தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது குறித்து எவரும் இதுவரை கவலைப்பட்டதாகவோ கரிசனை கொண்டதாகவோ இல்லை. இலங்கையில் கடந்த 60 வருடகால அரசியல் வரலாறு மாத்திரமல்ல இன்றும் அதே நிலைதான்.
தென்னிலங்கையின் அரசியல் சக்திகள்? என்ன நினைக்கின்றனவோ? எத்தகைய நிகழ்ச்சி நிரலைக் கொண்டு நடத்துகின்றனவோ அந்த போக்கிற்கேற்பவே தமிழ் மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்க இந்த சக்திகள் முனைகின்றன.
தமிழர்களின் உள்ளக்கிடக்கை என்ன? அவர்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதெல்லாமே இரண்டாம் பட்சம் தான். இத்தகைய போக்கு நீடிக்கும்வரை தமிழர் விவகாரம் தீர்க்கப்படாத ஒன்றாகவே தொடர்ந்திருக்கும்.
உள்நாட்டின் நிலைதான் இதுவென்றால் சர்வதேச அரசியல் தலைமைத்துவங்களும் இந்தியாவும் தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை என்ன? அவர்களின் அரசியல் அபிலாஷை என்ன? என்பவற்றுக்கப்பால் தத்தமது நிகழ்ச்சி நிரல்களுக்காகக் தமிழர் விவகாரத்தை வைத்து பந்தாடிக்கொண்டிருக்கின்றன.
கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாலாம் திகதி வரை புதுடில்லியில் இருந்த வேளையில் கூட பெரும்பான்மை சிங்கள ஊடகவியலாளருடன் இணைந்து ஒரு சில தமிழ் ஊடகவியலாளர்களும் வடக்கு, கிழக்கில் போர் முடிவுடன் மக்கள் பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ்கின்றனர், சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்ற வகையிலான கருத்துகளையே புதுடில்லியில் முன் வைத்தனர். தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அபிவிருத்தியே. அதிகாரப் பரவலாக்கல் அல்ல என்றெல்லாம் தகவல்களை அள்ளித் தெளித்தனர்.
ஆனால் தமிழ் மக்களின் அவலங்கள், அரசியல் அபிலாஷைகள் பற்றி என்னால் கூறப்பட்ட விடயங்கள் அரசாங்கத்துக்கெதிரானதென்றும் வடக்கு கிழக்கில் தற்போது உருவாகியுள்ள அமைதிக்கும் வீசுகின்ற வசந்தத்திற்கும் முரணான செய்தியென்றும் சிங்கள பத்திரிகையாளர்களை விட தமிழ்ப்பத்திரிகையாளர்களாலேயே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டேன்.
இதுபற்றிய மோசமான பிரசாரங்களை முன்னெடுப்பதுடன், என்னை அச்சுறுத்தும் பாணியிலும் முன்னகர்த்தப்படுவதாகவும் அறிகிறேன்.
எது எப்படியிருந்தபோதும் புதுடில்லியில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எவருக்கெதிராகவும் குற்றங்களைச் சுமத்தவேண்டுமென்பதற்காக கூறப்பட்டவைகள் அல்ல. தமிழ் இனத்தின் நன்மை கருதி உண்மைகள் வெளிவரவேண்டுமென்ற நோக்கிலேயே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்பதை அரசாங்கத்துக் கெதிரான கருத்துக்களாக அர்த்தப்படுத்துவதிலும் அர்த்தமில்லை. இத்தகைய போக்கானது தீக்கோழி மண்ணுள் தலையை புதைத்துக் கொண்டு ஆபத்தை அறியாதிருப்பதற்கு ஒப்பானதாகும்.
முன்பு தமிழர்கள் தரப்பு நியாயங்களை, அபிலாஷைகளை முன்வைத்தால் புலிகளுக்குச் சார்பாகச் செயற்படுவதாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் அர்த்தப்படுத்தப்பட்டனர். ஆனால், இன்று தமிழர் விவகாரம் பற்றிப் பேசினால் அது அரசாங்கத்துக்கு எதிரானது என்று பிரசாரப்படுத்துகின்றனர்.
எனினும் கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 4 ஆம் திகதி வரை யாழ்.குடாநாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்றிருந்தபோது சந்தித்த பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் மக்களைச் சுதந்திரமாக வைத்துள்ளோம் என்று கூறுபவர்களின் கூற்றை மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டுமென்ற செய்தியை மிக ஆணித்தரமாக கூறுவதாகவுள்ளது.
