Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உங்களது பாதுகாப்புச் செலவிற்கு வடக்கு-கிழக்கில் உள்ள மக்களும் வரிசெலுத்துகிறார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் மக்களை அச்சத்தின்பிடியில் வைத்திருப்பதற்கு எமது மக்களிடமிருந்தும் வரி அறவிடப்படுகின்றது. இந்த வரிப்பணமானது கடந்த ஆண்டு நடைபெற்ற அகோர யுத்தத்தில் கணவனை இழந்து, மனைவியை இழந்து, மழலைச் செல்வங்கள் தமது தாய், தந்தையரை இழந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்து, தேடிவைத்த சொத்துக்கள் மற்றும் வளங்களை இழந்து சோகத்தை நெஞ்சில் சுமந்து, எஞ்சியுள்ள உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மெழுகுவர்த்திகளாக உருகுபவர்களிடமிருந்து பெறப்படுகின்றது என்பதை நினைவில் கொண்டு இரவில் உறங்கும்பொழுது உங்களது மனச்சாட்சியுடன் சற்று உரையாடிப்பாருங்கள். நீங்கள் யார் என்பது உங்களுக்கு நன்கு விளங்கும் என தமிழ் தேசியகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று (03.12.2010) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்தார்.
அவரது உரையின் முழுவடிவம் வருமாறு:

இந்த வரவு-செலவுத்திட்டத்தில் வடக்கு-கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று எங்கள் அனைவரினாலும் இம்மன்றத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அச்ச உணர்வுகளைப் போக்குகின்ற வகையில் இந்த வரவு-செலவுத்திட்டம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இடம் பெறவில்லை. யதார்த்தத்தில் பிரிந்துபோயுள்ள சமூகத்தை இணைப்பதற்குப் பரந்த மனப்பாங்கு வேண்டும். மனங்களையும் இனத்தினையும் இணைப்பதற்குக் கல்விக்குப் பாரிய நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்நாடு முழுவதற்குமே கல்விக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் வடக்கு-கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகவே உள்ளது. கல்விக்கு வழங்கப்படும் சிறப்புக் கவனிப்பானது மீள்குடியேறிய மக்களின் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டிற்கு ஆதாரமான முக்கிய விடயமாகும்.

வவுனியாவில் இயங்கிவரும் தொழில்நுட்பக் கல்லூரி இன்னமும் அதன் நிரந்தரக் கட்டடத்தில் இயங்கமுடியாத நிலையிலிருப்பதுடன், அங்கு பணியாற்றும் வருகைதரு விரிவுரையாளர்களுக்கு 2008ஆம் ஆண்டிற்கான வேதனமும் 2009இல் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கும் 2010இல் ஜூலையிலிருந்து நவம்பர் மாதம்வரையிலும் வேதனங்கள் நிலுவையில் உள்ளன. அவர்களுக்கான நிலுiயிலுள்ள வேதனங்கள் வழங்கப்பட்டு இனிவரும் காலங்களில் உரிய நேரத்தில் வேதனம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வவுனியா கல்வியியல் கல்லூரியின் புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்ற பொழுதிலும் அதன் வேகம் போதுமானதாக இல்லை. இந்தக் கல்லூரியில் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்களுக்கான ஆசிரிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இன்னமும் புதியதாக அறிமுகப்படுத்துகின்ற பாடங்களுக்கும் ஆசிரிய மாணவர்களை இணைத்துக்கொண்டு அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்நிறுவனம் புதுப்பொலிவுடன் முழுவீச்சில் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்னமும் பலபாடசாலைகள் தடுப்பு முகாம்களாகவும் புனர்வாழ்வு மையங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக ஓமந்தை மத்திய கல்லூரி, வவுனியா மகாவித்தியாலயம், நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பம்பைமடு மாணவர் விடுதி என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவை தொடர்பாக நான் இந்த மன்றத்தில் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருப்பதைக் கணக்கிலெடுத்து இம்முறையாவது இவற்றிற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

