Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக ஜெயக்குமார் எனும் நமது சகோதரன் சிறிலங்கா கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மையெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சிறிலங்காப் படையினரின் இக் காட்டுமிராண்டித்தனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்வதுடன், கொலை செய்யப்பட்ட சகோதரனின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழ நாட்டை தமிழீழத் தாயகத்தில் அமைத்துக் கொள்வதனை முதன்மை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் எந்தப் பாகத்திலும் தமிழர்கள் மீது எவரால் இன்னல் இழைக்கபட்டாலும், கொடுமைகள் நிகழ்த்தப்பட்டாலும் அவற்றை எதிர்த்து அனைத்துலக ரீதியாகக் குரல் கொடுக்கும்.

உலகில் தமிழர்களுக்கென்றொரு அரசும், அதற்கான அரசாங்கமும் இதுவரை அமையாத சூழலில், உலகத் தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் தன்னால் இயன்றவரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராடும்.

இந்த வகையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கெதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு வரும் வழிவகைகள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்களப் படையினரின் தொடர்ச்சியான வன்முறைகள் தற்செயலான நிகழ்வுகளல்ல. இதன் பின்னணியில் தமிழர்களுக்கெதிரான இனவாதமும், இந்திய எதிர்ப்புணர்வு கொண்ட அரசியல் உள்நோக்கமும் உள்ளது என்றே நாம் கருதுகிறோம். இவை தொடர்பாக சில கருத்துக்களை தமிழக மற்றும் இந்திய மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

சிங்களப் படையினரின் தமிழர்களுக்கெதிரான இனவாதத்தினதும் தமிழர் குரோத மனப்பாங்கினதும் ஒரு வெளிப்பாடாகவே நாம் தமிழக மீனவர்களுக்கெதிரான கொலைவெறியினை நோக்க வேண்டும். இல்லையெனில் ஜெயக்குமார் என்ற நமது சகோதரனைக் கொடிய முiயில் கொல்ல வேண்டிய வேறு எவ்விதக் காரணமும் சிங்களப்படையினருக்கு இருக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள், தமது படையினர் மத்தியில் பெரும் இனவாதத்தை ஊட்டியே ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பெரும் கொடும் போரை நடாத்தினார்கள். இதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

இது மட்டுமன்றி, ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழர்களை சிங்களம் இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் நோக்குகிறது. தமிழ் நாட்டின் ஊடாகத்தான் சிங்களத்தின்மீது தமிழர்களதும் இந்தியாவினதும் படையெடுப்பு நிகழ்ந்ததாகக் கருதும் சிங்களம், தமிழர்களை தமது பாதுகாப்புக்கு எதிரானவர்களாக நோக்கும் மனநிலையினைக் கொண்டுள்ளது.

மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் தோய்ந்து போயிருக்கும் சிங்களம் ஈழத் தமிழ்மக்களுக்கெதிராகத் தொடுத்த போரை இலங்கைத் தீவில் இந்திய விரிவாக்கத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராக வர்ணிக்கும் ஆய்வாளர்கள் உள்ளனர். இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்களம் நடாத்தும் போரும்கூட உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக சிங்களம் நடாத்தும் போரின் ஓரங்கமே. இலங்கைத் தீவில் இந்திய ஆதிக்கத்தை குறியீட்டுவடிவில் எதிர்ப்பதும் இப் போரின் ஒரு நோக்கம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவை அரவணைத்து வைத்துக் கொண்டு இந்திய ஆட்சியார்களுடன் சதுரங்க விளையாட்டைத் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது சிங்களம். சிங்களத்துக்கு உதவி செய்வதன் மூலம் இலங்கைத்தீவில் தமது செல்வாக்கினை நிலைநிறுத்த முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்தியாவின் பிடியிலியிருந்து இலங்கைத்தீவினை எவ்வர்று விடுவிப்பது என்பது குறித்து சிங்களம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழரை இனக்கபளீகரம் செய்யும் முயற்சியில் சிங்களம் இறங்கியிருப்பதும் இத் திட்டத்திற்குட்பட்டுத்தான் நிகழ்கிறது.

ஆனால், இவையெல்லாவற்றையும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்திய ஆட்சியாளர்களோ சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது சிறிய நாடான சிறிலங்காவை எப்படியும் தம்மால் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும்.

சிறிலங்கா சிறிய நாடுதான். ஆனால் சீனாவுடன் சேரும் போது சிறிலங்காவைச் சிறிய நாடாகப் பார்க்க முடியாது. இந்தியாவினை விட சீனாதான் சிங்கள மக்களின் இயல்பான தெரிவாக இருக்கும். காலம் தாழ்த்தி உண்மையினை இந்தியா உணரும்போது அது இந்தியாவுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றத்துக்குள்ளாக்கப்படுவது ஈழத் தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல - தமிழக, இந்திய மக்களின் நலனுக்கும் அவசியமானது. இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்களது கவனத்துக்கு கொண்டு வருவதற்கு ஆவன செய்யுமாறு தமிழக, இந்திய மக்களிடம் இத் தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

நன்றி

பிரதமர்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to சிங்கள இனவெறியினதும் இந்திய எதிர்ப்புணர்வினதும் வெளிப்பாடே தமிழக மீனவர்கள் படுகொலை: ருத்ரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com