நாங்கள் இலவசங்களை வாரி வழங்கினோம், அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்தோம். ஆனால் சிரித்த முகத்துடன் கும்பிட்டு முகத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இலவசங்களை வாங்க எவரும் முன்வரவில்லையே? அரசு சார்பான தரப்பினருக்கோ அரச தரப்பினருக்கோ மக்கள் வாக்களிக்கவுமில்லையே ? ஏன் என்பதே தெற்கில் இருந்து வருபவர்களின் கேள்வியாகவுள்ளது.
இது குறித்து யாழ்.வாசியொருவர் கருத்து தெரிவிக்கையில்:
இது ஒரு நல்லதொரு ஆரம்பம். நல்ல கேள்வியும் கூட. இதனை வைத்துக் கொண்டு தென்னிலங்கை சக்திகளும் ஆட்சியாளர்களும் கேள்விக்கான பதிலை தேடட்டும். அவர்கள் கூறுகின்றது போல் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் தேவையான இலவசங்களும் வழங்கிய பின்பும் ஏன் மக்கள் மகிழ்ச்சியாக இல்லையென்பது முக்கியமானதல்லவா''? என்று கூறிய அவர்
மக்கள் சுமந்துள்ள வலி, துன்பம், இழப்புக்கள் போன்றவற்றிற்கு பொருள் ரீதியாக ஈடுகட்ட முடியுமா? பொருள் ரீதியாக ஈடுகட்ட கூடிய வகையிலான துன்ப துயரங்களையா மக்கள் சுமந்து நிற்கின்றனர்? இதுபற்றி ஏன் தென்னிலங்கை சிந்திக்க மறுக்கின்றது என வினாவெழுப்பினார்.
இன்னுமொருவர் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்:
நாங்கள் சைக்கிள்களையும், சேலைகளையும் கேட்கவில்லை. காணாமல் போன எமது சுமார் 5 ஆயிரம் பிள்ளைகளைக் கேட்டோம். யாராவது பதில் தந்தார்களா'' என்று வினா எழுப்பினார்.
இன்னுமொருவர் அதிகார பரவலாக்கலையே மேற்கொள்கிறோம் என்று கூறினார். அந்த அதிகார பரவலாக்கல் எங்கே? நாம் படைத்தரப்பு ரீதியிலான நிர்வாகத்தை கேட்கவில்லை. நாம் சிவில் நிர்வாகத்தையே எதிர்பார்த்து நின்றோம். ஆனால் இன்று நடப்பதென்ன? என்ற கேள்வியை எழுப்பினார்.
இன்னுமொருவர் கருத்துத் தெரிவிக்கையில்:
வடக்கு கிழக்கில் எமது வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலந்து கிடந்த பல புனிதமான விடயங்களை இழந்துவிட்டோம். அவையனைத்தும் பாதையில் போட்டுடைக்கப்பட்டு விட்டன.
அனைத்து மக்களும் முப்பது வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் புனிதமான அந்த கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். சமூக வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுக்குள்ளும் இவை இரண்டறக் கலந்திருந்தன. இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு சமூகங்களுக்கிடையே முரண்பாடு காணப்படவில்லை, எழுதப்படாத சட்டமாக எந்த தரப்பைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அது பொதுவாக இருந்தது. மக்கள் அதனை மதித்தனர். கடைப்பிடித்தனர். இன்று அது இல்லை.
ஐயர் கோவிலுக்கு போகும்போது கோயிலுக்குரிய பூஜைகளுடன் புனிதமாக மதிக்கும் பொருட்களையும் எடுத்துச் செல்வார். முப்பது வருடங்களுக்கு முன் எவரும் ஐயரை கேள்வி கேட்பதில்லை. ஆனால் காலங்காலமாக பாதுகாக்கப்பட்டிருந்த அந்த புனிதம் சோதனைச் சாவடியில் பறிபோய்விட்டது. எங்களது வாழ்க்கையும் குடும்ப மட்டத்தில் தந்தையில் இருந்து மகனுக்கும் தாயிடமிருந்து மகளுக்கும் பாரப்படுத்தப்பட்ட புனிதமான பாரம்பரிய நடைமுறைகள் பல வீதிகளில் உடைந்து நொறுக்கப்பட்டு கிடக்கின்றன. சமூகம் கொண்டிருந்த இந்த ஒழுங்கு முறையிலான ஒழுக்க கட்டுப்பாட்டை எவரும் மீற முன்வருவதில்லை. முரண்பாடு காண்பதுமில்லை.
குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பு இருந்தது. எந்த பெண் பிள்ளையும் எந்த மூலையில் நின்றாலும் மறைமுக கண்காணிப்பும் பாதுகாப்பும் இருந்தது. இன்று அது முற்றாக தகர்க்கப்பட்டுவிட்டது.
வீதியில் போகும் ஒரு பெண்ணின் கழுத்திலுள்ள நகையை அல்லது சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினால் கேட்பதற்கு நாதியில்லை. அந்த பெண்ணின் தந்தையோ அல்லது தமையனோ அல்லது கணவனோ இது குறித்து கேள்வி எழுப்பவியலாது.
நகையைப் பறிகொடுத்த பெண்னும் பொலிஸில் முறையிட இயலாது. முறையிடச் சென்றால் அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகளுக்கு அந்தப் பெண்ணால் முகம் கொடுக்கவும் இயலாது அதனை ஜீரணிக்கவும் இயலாது.
எனவே ஒட்டு மொத்த சமூகக் கட்டமைப்பும் பேசாமல் இருந்து விடுவதே மேல் என்று கனத்த இதயத்துடன் அமைதியாக்கி விட்டுள்ளது. இதனை ஆட்சியாளர்களோ, தென்னிலங்கைப் புத்திஜீவிகளோ விளங்கிக் கொள்வதாகவும் இல்லை. அறிந்து கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் இல்லை.
இவைகளுக்கப்பால் முள்ளிவாய்க்காலில் இறுதி நிகழ்வுகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டன. போர் முடிந்து இருவருடங்களல்ல எத்தனை வருடமானாலும் எம் மக்கள் இதில் இருந்து மீள்வதென்பது எதிர்பார்க்க முடியாததாகும். மறுபுறம் சமூகத்தில் இழையோடியிருந்த பண்புகள் தகர்க்கப்பட்டு விட்டன. இத்தகைய தாக்கத்தில் இருந்து மக்கள் மீளும் முன்னே இலவசங்களாலும் அபிவிருத்திகளாலும் மக்களின் மனதை வெல்ல முற்படுவது "செத்த வீட்டில் கல்யாணம் பேசுவதற்கு' ஒப்பானதாகும்.
வடக்கு கிழக்கு மக்களின் உள்ளக்கிடக்கையை கூறும் நிலையில் மக்கள் இல்லை அதேவேளையில் மக்கள் எதை இழந்தோம் என்று கூறமுடியாத நிலையில் உள்ளனர். அதனை அறிந்து கொள்ளும் நிலையில் தென்னிலங்கையுமில்லை. அதனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நிலையிலும் கேட்க வேண்டும் என்ற அறிவும் பெருந்தன்மையும் தென்னிலங்கைக்கு இல்லை.
அரசியல் உரிமை இல்லை. சமூகப் பாதுகாப்பு இல்லை. தனிநபர் பாதுகாப்பும் இல்லை. என்பது தான் பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதங்கங்களாக ஒலித்தன. ஒரு நாடு ஒரு தேசத்திற்குள்
இவைகளை எம்மால் பார்க்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஒருமித்த ஒருமுடிவை எடுத்தோமென்பதை எமது உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்ட பிறகாவது சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.
அபிவிருத்திகளுக்கும் இலவசங்களுக்கும் அப்பால் தமிழ் தேசியத்திற்காகவே வாக்களித்தோம். என்று கூறும் யாழ். குடாநாட்டு மக்கள் தமிழ் தேசியம் குறித்த செய்தியை அழுத்தி உரத்துக் கூறுவதற்காகவே இந்த தேர்தலில் நாம் வாக்களித்தோம் என்றும் தெரிவித்தனர்.
உள்நாட்டு பிரச்சிணைகள் குறித்து தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு தேர்தலை விட மிகத் தெளிவான செய்தியை உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியை விளக்கமாக எவரும் கூற முன்வரவில்லை. மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர் என்றே கூறப்படுகின்றது.