மழலைச் செல்வங்களுக்கு அரிச்சுவடியைப் போதிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவுமின்றி தம்மை அர்ப்பணித்துப் பிள்ளைகளுக்குக் கல்வியின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்களது சேவையைப் பாராட்டி இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும். இதனைப்போன்றே தாம் கற்ற கல்வியை தமக்கான உரிய வாய்ப்பு வரும்வரை தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி மற்றவர்களுக்குப் போதிப்பவர்களையும் நாம் கௌரவித்து, நிரந்தர வேலை கிடைக்கும்வரை இடைக்கால நிவாரணமாக அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்கி, அவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு-கிழக்கிலுள்ள மாணவர்கள் குறிப்பாக வன்னியில் உள்ள மாணவர்கள் தமது பாடசாலைகளை நோக்கும் போதெல்லாம் போரின்பொழுது தாம் எதிர்கொண்ட உயிர் அச்சுறுத்தல்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாக உணர்கின்றனர். அவர்களின் குண்டடிபட்டுச் சிதிலமடைந்த பாடசாலைச் சூழல் மாற்றப்பட்டு அங்குள்ள பாடசாலைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குப் புனரமைக்கப்பட்டு அவர்கள் உளரீதியாக அச்ச உணர்விலிருந்து வெளிவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மனிதனை மனிதனாக மாற்றுவது கல்வியே. பிளவுபட்டுள்ள சமுதாயத்தை இணைப்பதற்குக் கல்வி ஒரு பிரதான ஆயுதமாகத் திகழ வேண்டும். கடந்த காலத்தில் பௌதிக வளங்களும் மனித வளங்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சீர் செய்வதற்குக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அப்படியொரு ஏற்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

யுத்தத்தைக் காரணமாக வைத்து ஒருசாராருக்குக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1971ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட தரப்படுத்தற்கொள்கையினால்தான் நாடு இவ்வளவு பாரிய விளைவுகளைச் சந்தித்தது. பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதிபடைத்தவர்களும் இனரீதியில் பாரபட்சம் காட்டப்பட்டு ஒடுக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனவே, அவர்கள் ஒரேநாடு என்ற மைய நீரோட்டத்திலிருந்து விலகிச்செல்ல நேர்ந்தது. கல்வியை மையமாகக்கொண்டே மாணவர்கள் திசைவிலகிச் செல்ல நேர்ந்தது.

தமிழராகப் பிறந்ததற்காக மட்டுமே கைதுசெய்யப்பட்டு காணாமல் போனமையினாலேயே மாணவர்கள் கல்வியை விட்டு விலகி போரில் ஈடுபட்டனர்.

பாடசாலைகள் குண்டுவீசி சிதைக்கப்பட்டதுடன் அகதி முகாம்களாகவும் புனர்வாழ்வு மையங்களாகவும் மாற்றப்பட்டு எமது பிள்ளைகளின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது.

பாடங்கள் அனைத்தும் சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் மொழிக்கொலை நடைபெறுகின்றது. பாடவிதானத்தில் இலங்கை தொடர்பான வரலாறுகள் திரிபு படுத்தப்படுகின்றன. எமது பகுதிக்கு உரிய நேரத்தில் பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்குக் கிடைப்பதில்லை.

மாணவர்களின் தேர்ச்சி மற்றும் அடைவு மட்டத்தினை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்தத்தில் சிக்குண்டு வளங்கள் மறுக்கப்பட்டு உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் சகல வளங்களோடும் கல்வி பயின்ற சமூகத்தினருடன் சமமாகப் போட்டிபோட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைநிலவுகின்றது. இதனால் அவர்களின் அடைவு மட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது.

வளஒதுக்கீடுகளிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடாமல் வடக்கு-கிழக்கை யுத்தத்தினால் பாதிப்புற்ற பிரதேசமாகக் கருதி, போர்க்கால அடிப்படையிலான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டு விசேட கல்விக் கொள்கைகளை வகுக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தி பின்பற்றினால் மட்டுமே தமிழ் மக்களுக்குக் கல்வியூடான சமாதான இணக்கப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கேற்ற உத்தரவாதத்தை வழங்க முடியும். இந்த வரவு-செலவுத்திட்டத்தில் அவ்வாறான நிலை தோன்றாதவிடத்து இந்த அரசாங்கம் எதைச் செய்ய விரும்புகிறது என்ற சந்தேகமே தொடர்ந்து நிலவும்.

பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்களது தேவைகளையும் அவசியங்களையும் கருத்திற்கொண்டு விசேட திட்டங்களை வகுத்து செயற்படவேண்டும் என்பதை பன்னாட்டு அனுபவங்கள் எமக்கு எடுத்தியம்புகின்றன. இதனடிப்படையில் ஐந்தாண்டு, எட்டாண்டு திட்டங்கள் போன்ற திட்டங்களை வகுத்து தேசிய நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களை இணைத்துள்ளனர். ஆனால் யுத்த நெருக்கடியான காலகட்டத்தில்கூட தமிழ்ப் பிரதேசங்களில் மாணவர்களின்மீது பரீட்சைகள் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு உங்களது சமூகநீதியின்மீது சந்தேகமே எஞ்சியிருக்கின்றது.

மேல்மாகாண கல்வி நிர்வாக முறைமைக்கும் வடக்கு-கிழக்கில் உள்ள கல்வி நிர்வாக முறைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. எனவே வடக்கு-கிழக்கில் நிலவுகின்ற சூழலைக் கவனத்தில் எடுத்து அதற்கேற்ப கல்விக்கொள்கையை முன்னெடுப்பது அவசியம்.

வன்னியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பாடவிதானங்கள் முடிவுறாத நிலையிலேயே பரீட்சைகள் நடைபெற்றுள்ளன. தமிழ் மாணவர்களின் அடைவு மட்டம் குறைவதற்கு இவை காரணமாக உள்ளன.

யுத்த நெருக்கடிகளுக்குள் கடமையாற்றிய அதிபர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு வாழ் ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கொள்கை ஒரு விசேடத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. பாடசாலைகளுக்கான உட்கட்டுமானங்களைச் சரிசெய்த பிறகே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாடுமுழுவதிலும் தேசிய அட்டவணையில் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு வேதன உயர்வு நிலுவைத்தொகையுடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வட மாகாணத்தில் மாகாண அமைச்சின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2005ஆம் ஆண்டிலிருந்து பதவியுயர்வு மற்றும் சம்பள உயர்வுக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளது. இவற்றிற்காக 15கோடி ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக, வவுனியா நகரிலிருந்து வன்னிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குமான இருவழிப் பேருந்துசேவை நிறுத்தப்படவுள்ளதாகவும் சனவரி 2011இலிருந்து ஆசிரியர்களுக்கான பயணப்படி நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிகின்றேன். இங்கு இயல்பு தோன்றிவிட்டதாகவும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு இத்தகைய இடர் கொடுப்பனவுகள் அவசியமில்லை என்றும் அரசு தெரிவிக்கின்றது.

யுத்தம் நடைபெற்று மீள்குடியேற்றம் இன்னமும் நிறைவடையவில்லை என்று அரசே பலமுறை கூறிவருவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இடம்பெயர்ந்த ஆசிரியர்களுக்கான 2009ஆம் ஆண்டு சனவரி, பெப்ரவரி மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்து மீள்குடியேறிய ஆசிரியர்களுக்கான நிவாரணங்கள் வீட்டுத்திட்ட வசதிகள் அங்கீகாரிக்கப்பட்ட ரூ25,000 வழங்கப்படுகின்றதா? அக்ரஹாரா காப்புறுதித்திட்டத்தின்கீழ் மரணமடைந்த ஆசிரியர்களுக்கு காப்புறுதித்தொகை மறுக்கப்பட்டுள்ளது. வட-கிழக்குக் கல்விக்கு எதிர்வரும் நிதியாண்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது? இக்கேள்விகளுக்கான விடையை கல்வி அமைச்சரே உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். உடல், உளரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்களை இந்த அரசு உரிய முறையில் கவனிக்காததையே இச்செயற்பாடு காட்டுகின்றது.

