Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதம்சார்ந்த விழாவாக இல்லாமல் தமிழ்மொழிசார்ந்து உழவுத்தொழில் சார்ந்து இருப்பது தான் இதனுடைய மகிமை

தைப்பொங்கல் என்பது தமிழர்கள் வாழ்விலே முக்கியமான விழாவாக இருப்பது மிகவும் சிறப்பான விடயம். அந்தச் சிறப்பிற்கு மதம்சார்ந்த விழாவாக இல்லாமல் தமிழ்மொழிசார்ந்து உழவுத்தொழில் சார்ந்து இருப்பது தான் இதனுடைய மகிமை ,இதற்குப் பலவிதமான காரணிகள் உண்டு .அவையாவன

1 இயற்கை வணக்கத்தைச் சார்ந்தமுறை

2 உழைக்கும் உழவர்கள் நன்றிசெலுத்தும் நாள்

3 தமிழர்களுடைய புதுவருட நாள்

1 இயற்கை வணக்கத்தைச் சார்ந்தமுறை இது தமிழர் வாழ்வியலில் ஆரம்பகால பண்பாட்டுப்படிமம்சார்ந்த தொடர்வழிபாட்டுமுறையின் தொடர்ச்சியெனலாம். மனிதப்பரிணாம வளர்ச்சியற்ற அறிவியல் பற்றி அறியாதகாலகட்டங்களில் சூரியன் சந்திரன் நெருப்பு நீர் மின்னல் இடி போன்ற பலவகையான இயற்கைகளைக் கண்டு பயங்கொண்டு அவற்றை வணங்கியதன்தொடர்ச்சி வழிபாட்டுமுறையின் சிதைந்த மிகுதியெனலாம். தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் ஆரிய, மொகமதிய, ஜரோப்பிய அன்னியப் படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு பன்னெடுங்காலமாக அவர்களது வழிபாட்டுமுறைகளையும் ஆரியபண்பாட்டு விழுமியம் தனது மதம்சார்ந்த கோட்பாடுகள் பழக்க வழக்கங்கள் யாவையும் தமிழர் வாழ்வியலோடு திட்டமிட்டு கலக்கப்பட்டு இன்று அதுதான் எங்களுடைய வணக்கமுறையென மனதின் பதிவுகளில் பதிவாகிவிட்டது. இன்று நாங்கள் வணங்கும் கடவுளர்களது உருவங்கள் ஓவியர் ஒருவரால் கற்பனையாக வரையப்பெற்றதெனக் கூறினால் கூட நம்பமுடியதளவிற்கு நம்பிக்கையைப் புகுத்தி அதற்க்குள்ளே அவ்வளவிற்கு பயத்தின் நம்பிக்கையை வளர்த்து அறிவியல் வளர்ச்சிபெற்ற இக்காலகட்டத்திலும் மீளமுடியாமல் வாழும் தமிழர்கள் நாமென்றால் மிகையாகதெனலாம்.

2 உழைக்கும் உழவர்கள் நன்றிசெலுத்தும் நாள் மனிதன் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு என்றால் மிகையாகாது அந்த உணவை உற்பத்திசெய்யும் உழவர்(விவசாயிகள்) தாம் பயிரிடும் நிலத்திற்கும் அந்த நிலத்தை உழுதுபண்படுத்த உதவும் எருதுகளுக்கும் நன்றிதெரிவிப்பதற்காகவும் சூரியன் தங்களது பயிரை சுட்டெரிக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டுதல் செய்ததை நிறைவேற்றும் நன்றிக்கடனாக புதிய அறுவடை அரிசியைக்கொண்டு பொங்கலிட்டு படையலிடுவது தைமாதம் 14 வது நாள் கொண்டாடப்படுகின்றது மறுநாள் உழவிற்கு உதவி புரிந்த காளைமாட்டிற்கும் பட்டிப் பொங்கலிட்டு நன்றிசெலுத்தும் நாளாக உழவர்திருநாள் நினைவு கூரப்படுகன்றது இப்படியான நன்றி தெரிவிக்கும் நடைமுறை உலகநாடுகள் பலவற்றிலும் பலவேறு காலகட்டங்களில் பழமை நினைவு நிகழ்வாக தொன்றுதொட்டு நடைமுறையிலிருக்கின்றது. இருந்தும் தமிழர்களாகிய நாம் எங்களுடைய ஒற்றுமையினத்தைக் காட்டத் தவறவில்லை 15 ம் நாளென்று ஒருசாரார் கூறுவதுவும் நடைமுறையிலுண்டு. இதற்கான விளக்கம் புதுவருடமெனும் பகுதியில் தருகின்றேன்.

