யுத்த குற்றத்திற்காக சிறிலங்கா அரசு பகிரங்கமாக விசாரிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
நாகர் கோவில் பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:-
ஐ.நா. குழுவும் அதனைத் தான் வலியுறுத்தியுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கை தமிழர் நலனில் எந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும். இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கச்சத்தீவு உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சிறிலங்காயை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு பல்வேறு நிலைகளில் தோல்வி கண்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசால் இயலவில்லை. இந்திய பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வேலை இல்லா திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு தழுவிய அளவில் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது என்றார்.
0 Responses to சிறிலங்கா அரசை பகிரங்கமாக விசாரிக்கப்பட வேண்டும்: டி. ராஜா