Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கும், எங்களுடைய மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக்கப்படுவதற்கும் சீனா அரசாங்கம் உதவக் கூடாது ' என்கிற வேண்டுகோளை இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்திருக்கிறது.

இது ஒரு புதிய அணுகுமுறையாக தென்பட்டாலும் , இலங்கை அதிகாரமையத்திற்கு இவ்விவகாரம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

கேள்வி கேட்காத, தேசிய இனப்பிரச்சினையில் மூக்கை நுழைக்காத பிராந்திய நண்பனான சீனாவிடம் ,ஒருநாளும் பேசாத கூட்டமைப்பு பேசுகிறது என்பதை அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பேசியகையோடு யாழ்பாணத்திற்கும் சீனத் தூதுவர் வந்து விட்டார்.

இந்திய விஜயத்தை முடித்த அடுத்த கணம் , சீனத் தூதரகத்திற்கு கூட்டமைப்பு சென்றதன் பின்புலத்தில், டெல்லியின் அறிவுறுத்தல் இருக்குமென்று அரசு கணிப்பிடுகிறது. அத்தோடு, இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தை, கூட்டமைப்பினூடாக சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்த இந்தியா முயல்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

வடக்கில் சீனாவின் ஆளுமை, படைவிரிவாக்கத்தின் ஊடாக நிகழ்த்தப்படுவதை நிற்சயம் இந்தியா விரும்பாது.
இதன் மூலம் வட-கிழக்கில் தமிழ் தேசிய அரசியலின் இயங்குதளம் சிதையும் என்பதனையும், தற்போதைய இறுக்கமான சூழலில் அத்தகைய மாற்றம் தனது பிராந்திய நலனிற்கு உகந்தது அல்ல என்பதையும் இந்தியா புரிந்து கொள்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெருந்தேசிய இனத்தின் அரசியல் அதிகார மையமும், தமிழ் தேசிய அரசியலின் முக்கிய சக்தியும் தனது பிராந்திய நலன் சார்ந்த செல்வாக்கு மண்டலத்துள் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றது.

இதனை சிங்கள தேசம்  விரும்பவில்லை.
சீனாவையும் இந்தியாவையும் சமாந்திரமாகக் கையாண்டவாறு. முதற்கட்டமாக தமிழ் தேசிய அரசியலை அழிப்பதுதான் பேரினவாதத்தின் நோக்கம்.
 
1987 இல் இந்தியா வைத்த தீர்வு, போரில் வென்றபின் தேவையற்றதொன்றாகி விட்டது என்பதில் சகல பேரினவாத அரசியல் தலைமைகளும் உறுதியாகவிருக்கின்றன.
அந்த அரைகுறைத் தீர்வைக் கூட தமிழ் மக்களுக்கு கொடுக்கக் கூடாதென்பதில் அவர்களுக்கிடையே பலத்த ஒருமைப்பாடு இருக்கின்றது .

ஆகவே கூட்டமைப்பின் இந்திய விஜயத்தாலும், சீனச் சந்திப்பாலும் வெகுண்டெழுந்த அரசு, 13 வது திருத்தச் சட்டத்தை பழிவாங்கும் கருவியாகப் பாவிக்க முனைகிறது. இவைதவிர, இந்தியாவின் அழுத்தத்திற்கு தாம் அடிபணியப் போவதில்லை என்கிற செய்தியையும் , இந்த 13 வது திருத்தச் சட்ட நிராகரிப்பினூடாக சிங்கள மக்களுக்குச் சொல்ல முற்படுகிறது அரசு.
 
மக்களுக்குச் செய்யும் அபிவிருத்திப்பணிகளுக்கு, மாகாணசபை முறைமை தடைக்கல்லாக அமைந்தால் அதனையும் அகற்றுவோமென, பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் கூற ஆரம்பித்துள்ளார்கள். 'திவி நெகும' சட்ட மூலத்திற்கு எதிராக கூட்டமைப்பு தொடுத்துள்ள வழக்கே பசிலை இவ்வாறு பேசவைக்கிறது.
 
சமுர்த்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தென்னிலங்கை அபிவிருத்தி அதிகாரசபை  ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் 'திவி நெகும' திணைக்களம், கிராமிய மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் என்பதால் அதனை ஏன் கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்பதுதான் பசிலின் கேள்வி. மாகாணங்களுக்கு சிறிதளவு அதிகாரங்களை 13 வது திருத்தச் சட்டம் வழங்குவதையும் 'திவி நெகும' பறித்தெடுக்க முற்படுகிறது என்பதுவே கூட்டமைப்பின் பதிலாக இருக்கிறது.
 