இந்த திருநாளுக்கான சிறப்பு மதம் சார்ந்த நாளாக இல்லாமல் மொழி சார்ந்த ஒரு தமிழர் விழாவாகவிருப்பது இதனது மேன்மையாகும். இந்துக்களா யிருந்தாலென்ன கிறிஸ்துவர்களாக இருந்தாலென்ன இஸ்லாமியர்களா யிருந்தாலென்ன அவர்கள் தமிழ் மொழிபேசுபவர்களாக இருந்தால் அவரவர்களது வணக்க முறையை இணைத்துக்கொண்டாடுவர். இருந்தாலும் இன்று மதங்களை தங்கள்பிழைப்பாகத் தூக்கித்திரியும் சில விசமிகளின் பொய் பரப்புரை மதப்பண்டிகையாக அதுவும் இந்து மதத்தின் பண்டிகையாக நோக்கும் கண்ணோட்டம் வலுத்து வருவது மதத்தின் வளர்ச்சிக்காக மொழியை ஆழிப்போம் என்பது போலகிவிடும். இடம்பெயர் நாடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாதபோது மதசார்பைச் சாட்டிவிட்டு தப்பிக் கொள்வது இலகுவாகின்றது இந்த முறைமை எமது தலையில் நாமே மண்அள்ளிகொட்டுவதற்கு ஒப்பானது.

3 தமிழர்களுடைய புதுவருட நாள் தமிழர்களுக்கென்ற புது வருடமென்பது எதுவென்பதில் திடமானவொரு தீர்வு இருந்தும் கூட அதை நடைமுறைப்படுத்தாமல் மாற்றான் தாய்மனப்பான்மையுடன் நடப்பது தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு சபாக்கேடாகிவிட்டது. அறிஞர்களும் தமிழிற்காக பணிசெய்யும் ஆர்வலர்களும் கூட இதைக் கைக்கொள்ளாமல் பாரமுகமாகவிருப்பது தமிழின் அழிவிற்கு காரணியாக இருக்குமென்பதில் ஐயமில்லை . தமிழர்களது நடைமுறை வாழ்வு ஏனேதானோ என்கின்ற போக்கு ,தான்தோன்றித்தனமான செயற்பாடு, தன்னின செயற்பாடுகளைவிட அடுத்தவரினச் செயற்பாடு சிறந்ததென்கின்ற சிந்தனை, வரலாற்று தேடலற்ற பிற்போக்குத்தனம் இவையெல்லாம் தன்மொழியிழக்கின்ற செயல்கள்.