ஆனால் மக்கள் கூட்டமைப்புக்காக வாக்களிக்கவில்லை. கூட்டமைப்பினரை வெற்றிபெறச் செய்வதால் பெரிதாக அவர்கள் சாதித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தொடங்குங்கள் என்றும் ஆணையிடவில்லை.
தமது அரசியல் அபிலாஷை தமிழ்த் தேசியத்தை நோக்கிய தொடர் பயணத்தை கொண்டு செல்வதற்கான தலைமைத்துவ வல்லமை யாரிடம் உள்ளது என்பதே தமிழ் மக்கள் எழுப்புகின்ற கேள்வியாகும். அந்த வல்லமை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்றதா அல்லது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குண்டா? அல்லது புலம் பெயர் தமிழர்களுக்குண்டா?அல்லது உள்ளூரிலுள்ள ஏனைய தமிழ் கட்சிகளுக்குண்டா? இவர்களில் யாருக்கு தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் வல்லமை உண்டு.
ஏனெனில் தமிழர் விவகாரம் சாதாரண உள்ளூர் மட்ட அரசியலில் இருந்து தேசிய ரீதியில் எதிரொலித்து இன்று சர்வதேச அரசியலுக்குள் ஒரு அம்சமாக மாறிவிட்டது. தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை முன்னேடுக்கக் கூடிய ஆளுமை திறமை இராஜதந்திர அணுகுமுறை யாருக்குண்டு என்பதே இன்றைய கேள்வியாகும். மேற்கூறிய தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன.
ஒருவரது செய்கையில் நடவடிக்கையில் மற்றவர் குறைகாண்பதிலும் தமது மகிமை பற்றி பேசுவதிலுமே இவர்கள் குறியாக இருக்கின்றனர். தமிழர் விவகாரத்தில் ஒருமித்த போக்கை கடைப்பிடிப்பதாக இவர்களது செயற்பாடுகளும் பேச்சுகளும் அமையவில்லை. பொதுவில் எல்லோருமே வெறும் வசனம் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதே யாழ் குடாநாட்டு மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை முன்னெடுப்பதாயின் அது ஒரு நிபுணத்துவத்துடனான கைதேர்ந்த அரசியல் கட்சியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்பொழுது தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற ஆளுமை இல்லை என்பதே பெரும்பாலான தமிழ் மக்களின் கருத்தாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடிமட்டத் தொடர்பு அதற்கான அமைப்புகள் சர்வதேச வலையமைப்பு என்பன கட்டியெழுப்பப்படவேண்டும். ஊர் மக்கள் மத்தியில் அடிமட்ட ரீதியான தொடர்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். உள்ளூர் அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும் செயல் திட்டத்தை கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு தனக்கென சர்வதேச வலையமைப்பையும் நாடுகளுடனான உறவையும் மேம்படுத்த வேண்டும். டில்லியிலும் தமிழகத்திலும் கிளைக்காரியாலயங்களை அமைப்பதுடன் உறவுகளையும் தொடர்ந்து பேண வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்து தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பம் போன்று எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பல வியூகங்களை அமைத்து புதிய கட்சிகள் களமிறங்கலாம் "வாய்ப்புகள் பறிபோக சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.
தற்போது வடமாகாணத்தின் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கூட்டமைப்பு இத்தகைய ஒரு நிலையை வைத்துக் கொண்டு புனர்நிர்மாணம் செய்வதும் புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொள்வதிலுமே அதன் வெற்றி தங்கியுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் என்பது ஆரம்பத்தில் உள்ளூர் மக்களால் பரிபாலிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்து உள்ளூராட்சி சபைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு ஏற்பாட்டாளராகவே செயற்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது வரம்பை மீறி உள்ளூராட்சி சபைகள் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்க தொடங்கியுள்ளது.
இந்த ஆதிக்கத்தில் இருந்து உள்ளூராட்சி சபைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் அதன் ஆரம்பத்தை கூட்டடமைப்பு மேற்கொள்ளலாம். வடமாகாணத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இணைத்ததான சம்மேளனத்தை உருவாக்க வேண்டும். இந்த சம்மேளனத்தை பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு ஆலோசனைச் சபைகளை அமைத்து இந்த சபைகளின் உதவியுடன் உள்ளூர் ஆளுகைக்கான அபிவிருத்தி அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து தமது அதிகாரம் சட்டம் குறித்து அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன் நிதியினைச் சேகரித்து உள்ளூர் அபிவிருத்திகளை முன்னெடுக்க வாய்ப்பாக அமையும்.
