மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் சிறு விவசாயியான குருவையா இறந்து விட்டார். காவல்துறையின் பிடியில் இருந்த போது தனது கணவர் கண் முன்னே அங்கம்மாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்கம்மாளின் மகனான மலைச்சாமி தற்போது இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தனது தாய் வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதும், தனது பெற்றோருடன் கைது செய்யப்பட்ட வேறு சில நபர்களுக்கு காவல்துறையினருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்துள்ளதும் வழக்குக்கு வலு சேர்க்கும் விடயங்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் தனது தந்தை அனுபவித்த சித்ரவதையை காட்டும் மருத்துவ ஆவணங்கள் - பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
காவல் நிலையத்திலேயே காவலர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் அங்கம்மாள் தனது மகன் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என்று தமிழோசையிடம் நம்பிக்கை வெளியிட்டார்.
தன்னையும் தனது கணவனையும் காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்திய காவலர்கள், ஒரு கட்டத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது கணவர் உடன்பட மறுத்ததை அடுத்து தான் கட்டியிருந்த சேலையை உருவி அதைக் கொண்டு தனது கணவரை நிர்வாணப்படுத்தி அவரின் கைகளை பின்னால் கட்டி அவரை தலைகீழாக தொங்கவிட்டதாக அங்கம்மாள் தெரிவித்தார்.
பிறகு நான்கு காவலர்கள் குருவையாவின் கண் எதிரே தன்னையும் நிர்வாணப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏழு நாட்களுக்கு காவல்துறையினர் பல்வேறு விதத்தில் செய்த துன்புறுத்தல்கள் காரணமாக தனது கணவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களில் ஒருவர் இறந்துவிட்டார். பல ஆண்டுகளாக கால தாமதமாகியிருக்கும் இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் கண்காணிப்பகம் என்ற அரசு சாரா மனித உரிமை அமைப்பு தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தாக மலைச்சாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது சொந்த வேதனைகள் ஒரு புறம் இருக்க, காவல்துறையினரின் பிடியில் இருக்கும் போது கொல்லப்பட்டதாக வந்த செய்திகளும், பரபரப்பாக பேசப்பட்ட ரீட்டா மேரி கற்பழிப்பு சம்பவமும், தவறு செய்யும் காவல்துறையினரை தண்டிக்க வேண்டும் என்ற வெறியை தன்னுள் ஏற்படுத்தியதாகவும் அதனால் தான் வழக்கறிஞர் பட்டம் படித்ததாகவும் மலைச்சாமி கூறுகிறார்.
இடைப்பட்ட காலத்தில், காவல்துறையினர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால் பணம் தருவதாக ஆசை காட்டியதாகவும் ஆனால் அதை தான் உறுதியாக மறுத்து விட்டதாகவும் அங்கம்மாள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஈழநேசன்
0 Responses to தமிழகத்தில் பெற்றோருக்கு நடந்த கொடுமை! 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகனின் போராட்டம்!!: பிபிசி