Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பரந்த வாசிப்பில்லாத இனம் கிணற்றுக்குள் இறக்க வேண்டிய சிங்கத்தை கூட்டுக்குள் இறக்கிவிட்டுவிடும் தம்பீபண்டிதர் சங்கரவைத்தியலிங்கம்..

அந்தக் காலத்து யாழ் குடாநாட்டில் உள்ள ஏதாவது ஓர் ஊருக்குப் போய் ஐயா புத்தகக்கடை எங்கே இருக்கிறது என்று விசாரித்துப் பார்த்தால் முதலில் ஆளை ஏற இறங்கப்பார்ப்பார்கள்.. பின்னர் அதோ அந்த முடக்கில் கிடக்கும் கிட்டங்கியில் மண்டையைப் போடப்போகும் கிழவர் ஒருவர் ஏதோ சில புத்தகங்களை விற்பதாகக் கூறுவார்கள்.

அங்கே போய்ப்பார்த்தால் பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்படாத தரமான புத்தகங்கள் எல்லாம் கைவிளக்கு இருளில் மங்கலாகத் தெரியும்.. அந்த இருள் கடைகளில் உள்ள முதியவரின் கைவிளக்கு ஒரு செய்தியை நமக்கு தெளிவாகச் சொல்லும்.. அந்த விளக்கு அந்த ஊரில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று தேடுவதுபோல ஒளிர்வதைக் காணலாம்.

நமது ஊரில் புத்தகக் கந்தர் என்று ஒருவர் இருந்தார். நம்மூர் சந்தியில் இடிந்துவிழப்போகும் சுண்ணாம்புக் கட்டிடத்தில் ஒரு கட்டில் அளவு பரப்பில் அவருடைய கடை இருக்கும். அவரிடம் சென்று புத்தாண்டு பிறக்கப் போகிறது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்.

சிறு பொழுது அவரையே பார்த்துக் கொண்டிருந்த புத்தகக்கந்தர் சென்ற ஆண்டு முழுவதும் நீ எத்தனை புத்தகங்களை படித்தாய் என்று கேட்டார். கேள்வி கேட்டவர் வெட்கித் தலை குனிந்தார். ஒரு புத்தகம் கூட நான் படிக்கவில்லை என்று சொன்னார். சென்ற ஆண்டில் பிணமாக இருந்த உனக்கு இந்த ஆண்டு விடிவதால் என்ன பயன் ? என்று கேட்டார்.

தம்பி வாசிக்க நூல்கள் இல்லாத வீடு வீடல்ல அதுவும் சுடுகாடே என்று கூறி, இலவசமாக சில நூல்களை எடுத்து முன்னால் போட்டார்..

கடந்து போகும் ஒவ்வொரு ஆண்டும் நீ வாசித்த புத்தகங்களால் மட்டுமே பெருமை பெறுகிறது என்பது அந்த முதியவர் சொன்ன செய்தியாகும். அதற்குப் பிறகு அந்தக் கைவிளக்கு அணைந்துவிட்டது

அதற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல புத்தகக் கடைகள் வந்தன. ரியூட்டரிகளின் கேள்வி பதில்கள் புத்தகங்களாக்கி விற்கப்பட்டன. யாழ்ப்பாணத்து வீதிகள் முழுவதும் ரியூட்டரிகளும், அதன் ஆசிரியர்களும் அவர்கள் பெயர்களுமாகக் காணப்பட்டன..

ஒரு நாள்

நம்மூர் அறிஞர் பண்டிதர் சங்கர வைத்தியலிங்கம் அந்தச் சுவரொட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

தம்பி இந்த இனம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் உருப்போடும் இனமாக வருகிறது.. பரந்த ஞானமற்ற ஓர் இனத்தை உருவாக்குகிறோம்.. பெரும் பாதாளத்தில் இந்த இனம் சிக்குப்படப் போகிறது.. பரந்த வாசிப்பை வளர்க்காவிட்டால் செம்மறிகள் போனதுபோல இனம் ஆபத்தாக நகர நேரிடும் என்று சொன்னார்..

தம்பி..

பரந்த வாசிப்பற்ற சிங்கள இனத்திற்குள் நாங்கள் வாழுகிறோம்.. சிங்கத்தை கிணற்றில் இறக்கும் கூரிய ஞானமுள்ள தலைமுறையை உருவாக்காது, இப்படி வெறும் கேள்வி பதில் படிப்பு படித்தால் அது இளைஞரை ஆபத்தான பாதைக்கே கொண்டு போகும்.. இது கல்வி இல்லை சிங்கத்தை முயல்கூட்டுக்குள் இறங்கவிடும் வேலை, நீங்களாவது பரந்த அறிவை வளர்க்க முயலுங்கள் என்று சொன்னார்..

பின்பொருநாள் மணிவாசகரின் திருக்கோவையாரை தெருவில் இருந்து வாசித்துக் கொண்டிருந்தபோது வந்தார்..

தம்பி 1956 கலவரம் சிங்கள இனம் பரந்த வாசிப்பில்லாத இனம் என்றதுக்கு அடையாளமாயிருக்கு.. சேகுவேரா கலவரமும் ஆற்றில் மிதந்த அப்பாவி சிங்கள இளைஞர் உடலங்களும் மனிதரை மனிதரே குதறி அழிக்கும் மடைமைக் கல்வி உள்ள நாடு சிறீலங்கா என்பதை உணர்த்தியிருக்கிறது..

வெள்ளத்தனையது மலர் நீட்டம்.. வெள்ளம் பெருக பெருகத்தான் தாமரைத் தண்டு வளரும்.. வெள்ளம் வற்றினால் வெறும் பாசியும் புதரும் நாறும்..

சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் தேசிய மொழி..

தேசிய கீதத்தை சிங்களத்திலேயே பாட வேண்டும்

மகாவம்சத்தை மறுபடியும் எழுத வேண்டும்என்பது போன்ற நாற்றமடிக்கும் எண்ணங்களே வாசிக்காத சமுதாயத்தில் வளரும்..

குர்ரானிலேயே எல்லாம் உண்டு என்போரும், பைபிளிலேயே எல்லாம் உண்டு என்போரும் உருவாகி சிலுவை யுத்தங்களால் அழிந்த நாட்கள் போன்ற அவலங்களே இங்கும் வரும்.. யாருக்கும் பின்னால் கொடி பிடிக்காது வாசி, பரந்த அறிவை வளர் என்று கூறினார்..

ஒரு நாள் அந்த விளக்கும் அணைந்தது..

பின்பு..

புதுமாத்தளனில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்று குதறி எறிந்தது.. இன்றும் அது பரந்த வாசிப்பற்ற நாடுதான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.

அதேபோல பரந்த அறிவற்ற தமிழர் கல்வியும் கீறிக்கிழிக்கப்பட்டு முள்ளி வாய்க்காலில் நிர்வாணமாகக் கிடந்தது.. மிருகத்திடம் பலியாகும் கல்வியே யாழ்ப்பாணத்து ரியூட்டரிகளும் பாடசாலைகளும் படிப்பித்த படிப்பு.. இது தெரியாமல் இப்போதும் யாழ். சமுதாயம் சீரழிந்த ரியூட்டரி கல்வியிலேயே நாட்டம் கொள்கிறது..

அனிமல் பிளானட் தொலைக்காட்சியை பாருங்கள்எருமைகளும், மான்களும், குதிரைகளும் கூட்டமாகப் போகும். அவைகளை வேட்டையாடும் மிருகங்களான சிங்கங்கங்கள் ஒன்று இரண்டையே கொல்லும்.. இலட்சக்கணக்கில் தேவையற்ற கொலையை படிப்பறிவற்ற விலங்குகளே செய்யாது

இப்போது புதுமாத்தளனில் செத்துக் கிடக்கும் தமிழ் உடலங்களைப் பாருங்கள்

தவறு எங்கே இருக்கிறது என்று புலப்படும்

இப்போது 2010 ம் ஆண்டு முடிவடைந்து 2011ம் ஆண்டுக்குள் ஈழத் தமிழினம் போகவிருக்கிறது. சமீபத்தில் எமது ஊரில் உள்ள நூல்நிலையம் ஒன்றின் செயலாளருக்கு இரண்டு நூல்களை அனுப்பி வாசிக்கக் கொடுக்கும்படி சொன்னேன். அவர் இப்போது இங்கு பெரும்பாலும் யாரும் வாசிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேட்டார். அதன் பின்னர் உலகப்புகழ் பெற்ற சயன்ஸ் ஆங்கிலச் சஞ்சிகையை சகல நூல் நிலையங்களுக்கும் அனுப்பி உலகத்தின் முன்னேற்றங்களை வாசித்து மொழி பெயர்த்துக் கூற ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அந்தப் பிரேரணையை அவர்கள் குப்பையில் வீசிவிட்டார்கள்.

அவர்களை குறைகூறி பயனில்லை இனி நமது புலம் பெயர் நாடுகளுக்கு வருவோம். எனது வீடு இத்தனை மில்லியன், நான் அத்திவாரம் போட்டே வீடு கட்டிவிட்டேன் என்று கூறுவார்கள். ஆனால் என்ன பயன் அந்த வீடுகளில் எத்தனை வீடுகளில் ஒரு சிறிய புத்தக அலமாரி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால்.. நாம் எப்படிப்பட்ட ஆபத்தான வாழ்வு வாழ்கிறோம் என்ற உண்மை தெரியவரும். போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தைவிட வெளிநாட்டு தமிழரிடையே வாசிப்பு மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது..

நல்ல நூல்களை வாசிக்காத வாழ்வு செத்த வாழ்வே..
வாசிக்க நூல்கள் இல்லாத வீடு வீடல்ல சுடுகாடே..

2010 ம் ஆண்டு முடிவடைகிறது..

புலம் பெயர் தமிழா நீ எத்தனை நூல்களை வாசித்தாய் மனச்சாட்சியை தொட்டு சொல்லு..

தெரியும்

2011 ம் ஆண்டில் மாதத்திற்கு ஒரு நூலாவது வாசி..

அடுத்த ஆண்டாவது நீ உயிருள்ள மனிதனாகவேண்டும்..

புத்தகக் கந்தரும், பண்டிதர் சங்கரவைத்தியலிங்கமும் ஏற்றிய அகல்விளக்குகள் புத்தாண்டு பிறக்கும் வேளையில் இதயத்தில் ஆடுகின்றன..

கி.செ.துரை 26.12.2010

0 Responses to நீ பிணமா ? மனிதனா.. ? புத்தகக் கந்தரின் புதுமைக் கேள்விகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com