இருப்பினும் பேரினவாததத்தின் பொதுப்புத்தி , மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை தமிழ் தேசிய இனம் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்பாது என்பதையே கோத்தபாயாவின் கூற்றுக்களும், பசிலின் 'திவி நெகும'வும் புலப்படுத்துகின்றன.
இதனைப் புரிந்து கொள்வதற்கு சர்வதேச அரசியலின் சூட்சுமங்கள் தேவையில்லை. சமாதான கால வரலாறே இதனை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும்.
 
2003 அக்டோபரில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த 'இடைக்கால தன்னாட்சி அதிகார சபை' என்கிற முன் மொழிவையும் சிங்களதேசம் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
 ஆனால் அதனை அன்றைய அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ரிசார்ட் ஆமிடேஜும், கொழும்பில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய தலைமையாளரும் வரவேற்றனர். அதனை எரிக் சொல்ஹெய்மும் வழிமொழிந்தார்.
 இப்போது புலிகளுக்கு சர்வதேச அரசியல் விளங்கவில்லை என்கிறார்.
'பலவான்' எரிக் சொல்வதை சரியென்று, சில சந்தர்ப்பவாத கருத்துருவாக்கிகளும் அதனை நியாயப்படுத்த முனைகின்றனர்.
 
2005 ஜூனில் சர்வதேச அழுத்தத்துடன் முன்வைக்கப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் கட்டமைப்பிற்கு [P-TOM] என்ன நடந்தது என்கிற விவகாரத்தை நோக்கினால், இது அரசியல் யாப்பிற்கு முரணானது என்று ஜே.வீ.பீ. தொடுத்த வழக்கினால் அம்முயற்சி சீர்குலைந்து போனதை கவனிக்க வேண்டும் .
பேரழிவில்கூட ஒரு  இணக்கப்பாட்டிற்கு சிங்கள தேசம் வர மறுத்தது என்பதனை, மேற்குலகின் சமாதான முகம் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரியாததுபோல் நடிக்கிறதா?.
 
ஆகவே,அடிபணிவு அரசியல் சரியானதென்று நியாயப்படுத்துவோர் , சர்வதேசம் எதனை விரும்புகிறது என்பதையாவது சொல்லட்டும்.
 
அத்தோடு,மக்களின் அழிவிற்குள் , அவர்களது பூர்வீக நிலஅபகரிப்பிற்குள், வல்லரசுகளின் நலன் புதைந்து கிடப்பதை இவர்களால் மறுக்க முடியுமா?.
 
மேற்குலகின் அனுசரணை இருந்தும், சட்டத்தின் துணையோடு சுனாமிக்கட்டமைப்பினைக் கருவிலே சிதைத்த நிலையையும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி ,அதே அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக வட-கிழக்கைப் பிரித்த நிகழ்வையும் இந்த சர்வதேசங்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தன.
 
கிழக்கு பிரிக்கப்படும்போது , இனித் தங்களால் பொறுமை காக்க முடியாதென இந்திய முக்கிய ராசதந்திரி ஒருவர் கூட்டமைப்பிடம் கூறியதாக ஒரு தகவல் உண்டு. இந்த 13 விவகாரத்திலும் 'பொறுமைக்கும் எல்லை உண்டு' என்கிற கதையை மீண்டும்  சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை.
 
இது இவ்வாறு இருக்க,மணலாறு வெலிஓயாவாகி,  அநுராதபுர மாவட்டத்தில்  சிங்களக் குடியேற்றத்தால் அது செழுமை பெற்று, தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் 5 பிரதேச செயலாளர் பிரிவோடு ஆறாவதாக இணைக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் இவையெல்லாம் சட்டபூர்வமாகச் சாத்தியமானது.
 
மாகாணசபை அதிகாரங்களும் இதனைத் தடுக்க முடியாது.
 13 வது திருத்தச் சட்டத்தின் பலவீனமான பக்கங்களுள் இதுவும் ஒன்று.
 
சிலரின் கருத்தின்படி ,புலிகளால்தான் இந்த சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றால்,இப்போது அதனைப் புரிந்து கொள்வதாக கூறும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?.
 
ஒன்று.. பிராந்திய வல்லரசின் அல்லது பூலோக வல்லரசின் நலன்களுக்கு இசைவாகச் சென்று பேரினவாத ஆட்சியாளர் தருவதைப் பெற்றுக்கொள்வதா? அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களோடு இணைந்து உரிமைக்காகப் போராடுவதா?.
 
 இதைவிட வேறு மார்க்கம் இருந்தால் அதனை  மக்களுக்குச் சொல்வதே கருத்துருவாக்கிகளின் கடமை என்று நினைக்கிறேன்.
 
-இதயச்சந்திரன்

0 Responses to 13 பிளஸ் + 13 மைனஸ் = பூச்சியம் [௦] - இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com