Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 90 சதவீதமான பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் வாழ்வாதாரத்துக்கே தவிக்கும் நிலையில், வடக்கில் அரசு பெரும் பொருள் செலவில் பொங்கல் விழா கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்துமத இணைப்பாளரான சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவாசாரியார் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அம்மக்கள் கடும் வாழ்வாதார அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். உலர் உணவுக்காகவும், நிவாரண உதவிகளுக்காகவும் கையேந்தி பெரும் அவலத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் அரச மட்டத்திலான பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள் பெரும் பொருள் செலவில் நடத்தப்படுவதைத் தவிர்த்து சூரிய வழிபாட்டு மத அனுஷ்டானத்துடன் அம்மக்களுக்கான உடனடி உரிய நிவாரணங்கள் கிடைக்கச் செய்வதே இன்றைய தேவையாகும்.

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்து அடைமழை பெய்து வரும் இன்றைய நிலையில், சில கிராமங்களுடனான தொடர்புகள்கூட இல்லாது அவர்களுக்கான அனர்த்த நிவாரணங்களைக்கூட முழுவீச்சில் செய்ய முடியாது அரச, தனியார் நிறுவனங்கள் தவிர்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசமட்ட பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் உண்மையான பொங்கல் பண்டிகைக்கான அர்த்தத்தை இழந்துவிடுவதாகிவிடும்.

விவசாயிகளின்மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனாதிபதி என்ற வகையில் யதார்த்த சூழ்நிலைக்கேற்ப அம்மக்களுக்கு முழுவீச்சில் நிவாரணங்கள் வழங்கப்படுமானால், அதுவே அம்மக்களுக்கு பெரும் பொங்கலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மக்களோடு அனைத்து சூழ்நிலையிலும் மக்களுக்காக செயற்படும் ஓர் இந்துமத குரு என்ற அடிப்படையில் இக்கருத்தை தங்களுக்குத் தெரியப்படுத்துவதே எனது உண்மையான கடமையாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கிழக்கில் வெள்ளம் வடக்கில் பொங்கல் ரத்து?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com