மர்ம மனிதர்களின் தொல்லையினைக் கண்டித்து இன்று காலை முதல் மு.ப.11.00மணிவரை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குறிஞ்சாமுனையில் பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மு.ப. 11 மணிவரை வீதிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இரவில் இனந்தெரியாத மர்ம மனிதர்கள் வருவதாகவும் வீடுகளுக்குள் புகுவதாகவும் பெண்களை குறிவைத்து பலாத்காரத்தில் ஈடுபட முயற்சிப்பதாகவும் இதனால் தாம் அச்சத்துடன் வாழ்வதாகவும் இரவில் நித்திரை கொள்ள முடியதுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிப்பதாகவும் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோரிடம் தங்களுக்கு வவுணதீவுப் பொலிஸ் மீது நம்பிக்கையில்லை எனவே பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கைத் தீவில் மர்ம மனிதனுக்கு எதிராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
பொலிஸாரே இரவில் தமது வீடுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலழித்த பாராளுமன்ற ஊறுப்பினர்கள் பொலிஸாரே பொதுமக்களின் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களே பாதுகாக்க வேண்டும்.
பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. எனவே பொலிஸ் நிலையத்தை அகற்றுவதற்கு பதிலாக இப்போது இருக்கும் பொலிஸாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோர முடியும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொது மக்கள் தற்போது சேவையில் உள்ளவர்களை இடமாற்றி பொறுப்பு வாய்ந்த தமிழ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிர்வு
0 Responses to தமிழர் தாயகப் பகுதிகளில் வெடிக்கும் போராட்டங்கள்!