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஓமந்தை மத்திய கல்லூரியில் கடந்த ஒன்றரை வருடமாக யுத்தத்தின் பின்பு பிடித்து வரப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்புமுகாமாக மாற்றப்பட்டுள்ள இப்பாடசலையில் கல்விகற்கும் 520 மாணவர்கள் மற்றும் 26 ஆசிரியர்கள் இப்பாடசாலையின் முன்புறமுள்ள காணியில் தற்காலிக கொட்டகையில் மிகுந்த சிரமங்கட்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கையினைத் தொடர்கின்றனர். 2010ஆம் ஆண்டு .பொ.. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள 40 மாணவர்களும் கடும் சிரமத்திற்கு மத்தியில் பரீட்சைக்குத் தயாராகி வருகின்றனர்.

இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள இம்மாணவர்கள் பருவமழை ஆரம்பமாகியுள்ள இக்காலகட்டத்தில் சுற்றிவர அடைப்பின்மையால் மழைநீர் கொட்டகைகளுள் உட்புகுந்து மிகுந்த சிரமத்தையும் நோய்வாய்ப்படும் ஆபத்தையும் எதிர்நோக்குகின்றனர். இவர்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியத்துடனும் .பொ..சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பரீட்சை ஆரம்பமாகும் முன்பாக பாடசாலை தனது வழமையான கல்வி நடவடிக்கையைத் தொடங்குவதற்கு ஏதுவாக இப்பாடசாலையை அதன் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேபோன்று வவுனியா மகாவித்தியாலயத்திலும் பலநூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டும் வடக்கிலிருந்து வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வெலிக்கந்தை காட்டுப்பகுதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டோருள் சுமார் 400பேர் திருப்பிக் கொண்டுவரப்பட்டும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மகாவித்தியாலயமானது 3500 மாணவர்களையும் 160 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு தேசியப் பாடசாலையாகும். இங்குள்ள ஆரம்பப் பாடசாலை (Primary School) வளாகத்திலேயே மேற்படி தடுப்பிலுள்ளோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் 875 ஆரம்பப்பள்ளி மாணவர்களும் 35 ஆசிரியர்களும் அருகிலுள்ள காணியில் தற்காலிகக் கொட்டில் அமைத்து அதில் தமது கல்வியைத் தொடர்கின்றனர். தகரத்தால் வேயப்பட்ட இக்கொட்டகையில் சுற்றிவர அடைப்பு இல்லாததால் கடும் பருவமழையின் சீற்றத்தினால் மாணவச் செல்வங்கள் நனைந்தபடியே கல்வி கற்கின்றனர். இத்துடன் பாடசாலை விடுதியிலும் தடுப்பிலுள்ளோரில் மிகுதியானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கணித பாடநெறிகளுக்கு 15 ஆசிரியர்களும் விஞ்ஞான பாடத்திற்கு 15 ஆசிரியர்களும் ஆங்கில பாடத்திற்கு 25 ஆசிரியர்களும் ஆரம்பக்கல்வி கற்பிக்க 75 ஆசிரியர்களுமாக பாடரீதியாக மொத்தம் 130 ஆசிரியர்களுக்கான பதவிநிலை வெற்றிடம் நிலவுகின்றது.

.பொ. உயர்தர விஞ்ஞான பிரிவிற்கு நெடுங்கேணி மகாவித்தியாலயம், ஓமந்தை மத்திய கல்லூரி மற்றும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்குமாக 6 விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இக்குறைபாடுகள் அடுத்த கல்வியாண்டிலாவது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

யுத்த அகோரத்தின் பாதிப்பு ஒருபுறம் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படாத நிலை மறுபுறம் என்பவை எமது மாணவர்களின் கல்விக்கூடங்களை எமது இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் தடுப்புமுகாம்களாக மாற்றியுள்ளன. குறைந்த பட்சம் அடுத்த கல்வியாண்டிலாவது வன்னி மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் தமது கல்வி நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனைப்போன்றே நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர் விடுதி என்பனவும் விடுவிக்கப்பட்டு புனரமைப்பு செய்து அடுத்த கல்வியாண்டிற்குள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.