மனிதன் தோன்றிய நாள் தொடக்கம் காலஅளவுகளான நேரம், நிமிடம், மணி, நாள், கிழமை, மாதம், வருடம் என்பன பல யுகங்களாக தேடிய தேடல்களின் பயனாகவும் பருவகாலங்களின் தொடர்ச்சிசெயற்பாடு திரும்பவும் வருவதை வகுத்து வருடத்தொடக்கம் கண்டுகொள்ளப்பட்டு புதியவருடமாக கொண்டாடப்படுவது வழமை. இதை கிறிதுவர்கள் அவரது பிறப்பை முன் வைத்து கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன் (கிமு) கிறிஸ்துவின் பிறப்பிற்கு பின் (கிபி)என ஆண்டுத்தொடரை பதிவு செய்தார்கள். இப்போதைய வருடம் கிபி 2011. இதைப்போலவே தமிழருக்கும் ஆண்டுத்தொடரது உண்டு அது தமிழ்புலவர் திருவள்ளுவரை வைத்து திருவள்ளுவருக்கு முன் (திமு)என்றும் திருவள்ளுவருக்கு பின் (திபி) எனவும் பல ஆண்டுகளாக நடைமுறையிலுண்டு. இப்போதைய தமிழாண்டு திபி 2042 இதை யாருமே கண்டுகொள்வதில்லை இதை மறைமலையடிகளார் 1921 ல் பல பண்டைய இலக்கிய நூல்களை ஆய்வுசெய்து பலவழியான திறனாய்வுகளுக்குப்பின்னர் பல அறவுசார் மக்கள் பச்சையப்பன் பல்கலைக்கழகத்தின் முலம் மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இன்று வழக்கிலிருக்கும் மேடம் (வைகாசி) மாதப்புதுவருடம் சாலிவாகனன் அல்லது கணிக்கன் எனும் வடஇந்தியஅரசனால் கிபி 0078 ம் வருடம் தொடக்கப்பட்டு கண்ணபிரான் நாரதர் தனை பெண்ணாக்கி கூடி அறுபது பிள்ளைகள் பிறந்ததாகவும் அவர்களது பெயர்கொண்டு (இப்பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது அன்னிய ஆழுமைக்குச் சான்றுபகர்கின்றது) அதற்கொரு அருவருக்கத்தக்க புராணக்கதையையும் புனைந்து அறுபது வருடத்தொடரை உருவாக்கி தமிழர்தம்வரலாறு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. இன்றும் இதை நடைமுறைப்படுத்த அவர்களுக்கென்றொரு வலுவான அரசு ஆட்சியிலுண்டு இது வடஇந்திய ஆழுமையின் எச்ச சொச்சமானதென்பதை யாரும் அறிவுரீதியாகவோ சிந்தனை ரீதியாகவேனும் உணர்ந்துகொள்ளாமல் இராமன் ஆண்டாலென்ன இராவணன்ஆண்டலென்னவென்பதன் போக்கு எதிர்காலச்சந்ததிக்கான குழிபறிப்பு என்பதை உணர்வோமானால் எங்களது எதிர்கால சந்ததியின் வளர்ச்சி காப்பாற்றப்படும்.

தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் ஆங்கில வருடம் தொடங்கி 14 ம் நாள் என்பது திடமானது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இன்று பல குழப்பங்களை உருவாக்கி தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பஞ்சாங்க தயாரிப்பாளர்களின் போட்டி வாக்கிய பஞ்சாங்கமெனவும் திருக்கணித பஞ்சாங்கமென்றும் சாலிவாகனமெனவும் அறுபது வருடத்தொடரெனவும் எழுத்து வழக்கிழந்தும் குருவிச்சையைப் போல தமிழ் மீது ஒட்டிக் கொண்டு சமஸ்கிருதம் அடுத்தவர் மொழிசிதைவுக்குக் காரணமாகின்றது தங்கள் தங்களது கலண்டர் தான் சரியென்கிற போட்டியும் குழப்பத்திற்குக் காரணமாகின்றது. புது வருடமென்பது ஆங்கிலவருடம் தொடங்கி 15ம் நாள் (தமிழர் வருடம் தை முதல் நாள்) தமிழர்களது புது வருடமாகும் தாய்மொழி மீதான பற்றுதலை சமஸ்கிருதம் கற்றறிந்தவர்களால் சிதைக்கப்படுவதை தெரிந்தும் கூட வாய் முடி மௌனிகளாக இருப்பது தமிழர்களின் சுயகுணமாக இருக்கின்றது. சொந்த மொழியிலே கடவுள் வணக்கத்தைக்கூட செய்யமுடியாத சமுகமல்லவா நாங்கள் சிந்திப்போம் .

மனித நேயமும் சமுதாய விழிப்புணர்வும் ஏனென்று தட்டிக் கேட்கின்ற மனவலுவற்று எதிர்கால திட்டமிடலெதுவுமின்றி சுயஉணர்வற்று கால்போன போக்கிலே போகாமல் நமக்கென இருக்கும் தமிழ் பாரம்பரியங்களைத் தேடிக்காப்பதிலும் சரியான தேடலுள்ள தமிழ்சமுதாயத்தை கட்டியெழுப்பாது விடின் நாம் வாழ்வோம் தமிழ் வாழாது அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மு. இராஜலிங்கம்
அலைகள்

0 Responses to பொங்கலும் தமிழ் புதுவருடப் பிறப்பும்: மு. இராஜலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com