சிறீலங்காவின் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்பான செய்திகள் வெளிநாடுகளில் நாளுக்கு நாள் தினச் செய்தியாக பரவி வருகிறது. அதேவேளை தற்போது கோடை விடுமுறைக்காக சிறீலங்காவின் வடபுலம் சென்று திரும்புவோர் இராணுவத்தின் கெடுபிடிகள் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களில் கூறப்படுவதுபோல இல்லை என்றும் சிறிது தளர்வாகவே காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய தளர்வு தேர்தல் முடியும்வரை அரசு போடும் நாடகம் என்று அங்குள்ள மக்கள் கூறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
பேருந்து வண்டிகளில் இருந்து இறக்காமலே சில இடங்களில் சோதனை இடப்பட்டதாகவும். இராணுவம் அங்காங்கு அவதானித்தபடி நிற்பதாகவும் மற்றப்படி தொல்லைகள் தரவில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும் உள்ளுராட்சி தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் கவலை தருவதாகவும், பெரும்பாலானவர்கள் முற்றிலும் தகுதியற்ற வேட்பாளர்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் சிறீலங்காவின் இராணுவ நெருக்கடிகளை தளர்த்துவதற்கான முன்னுதாரணங்களை இதுவரை தமிர்கள் முன்வைக்கவில்லை. இன்று ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள பமியான் மகாணத்தின் அதிகார மாற்றம் சிறீலங்கா இராணுவத்தை விலத்தும் கோரிக்கைக்கு புதிய உதாரணமாக உள்ளது. கூட்டமைப்பினர் இந்த உதாரணத்தை சற்று உரக்கப் பேச வேண்டும்.
ஆப்கானின் ஏழு பாரிய மாநிலங்களில் முதலாவது மாநிலமான பாமியானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற, இன்று ஆப்கான் அரசின் படைகள் அப்பகுதியை பொறுப்பேற்கின்றன. வரும் வாரங்களில் மற்றைய ஆறு மாநிலங்களும் படிப்படியாக ஆப்கான் படைகளிடம் கைமாறும்.
இந்த பமியான் மாநிலம் முதலாவதாக கைமாற என்ன காரணம் என்பதே இங்கு முக்கிய கேள்வியாகும். இந்த மாநிலத்தில் வாழும் மக்கள் தாமே நகர பாதுகாப்பு குழுக்களை அமைத்து சட்டம் ஒழுங்கை பேணி வந்தார்கள். எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளோ அசம்பாவிதங்களோ தமது பகுதியில் நடைபெறாது தடுக்கும் பொறுப்பை மக்களே ஏற்றிருந்தார்கள். ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு ஒழுங்கையும், ஒவ்வொரு வீடும் மக்கள் குழுக்களால் கண்காணிக்கப்பட்டன. இதனால் தலபான்கள் உட்பட, நேட்டோ படைகளும் அங்கு போக வேண்டிய தேவை ஏற்படவில்லை.
மக்களே நகரங்களின் பாதுகாப்பு பொறுப்பை எடுத்துக் கொண்டால் அங்கு இராணுவத்துக்கு வேலையில்லை. சிறிய படையணி அவசர கண்காணிப்பிற்கு வெகு தொலைவில் இருக்கும். மற்றப்படி இயல்பு வாழ்க்கை சாதாரணமாக நடைபெறும். அதகார மாற்றத்திற்கு அதுவே சரியான பாதை என்பதை ஆப்கானின் பமியான் மாகாண மக்கள் மேலை நாடுகளுக்கு சரியாக எடுத்துரைத்துள்ளார்கள். பாலஸ்தீனம் உட்பட சிக்கலான பகுதிகளில் தீர்வை வழங்க வழிதெரியாது தடுமாறும் மேலைநாடுகளுக்கு சரியான உதாரணத்தை காட்டியுள்ளார்கள். உலக அரசியல் அறிஞர்களால் விளங்க முடியாத விடயத்தை விளக்கியுமுள்ளார்கள்.
நேற்றைய அலைகள் கட்டுரையில் பாராளுமன்றத் தேர்வுக்குழு, தீர்வுத்திட்டம் என்ற அர்த்தமற்ற பேச்சைவிட இராணுவத்தை அகன்று செல்லும்படி கேட்பதே பொருத்தமானது என்று எழுதியிருந்தோம். இன்று அதற்கான நல்லதோர் உதாரணம் ஆப்கானில் கிடைத்துள்ளது. ஆகவே அதிகாரப் பகிர்வை மேலிருந்து கொண்டுவராமல் கீழிருந்து கொண்டுவரும் முயற்சியில் இறங்க வேண்டும். மக்கள் கையில் இயல்பான அதிகாரம் போனால் இனப்பிரச்சனை தானாக சரியான பாதையில் நகரும்.
மக்களை ஆடுமாடுகளாக வைத்திருக்கும் இராணுவமும், ஆயுதக் குழுக்களும், அடாவடிப் பேர்வழிகளும், ஆயுதம் தாங்கிய மற்றயவர்களும் உலகத்தை இலகுவாக ஏமாற்றலாம். அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு இலகுவாக விலை போகலாம். இன்றைய தகுதி குறைந்த உள்ளுராட்சிசபை வேட்பாளர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்கலாம். ஐ.நா செயலர்கூட பதவிக்காக தடம் மாறலாம். ஆனால் எல்லோரையும், எல்லாவற்றையும் தினசரி அவதானித்துக் கொண்டிருப்பவர்கள் மக்களே. ஆகவே மக்களிடமிருந்தே யாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும்.
யாழ். குடாநாட்டின் ஒவ்வொரு ஒழுங்கையும் மக்களால் கண்காணிக்கப்படும் மக்கள் குழுக்களை அமைத்தால் இந்தியாவும், இலங்கையும் புலி வருகிறதென பூச்சாண்டி காட்ட வேண்டிய தேவை வராது.
அலைகள் தென்னாசிய விவகாரப் பிரிவு. 18.07.2011



0 Responses to ஆடும் மாடும் ஆமியும் மனிதரும்