கூட்டுறவுத் துறைக்கு முன்னோடியாக இருந்து வடமாகாணம் ஆற்றிய பங்களிப்பை மறுப்பதற்கில்லை இது போன்று உள்ளூராட்சி சபைகளுக்கான சம்மேளனத்தை அமைத்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு முன் உதாரணமாக செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு வாய்ப்பை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தாது மீண்டும் ஒரு தேர்தலில் மக்கள் முன் கூட்டமைப்பினர் வாக்கிற்காக வந்து நிற்கத்தேவையில்லை.
உரிமை பற்றி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கக்கூடிய எந்தவித யோசனையும் திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் கடந்த காலங்களைப் போன்று இழுத்தடிக்கும் போக்கினையே அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. இன்றைய நிலையில் "சனல் 4' "தருஷ்மன்' அறிக்கை போன்றவைகளால் தமிழ் மக்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தென்னிலங்கையில் உள்ளது.
ஆனால் இந்த இரு விடயங்களும் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை இலங்கைக்கு ஏற்படுத்துமே தவிர பெரியளவில் பாதிப்பினைக் கொண்டு வராது என்ற நோக்கில் ஆட்சி பீடத்தில் இருப்போர் தமிழர்களுக்கு ஒன்றும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் இறுக்கமாக இருக்கின்றனர். அபகீர்த்தி என்பது ஒரு தற்காலிகமானது என்பதே அரச தரப்பின் எண்ணக்கருவாக உள்ளதென கூறும் யாழ். வாசிகள்
தருஷ்மன் அறிக்கையை அவர்கள் அரசாங்கத்திற்கெதிரான அறிக்கையாக பார்க்கவில்லை. அரசாங்கத்தை தர்ம சங்கடத்திற்குள்ளாக்குவதும் உலக அரங்கிலிருந்து ஓரம் கட்டும் நோக்குடனேயே தருஷ்மன் அறிக்கை உலக அரங்கில் கையாளப்படுவதாக யாழ் மக்கள் கருதுகின்றனர்.
முள்ளிவாய்க்காலின் இறுதிப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை அனைத்து நாடுகளும் அறியும். தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளுமே ஓரணியில் நின்று இலங்கை அரசாங்கத்துக்கு உதவின. இப்பொழுது போர்க் குற்றம் குறித்து பெரிதாக பேசுவதன் அர்த்தம் என்ன?
உண்மையில் "சனல் 4' "தருஷ்மன்' அறிக்கையை வைத்துக் கொண்டு உலக நாடுகள் இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்குவதாகவே கருத வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்க்களத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்கள் உலக நாடுகளின் கைகளில் சிக்கியுள்ளன.
இந்த மனித உரிமை மீறல்கள் செய்வதற்கு துணைபோன இந்தியா குறித்த தகவல்கள் ஆவணங்கள் இலங்கைத் தரப்பிடம் உள்ளன. எனவே தான் இந்தியாவை அனுசரித்துப் போக வேண்டும்.
இந்தியாவின் சொல்லைக் கேட்க வேண்டும் என்ற நிலைப் பாட்டில் இலங்கை இல்லை.
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையை நெருக்குவதன் மூலம் இதற்கு துணைநின்ற இந்தியா குறித்த ஆவணங்களை வெளிக் கொணர்வதே உலக நாடுகள் சிலவற்றின் நோக்கமாக உள்ளது.
இந்த இரு விடயத்திற்குள் இப்போது தமிழர் விவகாரம் சிக்குப்பட்டுபோய் கிடக்கிறது. இந்நிலையில் இராஜதந்திர ரீதியில் தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி செல்லும் ஆளுமையைப் பெற்றுள்ள தமிழர் தரப்பு எது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
இந்தியாவின் சொல்லை இலங்கை கேட்கவேண்டிய நிலை இன்றில்லை: வி.தேவராஜ்
பதிந்தவர்:
தம்பியன்
15 August 2011
0 Responses to இந்தியாவின் சொல்லை இலங்கை கேட்கவேண்டிய நிலை இன்றில்லை: வி.தேவராஜ்