Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்ததன் பின்னணியில் பிரித்தானிய அரசாங்கமே இருப்பதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல்,

யுத்தம் நடைபெற்ற போது இலங்கைக்கு பலநாடுகளில் இருந்தும் இராஜதந்திரிகள் வந்தனர். இவர்களை நாட்டுக்குள் வருவதற்கு நாம் அனுமதித்தோம். நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வருவதற்கு அவர்கள் வரவில்லை என்ற போதிலும் இராஜதந்திர முறையில் அவர்களை வரவேற்று கடினமான பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றோம். ஆனால் வேறு நாட்டு இராஜதந்திரிகள் பிரித்தானியாவிற்கு சென்ற போது பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இந்த வகையில் பிரித்தானியாவை தோல்வியடைந்த ஒரு நாடாகவே கருத வேண்டும்.

பிரித்தானிய ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜனநாயக தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியன பின்னணியில் உள்ளன. புலிகளின் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம், பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அப்படியானால் சட்டம் அமுல் நடத்தப்படாததற்கு காரணம் என்ன?

பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் நடவடிக்கைகளும் இலங்கையின் ஜனாதிபதியை பழிவாங்கும் செயல் அல்ல. மாறாக நாட்டையே பழிவாங்கும் செயலாகும். பிரித்தானியா வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தனி நாடு உருவாகும் என நினைத்திருந்தது. அவ்வாறு நடைபெறாதமையினாலேயே இலங்கைக்கு எதிராக தற்போது துரோகமிழைக்கின்றது.

பிரிக்கப்படாத ஒரே இலங்கை இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கையின் நற்பெயரை கெடுக்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து செயற்படுகின்றன.

ஜனாதிபதி ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் அதிகாரிகள் நிறுத்தவில்லை. இந்த உரையை நிறுத்தியதன் பின்னணியில் பிரித்தானிய அரசாங்கமே உள்ளது. விடுதலைப் புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் இன்றும் இணைந்தே செயற்படுகின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் முன்பாக இணையத்தளங்களில் இலங்கையில் யுத்த குற்றம் இடம்பெற்றது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து ஜெஹான் பெரேரா போன்றோரே உள்ளனர். இவர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். பிரித்தானியாவை மையப்படுத்தியுள்ள ஊடகங்களே புலிகளுக்கு உயிரூட்ட முனைகின்றன.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தாலும் அவர்களின் எச்சங்கள் இன்றும் உள்ளன. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த ஜனாதிபதி மீது இன்று பழி சுமத்துகின்றனர். இன்று காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

0 Responses to மஹிந்தவின் உரை ரத்து பின்னணியில் பிரிட்டன் விமல் கண்டுபிடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com