சுமார் நான்கு வருடத்திற்கு முன்பிருந்தே மன்னார் மாவட்டத்திற்கென ஷகடல்சார் உயர்கல்விக்கென பல்கலைக்கழகம் ஒன்றினை நிர்மாணிக்க கல்விச்சமூகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய திருக்கேதீஸ்வரம் கோவில் சந்தியின் எதிர்ப்புறமாகவும் புகையிரதப்பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பகுதியில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலத்தினை தற்பொழுது வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின்படி ஷபறவைகள் சரணாலயத்திற்கான இடமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிகழ்வானது மிகவும் வேதனை தரும் விடயமாகும்.

இத்தகையதொரு பல்கலைக்கழகத்தின் அத்தியாவசியம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் உள்ளிட்ட கல்விசார் சமூகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பலமுறை எடுத்துக்கூறியும் அதற்கான இடம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தும் அரசு இப்பொழது அவ்விடத்தினைப் பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றி ஒதுக்கீடு செய்துள்ளமையானது எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். எனவே அரசு இவ்விடயத்தில் காத்திரமான முடிவெடுத்து வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று அந்நிலத்தினை கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கென வழங்கி பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மன்னார் வீதியில் பன்னவெட்டுவான் சந்திக்கும் கட்டையடம்பன் மீள்குடியேற்றக் கிராமத்திற்குமிடைப்பட்ட பிரதேசத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி(Teacher’s Training College) அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்திற்கருகில் ஆறு ஒன்றும் உள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதி கட்டுவதற்கும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் கல்லூரியினை நிர்மாணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இப்பொழுது இருக்கும் சுமார் நான்கு இலட்சத்து இருபத்தையாயிரம் பாதுகாப்புத்தரப்பினருக்கான வேதனத்திற்கே தொடர்ந்து பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. போர்ச்சூழலிலும் இதே அளவு பாதுகாப்புத்தரப்பினர்தான் இருந்தனர். அத்துடன் அக்காலகட்டத்தில் அதிகமான தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இப்பொழுது பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து சமூக நலன்சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை இராணுவத்தின் அச்சுறுத்தலில் வைத்திருக்க விரும்புவதையே காட்டுகின்றது.

உங்களது பாதுகாப்புச் செலவிற்கு வடக்கு-கிழக்கில் உள்ள மக்களும் வரிசெலுத்துகிறார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் மக்களை அச்சத்தின்பிடியில் வைத்திருப்பதற்கு எமது மக்களிடமிருந்தும் வரி அறவிடப்படுகின்றது. இந்த வரிப்பணமானது கடந்த ஆண்டு நடைபெற்ற அகோர யுத்தத்தில் கணவனை இழந்து, மனைவியை இழந்து, மழலைச் செல்வங்கள் தமது தாய், தந்தையரை இழந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்து, தேடிவைத்த சொத்துக்கள் மற்றும் வளங்களை இழந்து சோகத்தை நெஞ்சில் சுமந்து, எஞ்சியுள்ள உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மெழுகுவர்த்திகளாக உருகுபவர்களிடமிருந்து பெறப்படுகின்றது என்பதை நினைவில் கொண்டு இரவில் உறங்கும்பொழுது உங்களது மனச்சாட்சியுடன் சற்று உரையாடிப்பாருங்கள். நீங்கள் யார் என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் குறிப்பாக வன்னியில் உள்ள மாணவர்களின் தற்போதைய மனோநிலையைக் கருத்தில்கொண்டு 20ஆண்டுகாலத்திற்காவது அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தை இடஒதுக்கீடு செய்வதுடன் குறைந்த பட்ச கல்வித்தகைமையுடன் பதினெட்டு வயது நிரம்பிய இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பினை வழங்கி, பணியில் இருக்கும்போதே உயர்கல்வியைத் தொடர்வதற்கு வழிவகை செய்து, கையறுநிலையிலுள்ள வன்னிமக்கள் தன்னம்பிக்கையுடன், வளர்ந்த சமூகத்துடன் போட்டியிட்டு தமது கால்களில் நிற்பதற்கு வழிசெய்ய வேண்டுமென்று இம்மன்றத்தினூடாக அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

0 Responses to எங்கள் மக்களின் வரிப்பணத்தில் எங்களை அடக்குகிறீர்கள்: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com