அவுஸ்திரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை அவுஸ்ரேலிய அரசாங்கம் நாடுகடத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக "ஓசியானிக் வைக்கிங்' கப்பலின் மூலம் காப்பாற்றப்பட்ட தமிழர்களில் 10 பேர் மீள்குடியேற்றத்துக்காக ரோமானியாவின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பட்டனர். எனினும் பாதுகாப்பு காணங்களுக்காக அவர்களை ஏற்றுக்கொள்ள கனடாவும் அமெரிக்காவும் மறுத்தமையை அடுத்து அவுஸ்ரேலியா நாடு கடத்த முயற்சிப்பதாக மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் இராணுவ புலனாய்வு தகவல்களின்படியே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவர்கள் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரகடனப்படி அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை திருப்பி அவர்களின் நாட்டுக்கு அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் 78 தமிழர்கள் இந்தோனேசியாவின் ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு கப்பல் மூலம் வந்து அனர்த்தத்துக்கு உள்ளானபோது ஓசியானிக் வைக்கிங் கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டனர். இதன் பின்னர் அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர்கள் வெவ்வேறு நாடுகளின் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் தமிழர்களை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முற்று முழுதாக கடற்படையினரால் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைத் தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் முடக்கியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய நிலைகள் கண்காணிப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த பத்து மாதங்களில் தமிழர்களை ஏற்றிய எந்தவொரு கப்பலும் அவுஸ்திரேலியாவிற்கு செல்லவில்லை என கடற்படைத் தளபதி திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் பாராட்டியுள்ளனர்.



0 Responses to அவுஸ்திரேலியா தமிழர்களை நாடுகடத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை