Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலின் கைத்தொலைபேசி, அமெரிக்க உளவுப்பிரிவால் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் சூடுபிடிக்க, இன்று தி கார்டியன் அஞ்சலா மேர்க்கலின் வயிற்றில் மட்டுமல்ல மேலும் பல உலகத் தலைவர்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.

எட்வேட் சுனோவ்டனால் வெளியிடப்பட்டுள்ள தகவலை த கார்டியன் அம்பலத்திற்குக் கொண்டுவந்துள்ளதால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 35 உலகப் பெரும் தலைவர்களின் கைத்தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.

எட்வேட் சுனோவ்டனால் வழங்கப்பட்ட பட்டியலில் 200 தொலைபேசி இலக்கங்கள் இருந்துள்ளன, இதில் இதுவரை கண்டறியப்பட்டதில் 35 இலக்கங்கள் உலகப் பெரும் தலைவர்களுடையவை, மற்றைய 43 இலக்கங்கள் யாருடையவை என்று தெரியாது மர்மமாக இருக்கின்றன.

இந்த 43 பேருக்குள் சிறீலங்காவின் இறுதிப்பெரும் போரின்போது பேசப்பட்ட உரையாடல்கள் அடங்காது என்று கூற யாதொரு முகாந்திரமும் இல்லை காரணம் ஒற்றுக்கேட்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் யாவும் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தலைவர்களின் இரகசிய உரையாடல்களில் உள்ள விவகாரங்கள் தொகுக்கப்பட்டு, அமெரிக்க இராணுவத் தலைமையகமாக பென்ரகனுக்கு வழங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்போது முக்கியமான இரண்டு விடயங்கள் உலகின் முன் நிற்கின்றன..

01. குற்றமிழைத்த அமெரிக்காவுக்கு எதிராக உலகத் தலைவர்கள் குமுறிக்கொண்டு நிற்கிறார்கள், இஸ்லாமிய நாடுகளல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளே அதை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துள்ளன.

02. மறுபுறம் அமெரிக்கா தான் பதிவு செய்த தகவல்களை அம்பலப்படுத்தினால் கண்டிப்பாக இந்தத் தலைவர்களுடைய உரையாடல்களை பதிவு செய்தது சரியே என்ற உண்மையும் அம்பலமாகும்.

ஆகவே இரண்டு தரப்பிற்குமே இதனால் ஆபத்துள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை செய்யக்கூடாது என்றளவில் சமரசத்தை எட்டக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் புறுக்சல்சில் சந்தித்துப் பேசியுள்ளார்கள், அவர்களுடைய கருத்தும் இவ்வாறே இருக்கிறது.

நேற்று இரவு புறுக்சல்சில் வைத்து..

பிரான்சிய அதிபர் ஒலந், ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இவர்களுடைய கூட்டு நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளையும் அழைத்துள்ளார்கள்.

அமெரிக்காவுக்கு எதிராக இன்னொரு புதிய அணி ஜேர்மனி – பிரான்ஸ் தலைமையில் உருவாகுமா என்பது அடுத்த சுவாரஸ்யமாகும்.

முதற்கட்டமாக அமெரிக்கா இது குறித்த பூரண விபரங்களை தரவேண்டும், அதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 தலைவர்களும் இணைந்து காய் நகர்த்த வேண்டும் என்பது இதன் எதிர்பார்ப்பாகும்.

ஒற்றுக்கேட்கப்பட்ட 35 பெரும் தலைவர்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நல்லுறவில் இப்போது ஏற்பட்டுள்ள விரிசலை பராக் ஒபாமா எவ்வாறு சமரசம் செய்யப்போகிறார் என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.

ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலின் கைத்தொலைபேசியை ஒற்றுக்கேட்கவில்லை என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்னர் நேற்று கூறினாலும் ஜேர்மனி அவருடைய கூற்றை இன்று முற்றாக நிராகரித்துள்ளது.

ஒருபுறம் நட்பும், மறுபுறம் கண்காணிப்பும் என்ற இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது இது முற்றாக நிறுத்தப்பட வேண்டும், தமது மண்ணில் உள்ள தலைவர்கள் மட்டுமல்ல, சாதாரண குடி மக்களின் தொலைபேசிகள் கூட ஒற்றுக்கேட்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று மேர்க்கலும், ஒலந்தும் தெரிவித்துள்ளார்கள்.

அதேவேளை, தொலைபேசிகளை மூன்று வழிகளில் ஒற்றுக்கேட்காலம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

01. தொலைபேசி உரையாடல்கள் பரிமாற்றம் செய்யப்படும் மத்திய நிலையத்தில் இருந்து தகவல்களை ஒற்றுக் கேட்கலாம்.

02. வான்வழி சற்லைற்றில் பரிமாற்றம் நடக்கும்போது கேட்கலாம்.

03. கேபிள்களை குறுக்கிடுவதன் மூலமும் கேட்கலாம்.

ஆகவே தொலைபேசிகள், இணையம், மின்னஞ்சல், ஸ்கைப் போன்ற நவீன விஞ்ஞான உபகரணங்கள் உலகத் தலைவர்களின் இரகசியங்களுக்கு உகந்தவை அல்ல என்பதே இதற்கான விடையாக உள்ளது.

பெயர் தெரியாத 43 இலக்கங்களில் கோத்தபாய, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா போன்ற சிங்களத் தலைவர்களும், விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உட்பட அனைவருடைய இலக்கங்களும் இருந்திருக்குமா என்பதும் முக்கிய கேள்வியாகும்..

நேற்று வெளியான சிறீலங்கா செய்திகளில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்காது என்று அறிவித்துள்ளது.

மேற்கண்ட உரையாடல் ஒலிப்பதிவுகள், துல்லியமான காணொளிகள் அமெரிக்காவிடம் இருப்பதை சிறீலங்கா அறிந்திருந்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்றுதான் தெரிவிக்க வேண்டும்.

மறுக்க மறுக்க சிறீலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற ஆவணங்களும் அதிகமாக அம்பலமாகும் என்பதும் சிறீலங்காவுக்குள்ள அடுத்த ஆபத்தாகும்..

தொடர்கின்றன சுவாரஸ்யங்கள்…

அலைகள்

0 Responses to உலகத்தின் 35 பெரும் தலைவர்களின் கைத்தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com