Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க - செந்தமிழன் சீமான்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு – எப்போதும் கடைப்பிடிக்கும் சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.

இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களும் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். தங்களை விடுவிக்கக்கோரி இவர்கள் பல முறை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஐயத்தின் பேரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருந்தது.

சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள், இல்லையேல் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எம் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத்தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.

அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்புகின்றனர். அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர்.

இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் அரசு பெரிதாக அசைந்து கொடுக்கவில்லை.

ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்களில் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா?

தமிழகத்தின் முதல்வராக 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 Responses to சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com