Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது பலம் அழிந்து விட்டது. அழிக்கப்பட்டு விட்டது என அரசாங்கம் கூறுகின்ற போதும் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே ஆதரித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக முசலி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காண அறிமுகக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் மன்னார், அரிப்பில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது பலம் அழிந்து விட்டதாகவும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் எமது தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாது என தெரிவித்தார். தமிழ் மக்கள் கொள்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றார்கள். தற்போது உள்ளுராட்சி சபைத்தேர்தல் வந்துள்ளது. சகல சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

ஆனால் எமது மக்களை தேர்தல் காலங்களில் அமைச்சர் ஒருவர் கதிரைகளுக்கும், தையல் மெசினுக்கும், சைக்கிள்களுக்கும், சாராயப் போத்தல்களுக்கும் அடிமையாக்கி வருகின்றார். இதனை யாவரும் அறிந்த விடயமே.

இது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னத்தைச் செய்கின்றது? எதனைச் செய்கின்றது என அமைச்சர் கேட்கின்றாராம். அப்படியானல் எதிரணியில் எங்களை அனுப்பிய மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றாரா அந்த அமைச்சர்?

வாழையடி வாழையாக தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் இன்னும் விலை போகவில்லை. போகவும் மாட்டோம்.

எமது மக்களுக்காக குரல் கொடுத்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க, அரசிற்கு அழுத்தத்தினை கொடுக்க நாங்கள் பின்னிற்கப் போவதில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அமைச்சருக்காக வாக்குக்கேட்டு அலைந்து திரிந்தார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றித் திரிந்தார்கள்.

தற்போது அவர்கள் எவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சர் தனது உறவுகளுக்கு மன்னார் அரச போக்குவரத்து சேவையில் (டிப்போ) வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். அமைச்சர் தனது இன யுவதிகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தவில்லை. ஆனால் எமது யுவதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அபிவிருத்தி வேலை வாய்ப்பு என்ற போர்வையில் அமைச்சர் தமிழ் மக்களை அடிமைகளாக்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால் தேர்தலின் பின் ஒன்றும் செய்வதில்லை. அமைச்சர் ஒற்றுமையினை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமம் காணாமல் பேயுள்ளது. அக்கிராமம் தான் முள்ளிக்குளம் கிராமம். அக்கிராம மக்கள் அகதிகளாக தெருவில் உள்ளனர். இக்கிராம மக்களை மீள் குடியேற்ற எவ்வித முயற்சிகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.

போலியான தேசியவாதத்துடன் சில தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் முகத்திரைகள் இத்தேர்தலில் கிழிக்கப்படும்.

வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் உணர்வாளர்கள் தங்களின் மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நகர சபையினையும், பிரதேச சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றும்.என தெரிவித்தார்.

மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சிவகரன், சட்டத்தரனி சிராய்வா மற்றும் முசலி பிரதேச சபை வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to கூட்டமைப்பை ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com