Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா இராணுவத்தின் மரக்கறி வியாபாரம் - தமிழர் நிலத்தை பறித்து மரக்கறி பயிர்ச்செய்கை (பின்னனி தகவல்கள்).

நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற வேளையில் இராணுவத்திற்கு சேர்ந்தவர்கள் அன்று விடுதலைப் புலிகளுக்குப் எதிராக துப்பாக்கித் தூக்கிய கைகளில் இன்று என்ன செய்கின்றனர்? என ஒரு வீடியோ ஆவணத்தை சிங்கள ஊடக குழு வெளியிட்டிருந்தது.

அந்த ஆவணத்தில் ஷெல் விழாத வானத்திற்கு கீழிருந்து படையினர் இன்று பூமியில் விவசாயம் செய்கின்றனராம். யாழ்ப்பாணம் பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் படையினர் விவசாயம் செய்வதை யாழ்ப்பாணம் சென்றிருந்த சிங்கள குழுவினரின் கெமராக்களில் பதிவாக்கி அதை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அன்று குண்டுகளால் உயிரிழந்த யாழ்பாணம் பலாலி பூமி இன்று பசுமையான விவசாய நிலமாக மாறி அமைதி அடைந்துள்ளதாம். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் சுமார் 47 ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் இவ்வாறு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனராம்

யாழ் படை தலைமையகத்திற்கு உரிய 51ஆவது படைப்பிரிவின் அனைத்து படை தளங்களுக்கும் இந்த விவசாய தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளே விநியோகிக்கப்படுகின்றன.

மேலும், விடுமுறையில் வீடு செல்லும் படையினருக்கு மிகவும் குறைந்த விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் கடமை புரியும் படையினர் வீடு செல்லும் போது கைகளில் பெரிய பொதிகளை எடுத்துச் செல்வது இதனாலேயே ஆகும்.

சிங்கள ஊடக குழுவினரிடம் சில கேள்விகள்.

படையினர் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்?

சொந்தகாரர்களை அடித்து துரத்திவிட்டு அவர்களின் நிலங்களை உயர் பாதுகாப்பு வலையம் என்று சிங்கள பாராளுமன்றம் மூலம் சட்டம் நிறைவேற்றிவிட்டு ஆயுத முனையில் உங்கள் படையினர் விவசாயம் செய்து பயன் அடைகின்றனரே இதுதான் உங்கள் அமைதியா?

இன்னமும் 30 விழுக்காடு குடா நாட்டு பொதுமக்களின் நிலம் உங்கள் படையினரிடமே உள்ளதே அந்த நிலத்தின் சொந்தகார மக்களின் நிலைகளை ஒருகணம் யோசித்தீர்களா?

மக்களை கையேந்த வைத்து விட்டு அவர்களில் நிலங்களை ஆக்கிரமித்து உங்கள் படை விவசாயம் செய்கின்றனர். படையினரே உண்கின்றனர், படையினரே தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இதுதான் அமைதிக்கு எடுத்துக்காட்டா?

வடபகுதியில் போர்க்காலத்திலும் மரக்கறிகள் விளைவிக்கப்பட்டன. போர்க்காலத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடும் இருக்க வில்லை விலை அதிகரிப்பும் ஏற்படவில்லை. இராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டனவே.

ஒட்டு மொத்தத்தில் உங்கள் அரசும் இராணுவமும் எங்கள் நிலங்களை பறிமுதல் செய்து அல்லது ஆக்கிரமித்து நீங்களே விவசாயம் செய்து நீங்களே உண்ணும் கைங்கரியத்திற்கு பெயர்தான் அமைதியா? சமாதானமா?

என்று பலாலி பகுதியில் உங்கள் படைகள் வந்து குந்தினார்களோ னிலத்தினை ஆக்கிரமித்தார்களோ அன்றில் இருந்துதான் குண்டுகள் விழத்தொடங்கினவே.

பிரச்சினைகளை உருவாக்கி, பிரச்சினைகளை வளர்த்து, அதற்கு பரிகாரம் செய்து காட்டும் உங்கள் இனத்தின் கைங்கரியத்திற்கு பெயர்தான் அமைதி, சமாதானம், சகவாழ்வா?

உங்கள் படையினர் எங்கள் நிலங்களை விட்டு சென்றாலே உங்கள் படையினர் செய்ததைவிட இன்னமும் செழிப்பாக எமது மண் இருக்கும். கூடவே ஆத்ம திருப்தியும் , நிரந்தர அமைதியும் இருக்கும். ஈழநாதம்

0 Responses to சிறிலங்கா இராணுவத்தின் மரக்கறி வியாபாரம் - தமிழர் நிலத்தை பறித்து மரக்கறி பயிர்ச்செய்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com