Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சம உரிமைகளுக்கான நூறாண்டுகாலப் போராட்டத்தின் அடைவுகளை, முழு உலகமும் நினைவுகூர்ந்து கொண்டாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய சர்வதேசப் பெண்கள் தினத்திலே, திடமும், வலிமையும் துணிச்சலும் கண்ணியமும் கொண்ட பெண்கள் சமூகத்துடன் இணைந்திருப்பதில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

அதுமட்டுமன்றி உலகின் சில பகுதிகளில் இன்னமும் சமத்துவம், நீதி, விடுதலை வேண்டிக்காத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் விடியல் கிட்டவேண்டும் என்ற நம்பிக்கைதரும் செய்தியையும் உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் என்றவகையிலும் அந்த அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையிலும் இலங்கையில் தமிழ் பெண்களின் உண்மை நிலை தொடர்பான விளக்கங்களை இன்றைய மகளிர் தினத்தின்போது சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டு வருவது எனது முதன்மைக் கடமையாகும்.

தமிழ்மக்களுக்கு எதிரான நெடுங்கால இராணுவ முயற்சிகளில் தாம் வெற்றிகண்டுவிட்டதாக இலங்கை அரசினால் 2009ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடுமையும் மூன்று இலட்சங்களுக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டதும் இன்னும் பல்லாயிரம் மக்கள் காணாமற் போனதும் தமிழினம் கண்ட மாபெரும் துன்பியல் நிகழ்வுகளாகும்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மனிதப் பேரவலத்தையும் இன அழிப்பையும் உலகின் ஜனநாயகம் பேசுகின்ற அனைத்து நாடுகளும் மௌனிகளாகவே பார்த்துக்கொண்டிருந்தன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இருபத்தியொரு மாதங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும், இராணுவ மயப்படுத்தப்பட்ட, அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்மக்களின் வாழ்க்கை நிலை தொடர்கின்றது.

கடத்தல், அநியாயப் படுகொலைகள், துன்புறுத்தல்கள், கற்பழிப்பு போன்ற வன்முறைகளில் பெண்களும் குழந்தைகளும் முதன்மை இலக்குகளாக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில், துணை ஆயதக்குழுக்களால் படையினருக்கான விபச்சார வலயங்கள் நடாத்தப்படுவதாக 2010ம் வருடம் டிசெம்பர் மாதத்தில் UK Guardian அறிக்கையிட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் channel 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டிருந்த காணொளிக்காட்சியில் சோபனா என்கின்ற தமிழ்ப்பெண் மிகமோசமான முறையில் துன்புறுத்திக் கொலைசெய்யப் பட்டிருந்தாள். ஒரு குழந்தைக்குத் தாயான இருபத்தியேழு வயதேயான தமிழ்ப் பத்திரிகையாளரான அந்தப்பெண் நிர்வாணமாக்கப்பட்டு கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். சோபனாவுடன் இணைந்து பணியாற்றிய உசாலினி என்பவர் கொடூரமாகக் கொலையுண்டதிலிருந்து தமிழ்ப்; பெண்கள் எந்த வயதினராயினும் சிறீலங்;கா அரசபடைகளின் கைகளில் பாதுகாப்பாக வாழமுடியாது என்பது உறுதியாகின்றது.

மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் Brad Adams அவர்கள், மே 2009ம் ஆண்டில் நிகழ்ந்த இறுதிக்கட்டப்போரின் போது சிறிலங்கா இராணுவம் போர்க்கைதிகளை விசாரணைகள் எதுவுமின்றிக் கொலை செய்துள்ளார்கள் என்பது இப்போது கிடைக்கப்பெற்;றுள்ள சான்றுகளின் அடிப்படையில் தெளிவாகியுள்ளது என்றும், இத்தனை தெளிவான ஆதாரங்களின் பின்னரும் இப்போர்க்குற்றங்களை இலங்கை அரசாங்கம் விசாரிக்கத் தவறி உள்ளதனால் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளின் அவசியம் மேலோங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய மனித உரிமைகள் அவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதன்படி, சிறிலங்காவில் வன்செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்நாட்டின் ஊழலும் அநீதியும் மிகுந்த சூழலில் சட்டத்தின் பிடியிலிருந்து எப்போதும் இலகுவாகத் தப்பிக் கொள்ளமுடிகிறது எனக்கூறியுள்ளது. பெண்கள் மீதான வல்லுறவு சிறிலங்காவில் குற்றச்செயலாக வரையறுக்கப்படாத இன்றைய நிலையில், பெண்ணினம் அந்நாட்டின் நீதித்துறையில் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்களாக ஆழ்ந்த வடுக்களைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் இலங்கை அரசினால் இரகசியமான முறையில் தடு;த்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் பெண்போராளிகள் தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சர்வதேச மரபுகளின்படி போர்க்கைதிகளின் விபரங்களை வெளியிட வேண்டிய பெரும் பொறுப்பிலிருந்து சிறிலங்கா இன்றுவரை தவறிக்கொண்டே இருக்கின்றது.

