கப்பம் கொள்ளை என்ற பெயரில் தற்போது திட்டமிட்ட கொலைகள் நடைபெறுவதாக யாழ்தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொலைகளை பற்றி உரிய முறையில் கவனயீர்ப்பை செய்யாவிட்டால் இந்தநிலை நிச்சயம் மற்றவர்களுக்கும் ஏற்படும் என அண்மையில் கொலைசெய்யப்பட்ட கல்விப்பணிப்பாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தெரிவித்திருந்தார்.அண்மையில் நடைபெற்ற மூன்று கொலைச்சம்வங்கள் பற்றிய செய்தியை கீழே இணைத்துள்ளோம்.
சம்பவம்: 01
யாழ்ப்பாணம் வலிகாமம் வலய துணைக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் (52) கடந்த டிசெம்பர் 26 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) 11 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.
துணைக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்ற கொள்ளையர்கள் அவருடன் தவறாக நடக்க முயன்றதாகவும் கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து அதனைத் தடுக்க முயன்ற போது அவரைச் சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். கல்விப்பணிப்பாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் அவரது 13 வயது மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர்.
இதேமாதிரியான நிகழ்வு கடந்த டிசெம்பர் 12 ஆம் நாள் வலிகாமம் சங்கானையில் இடம்பெற்றது. . அதன்போது வீடு புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முருகமூர்த்தி ஆலய முதன்மைக் குருவான நித்தியானந்த சர்மா மற்றும் அவரது பிள்ளைகள் படுகாயமடைந்தார்கள். அவர்களில் நித்தியானந்த சர்மா வைத்தியம் பயனளிக்காமல் நான்கு நாட்களில் இறந்துபோனார். இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
முதலில் இந்தக் கொலை, கொள்ளை முயற்சியில் ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டது என எண்ணப்பட்டது. இப்போது இந்தப் படுகொலையை யாழ்ப்பாணக் குடாநாட்டை வல்வளைப்புச் செய்துள்ள சிங்கள இராணுவம் செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுட்டுக் கொல்லப்பட்ட துணைக் கல்வி இயக்குநர் சிவலிங்கம் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு நிகழ்வில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி சிங்கள தேசிய கீதத்தைப் பாட வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த சிங்கள இராணுவமே கொள்ளை என்ற போர்வையில் இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துள்ளன.
சம்பவம்: 02
மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த இந்த இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்தனர்.
கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக இருக்கிறது. வந்து பார்க்க முடியுமா?' என்று கூறித் தந்திரமாகக் குறித்த குடும்பஸ்தரான செல்வனை அழைத்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல்வனைக் காணாது இரவு முழுதும் குடும்பத்தினர் தேடியலைந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். குறித்த தொகைப் பணத்தைத் தராவிட்டால் செல்வனைக் கொலை செய்து விடுவோம் எனவும் அச்சுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்டுக் கிடந்தது.
இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்து வந்தாரெனவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சரசாலைச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெலவிடம் வினவியபோது, மேற்குறித்த சம்பவம் தொடர்பாகத் தனக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவல்களைப் பெறுவதற்காகச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது,"தற்போதுதான் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று) காலைதான் விளக்கமளிக்க முடியும்' என்ற பதிலே கிடைத்தது.
கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இருவர் காவுகொள்ளப்பட்ட அதிர்ச்சியிலிருந்து பயங்கரத்திலிருந்து குடாநாட்டு மக்கள் மீள்வதற்கிடையில் மூன்றாவது கொலைச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இதனால் குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது.
சம்பவம்: 3
சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார்.
கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.ஈழநேசன்



0 Responses to யாழில் கப்பம் கொள்ளை என்ற பெயரில்அரங்கேறும் திட்டமிட்ட கொலைகள்!