பயந்த ராஜபக்சேவிடம், இங்கே தமிழர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்களால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ராணியும் நமக்கு ஆதரவாக இருக்கிறார் என்று அம்சா கொடுத்த ரிப்போர்ட்டை நம்பியே இங்கிலாந்தில் கால் வைத்தார் ராஜபக்சே. பிறகு வைத்த காலை எடுக்க முடியுமா என்கிற அளவிற்கு பயந்து நடுங்கிப்போனார் ராஜபக்சே.

ஏற்கனவே சிலி அதிபரை கைது செய்திருக்கிறது இங்கிலாந்து என்பதால் இந்த முறை போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் கைது செய்யவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டன. இங்கிலாந்தை பொறுத்த வரை போலீஸ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். அல்லது ராணி உத்தரவிட்டால் ஒருவரை கைது செய்யலாம் என்கிற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ராஜபக்சே ஒரு நாட்டின் அதிபராக இருப்பதால் அவரைக் கைது செய்ய ராணி எலிசபெத்தின் உத்தரவு தேவையாக இருந்திருக்கிறது. அதனால் இந்த முறை கைதாவதில் இருந்து தப்பி விடலாம் ராஜபக்சே. ஆனால் அவர் மீதும் அவருடைய சகோதரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதிபராக இல்லாமல் இனி இங்கிலாந்தில் ராஜபக்சே குடும்பம் கால் வைக்க முடியாது. இதே நிலையை ஐரோப்பிய நாடுகள் முழுக்கவும் ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன தமிழர் அமைப்புகள். ஆஸ்திரேலியாவிலும் இதே நிலைதான் ஏற்படும்.

இங்கிலாந்து வந்திருந்த ராஜபக்சேவை நேர்காணலுக்கு வரும்படி அழைத்தன அங்கிருக்கும் பிரபல தொலைக்காட்சிகள். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் ராஜபக்சே. இங்கிலாந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளவே முடியாத அளவிற்கு போர்க்குற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பயணம் என்பது மிகப்பெரும் அவமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த அவமானத்தை உணரும் நிலையில் இருப்பாரா ராஜபக்சே? இந்த நூற்றாண்டின் மாபெரும் கொடுங்கோலனாக மாறியிருக்கும் ராஜபக்சே சந்திக்க வேண்டிய அவமானங்கள் நிறைய இருக்கின்றன. இங்கிலாந்து தமிழர்களின் உரத்த குரல் அதையே உணர்த்துகிறது.

கார்த்திகைச்செல்வன்
நக்கீரன்

1 Response to ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்

  1. நாம் தமிழர் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கொலைவெறியனை தலை தெரிக்க ஓட வைத்த இந்த சம்பவம். தொடரட்டும் எமது ஒற்றுமை. இவனையும் இவனுக்கு உதவிய நாடுகளின் தலைவர்களுக்கும் இப்படிப் பட்ட எதிர்ப்பு இருக்கவேண்டும். மஹிந்தனும் அவனது கொலைவெறி பரிவாரங்களும் கைதாகி த்ண்டனை அடையும வரை தொடரட்டும் புலம் பெயர் உறவுகளே உங்கள் பணி.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com