சிறிலங்காவில் நிகழ்ந்து வந்த நீண்ட யுத்தத்தின் பெரும் பழுவினைப் பெண்ணினம் இன்னும் பல வழிகளில் தாங்கி வருகின்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தில் இருந்து பிழைத்தவர்களிடையே எண்பத்தியொன்பதாயிரம் விதவைகள் இருப்பதனையும் அவர்களில் அரைவாசிக்கு மேலானோர் முப்பது வயதிற்கு உட்பட்ட தாய்மாராகவும் தமது குடும்பங்களையும் அதற்குமப்பால் தம் கூட்டுக்குடும்பங்களையும் காப்பாற்றும் பெரும் சுமையினைத் தாங்கி வருகின்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அதேவேளை வடக்குக்கிழக்கின் பெரும்பான்மையான நிலங்களை அரசபடைகள் பறித்தெடுத்து வருவதானாலும் சாதாரண நாட்கூலி வேலைவாய்ப்புக்களும் இவர்களுக்கு இல்லாத நிலையில் அவர்களது குழந்தைகள் அடிப்படை உணவு கல்வி என்பன மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர்.

கொடூர யுத்தத்தினால் ஆதரவற்றவர்களாக உருவாக்கப்பட்ட தழிழ்ப்பெண்கள் ஆறுதலும் ஆதரவும் வழங்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கு உதவப்பட வேண்டிய இந்நேரத்தில் தொடர்ந்தும் வன்முறைக்கும் அநீதிக்கும் மத்தியில் வாழவேண்டியுள்ளது மிகுந்த வேதனையைத் தருகின்றது.

எனவேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலகப் பெண்கள் தினமான இன்று சிறிலங்காவில் நீதியும் அமைதியும் பாதுகாப்பும் வேண்டிக் காத்திருக்கும் தமிழ்ப்பெண்களின் சார்பில் உரத்துக் குரல் கொடுக்குமாறு இவ்வுலகின் மேம்பட்ட தேசங்களுக்கும் மக்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.

அதுபோலவே மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையம் பெண்களின் உரிமைமீறல்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா அரசாங்கத்தினையும் போர்க்குற்றங்களை மறைத்துக்கொண்டு பெரும் பதவிகளில் இன்றும் உலவிவரும் குற்றவாளிகளையும் சட்டத்தின்முன் நிறுத்தும் வரை அயராது உழைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த நூறு ஆண்டுகளாகப் பெண்ணுரிமை இயக்கம் வென்றெடுத்த சாதனைகளை இன்று கொண்டாடி மகிழும் அதேவேளையில் சிறிலங்காவில் வாடி வதங்கும் தமிழ்ப் பெண்களையும் உலகின் பல்வேறு பகுதிகளில் அடக்குமுறையில் சிக்கித் தவிக்கும் அனைத்துப் பெண்களையும் மனதில் நிறுத்தித் தொடந்தும் போராடுவோமாக.

திருமதி பாலாம்பிகை முருகதாஸ்
பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

1 Response to அடக்குமுறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பெண்களை மனதில் நிறுத்தி தொடந்தும் போராடுவோம்

  1. pennadimai theerumattum mannadimai theerathe... mundasukaviyin vaarthaigal.. kavanikkapada vendiya neram... urimaikku kural koduppor kaiyil edukkavendiya aayutham...

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com