Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்றில் நாங்கள் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். தற்போது சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள பேரினவாத கொடுங்கோன்மை மிக்க அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில் நாங்கள் மீண்டும் எழுந்துநின்று போராடவேண்டும்.

இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற தமிழர் நினைவெழுச்சிநாள் 2010ல் சிறிலங்கா நவசமாசக் கட்சியின் பொதுச்செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆற்றிய உரை.


சிறிலங்காவில் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய பேரினவாத சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இறுதியாக மகிந்த அரசாங்கத்தினது செயற்பாடுகளின் விளைவாக தமிழ் மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் மாத்திரமல்லாது, தமிழர்களது தாயகப் பகுதிகளில் தாக்குதலை நடாத்துவதற்காக அனுப்பப்பட்ட சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தங்களுக்குப் பரிச்சயமில்லாததொரு தேசத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் மடிந்திருக்கிறார்கள்.

இவ்வாறாக அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட துன்பத்திற்கான கிளர்ச்சிகள் ஒருநாள் ஏற்படத்தான் செய்யும்.

தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் பணி யாருக்கு வழங்கப்பட்டதோ அவர் இன்று தமிழ் அரசியல் கைதிகளுடன் சேர்ந்த சிறையில் வாடும் நிலை என்று ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு மகிந்த அரசாங்கத்தினை தூண்டிய, அவர்களுக்குத் துணை நின்ற மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு [ஜே.வி.பி] எதிரான செயற்பாடுகளில் இன்று அரசாங்கம் இறங்கியுள்ளது.

மகிந்த ஆட்சியமைப்பதற்கு உதவிய ஜே.வி.பி இன்று நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறது.

அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஜே.வி.பியின் உறுப்பினர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய அரசு எதுவோ அதற்கு எதிராகப் போராடவேண்டிய நிலைக்கு ஜே.வி.பியினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

துயர்நிறைந்த இந்தத் தருணத்தில் நான் சில பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மகேந்திரன் நடேசன் எனது கட்சியில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். இவரது திருமணத்திற்கும் நான் சென்றிருந்தேன். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடன் உரையாடியிருந்தார். எந்தச் சூழமைவிலும் தனது செயற்பாட்டினைக் கைவிடப்போவதில்லை என அப்போது என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை.

கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில்; கல்விபயின்ற காலப்பகுதியில் குமார் பொன்னம்பலத்தினை நான் சந்தித்தேன். சிங்கள அரசாங்கங்கள் எனக்கெதிராகச் செயற்பட்டபோதெல்லாம் பொன்னம்பலம் எனக்குப் பாதுகாப்பாகச் செயற்பட்டார். அவரும் இன்று எங்களுடன் இல்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து தெற்கில் நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களில் எங்களுக்குத் துணைநின்றவர் ரவிராஜ்.

சிறுபான்மைத் தமிழர்களின் நலனுக்காக ஓங்கி ஒலித்த யோசப் பரராஜசிங்கமும் நானும் கனடாவில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியிருக்கிறோம்.

இவ்வாறு தமிழர்களது உரிமைக்காகக் குரல் கொடுத்த அனைவரது உயிர்களையும் எடுத்தது சிங்கள ஆட்சியாளர்கள்தான்.

டீ.எம் சந்திரவிமல மற்றும் .கே அண்ணாமலை உள்ளிட்ட எனது கட்சியின் 24 உறுப்பினர்கள் சுய நிர்ணய உரிமைக்கான மற்றும் சுயாட்சிக்கான, போராட்டத்தில் தங்களது உயிர்களை நீத்திருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கள இனத்தினைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள் பேரினவாத ஜே.வி.பியினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் எங்கள் அனைவருக்குமானது. இந்தத் போராட்டம் தமிழர்களுக்கு மாத்திரமானதல்ல. மாறாக, சனநாயகத்தினை விரும்பும் சிங்களவர்களுக்குமானதுதான்.

வரலாற்றில் நாங்கள் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். தற்போது சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள பேரினவாத கொடுங்கோன்மை மிக்க அரசாங்கத்தினை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில் நாங்கள் மீண்டும் எழுந்துநின்று போராடவேண்டும்.

இதன் பின்னர்தான் இலங்கைத்தீவுக்கு நீதி கிடைக்கும். இதன் பின்னர்தான் போர்க் குற்றவாளிகள் யாரோ அவர்களை எங்களால் தண்டிக்க முடியும்.

இலங்கைத்தீவில் மீண்டும் சனநாயகத்தினைக் கொண்டுவருவதற்காக சிறிலங்கா நவசமாசக் கட்சியினராகிய நாங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இணைந்து வேலை செய்வதென முடிவெடுத்திருக்கிறோம்.

வடக்குக் கிழக்கில் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்துதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் காணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பதைக் கண்டறிதல் ஆகிய அம்சங்களே எங்களது உடனடிக் கரிசனைகள்.

தற்போதைய சூழமைவில் சிறிலங்காவில் நிலைமைகள் மோசமாகத்தான் உள்ளது. ஆனால், நிலைமைகள் நிச்சயம் மாறும்.

தற்போதைய நிலையில் நாட்டினது வடக்குக் கிழக்கில் இராணுவ ஆட்சியே நிலவுகிறது. மக்கள் அமைப்புக்கள் எதுவும் அங்கில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுவருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

காணாமற்போனவர்கள் கண்டுபிடிக்கப்படுவதோடு அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரியும் வவுனியாவில் நாங்கள் நடாத்திய போராட்டத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

எங்களது இந்தப் போராட்டங்களில் பலர் தினமும் இணைந்துகொண்டு வலுச்சேர்கிறார்கள். சிறிலங்காவினது சுதந்திரம் மற்றும் சனநாயகத்திற்கான போராட்டத்தில் நாங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

இவ்வாறு விக்கிரமபாகு தனதுரையில் தெரிவித்தார்.

0 Responses to ஒன்றுணைந்து போராடுவதற்கான தருணமிது - இலண்டன் மாவீரர் நாளில் விக்கிரமபாகு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com