மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள் தமிழனின் நெஞ்சில் இனப்படுகொலை என்றமுள் தைக்கப்பட்டு ஆறாத வடுவை ஏற்படுத்திய நாள். முள்ளிவாய்க்காலில் தமிழன் முடிக்கப்பட்டு விட்டானென்று அறிவிக்கப்ட்ட நாள். இதிலிருந்து ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொண்ட பாடங்களை முள்ளி வாய்க்காலில் ஏற்படுத்திய ஆறாத வடுவைக் கொண்டு இன்று நாம் எதை எப்படி எதிர் கொள்வோம் என்பதுதான். இலங்கை அரசு 2007ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவில் இருக்கும்போது வலிந்து போரை தமிழ் மக்கள் மீது திணித்தது. இதற்கு அடிப்படையாக ஆரம்பத்தில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியமையே! அதாவது மனித நேயத் தொண்டர்களை வெளியேற்றியதன் காரணம் அதியுச்சப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தித் தமிழினத்தை அழிப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டமை வெளிப்படையாகின்றது. தொடர்ந்து மனிதநேயப்பணியாளர்கள் அங்கே இருந்தால் தமது கோரத்தனமான செயல் உறுதிப்படுத்தப்படுமென்ற காரணத்தால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆவர்கள் வெளியேற்றப்ட்டதைத் தொடர்ந்து எமது தாயக மண்ணிலே அரச பயங்கரவாதம் அகலக் கால்பதித்தது.
இப்போர் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நடந்த போரல்ல என்பதும் இதன் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்பதும் உலகிற்கு இப்போது நன்கு விளங்கியிருக்கும். முக்கியமாக இந்தியா தமிழர்களின் துயரத்திற்கு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளதென்பதை யாராலும் மறுக்கமுடியாது. முள்ளிவாய்க்காலின் பேரவலம் இன்று இலங்கையின் இனவாத அரசின் கோர முகத்தை வெளிக்காட்டியதை மட்டுமல்லாமல் இனத்தின் துரோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. உலகநாடுகள் ஒன்று சேர்ந்து தமிழன் பழிவாங்கப்பட்டான். உண்மையில் இலங்கைத் தீச்வில் நடந்த போரை அதன் சுற்றுவட்ட நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் சிறீ லங்காவே பாத்துக்கொள்;ளுமென்றும் கூறிவிட்டார்கள். அவ்வாறு விலகி வேடிக்கை பார்ப்பதுடன் மட்டும் நிறுத்தியிருந்தால் இன்று தமிழனின் நிலை மாறியிருக்கும். ஆனால் மகிந்த அரசிற்குத் தேவையான ஆதரவு ஆயுத உபயோகம் மேலும் படை பயிற்சி உதவிகள் இராணுவ ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி எம்மினத்தின் அழிவுப் பாதைக்கு வழிசமைத்து விட்டார்கள். ஒரு அரசின் முடி சரியக் காரணமாகியிருந்தார்கள்.
உண்மையில் இலங்கைத் தீவில் நடந்தது என்ன அதாவது இரண்டு இனங்களுக்கிடையில் நடந்த போர் தமிழன் தனது தாய் மண்ணை மீட்பதற்காக நடந்த யுத்தம். அதாவது இரண்டு இனங்கள் ஒன்றுசேர்ந்து வாழ முடியாத நிலை அடிமைப்படுத்தப்பட்ட இனம் தனது விடுதலையை நாடித் தொடரப்பட்ட யுத்தம். ஆகவே தமிழினம் தனது உரிமைக்காகப் போராடியதென்பது எல்லா வல்லரசுகளிற்கும் நன்கு தெரிந்த விடயமாகும். இதை மறைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்று கூறிவிட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடவடிக்கையை எல்லோராலும் 'இன்னொரு நாகசாயி கிரோசிமா' ஆனால் அதனையும் மீறிவிட்டது. இதிலிருந்து தமிழன் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதை உலகம் நன்கு அறிந்திருக்கும். முள்ளிவாய்க்காலின் இனவழிப்பு நடவடிக்கையை எல்லோராலும் இன்னுமொரு நாகசாகி கிரோசிமா என வர்ணிக்கப்பட்டது. ஆனால் இவ்வவலம் அதையும் மிஞ்சிவிட்டது. கிரோசிமா நாகசாகி படுகொலையின்போது பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்தும் விளைவை யாரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன் இது இவ்வளவு கொடூரப்பேரழிவை ஏற்படுத்துமென்ற குண்டைத் தயாரித்த விஞ்ஞானிக்கும் தெரியாது, அதை வீசியவர்களிற்கும் தெரியாது. அது இலக்கைத் தாக்கியதன் பின்தான் அதன் விளைவு என்ன என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் வெடிபொருளைத் தயாரித்த விஞ்ஞானி இவ்வவலத்தை நினைத்து நினைத்தே மனநோயாளியாகி உயிரை விட்டார். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம் அதனைத் திட்டமிட்டவர்களிற்கு அங்கு என்ன நடக்குமென்பதை நன்கு அறிந்தே செயற்பட்டார்கள். மனித வாழ்க்கைக்கு ஏற்ற இடமாகாத முள்ளிவாய்க்கால் பகுதியை அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு வலயமாக அறிவித்தார்கள். அரச பயங்கரவாதத்தைத் தீவிரப்படுத்தினார்கள். யுத்தமென்ற பெயரில் ஆயுத முனையில் ஒரு பகுதியினரையும் பொருளாதார ரீதியில் இன்னொரு பகுதியினரையும் கொல்லுவதற்குத் திட்டமிட்டார்கள். அதாவது உணவு மருந்து குடிநீர் வசதி ஆகியவற்றை நிறுத்தி மேலும் மனித அவலங்களைத் தீவிரமாக்கினார்கள். இதனால் மனிதப் பேரழிவுகள் ஆயிரக்கணக்கில் நிமிடத்திற்கு நடத்தப்பட்டது. ஆகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட பலி எடுப்புக்களிற்கு இலங்கை அரசு பொறுப்பாகியது. இது கிரோசிமாவை மிஞ்சிய மனிதப் பேரவலம் ஆகியது. கிரோசிமா விஞ்ஞானி மனநோயாளியாகிச் செத்தார். ராஜபக்சவின் நிலைமை என்னவாகும்? விடை தமிழர்களின் கையில்.
ஆகவே முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்து ஒவ்வொரு தமிழனும் கற்றுக்கொண்ட பாடம் யாதெனில் ஒன்று முள்ளிவாய்க்கால் பேரழிவு, இன்று இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றம் என்ற பெயரில் போர்க்குற்றவாழியாக ஐ.நா கண்டுள்ளது என்பதுடன் சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகத்தையும் வெளியில் கொண்டுவந்துள்ளது. இன்றைய நிலையில் ஒவ்வொரு தமிழனும் அதனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். நாம் தாமதிக்கும் அலட்சியமாக்கும் ஒவ்வொரு விடயமும் எம்மை அழிவுப் பாதையில் இட்டுச்செல்லும். இரண்டாவது முள்ளிவாய்க்காலுடன் தமிழன் கதை முடிந்து விடவில்லை. எமது போராட்டத்தின் நியாயம் இன்று சர்வதேசத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. எமது பாரம்பரிய நிலத்தை மீட்பதற்கு மேலும் ஒரு புதிய யுக்தி தோன்றியுள்ளது. மூன்றாவது இதனால் எமது போராட்டம் மீண்டும் வடிவம் மாறித் தீவிரமாகியுள்ளது. அதாவது ஆயுதப்போராட்டம் அரசியற்போராட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைவாக போராட்டம் வடிவம் மாறியிருக்கின்றதே தவிரப் போராட்ட இலட்சியம் மாறவில்லை. அது ஒருபோதும் தமிழ் மக்கள் மனங்களிலிருந்தும் மாறப்போவதில்லை. எனவே நாம் பாரம்பரிய நிலத்தை எத்தனை வருடங்கள் சென்றாலும் மீட்டே தீரவேண்டும். இது இன்றைய தமிழர்களின் தொடர்ந்து கொண்;டிருக்கும் பிரச்சினையாகும். மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் இன்று முள்ளிவாய்க்கால் எமக்குக் கற்றுத்தந்த பாடங்களாகும்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது ஆரம்பம் முள்ளிவாய்க்காலுடன் தமிழன் கதை முடிக்கப்படவில்லை. அது அவனின் இலட்சியப்பற்றை இன்னும் வீச்சாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிந்து போன முடிவல்ல அது பதிவாகிப்போன வரலாறு. எமது விடுதலைப் போராட்டம் கடந்த காலத்தில் இலங்கைத் தீவில் மட்டும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று உலகமேடையில் பேசப்படும் வாய்ப்பைத் தமிழனுக்குக் கொடுத்துள்ளது.
உலகவரலாற்றுப் புரட்சியில் மனித இழப்பு என்பது கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருக்கும் நிகழ்வல்ல. அது விடுதலையின் குறியீடு, போராட்டத்தின் அடையாளம், ஆக்கத்தின் சமிக்கை என்பதாகும். ஒரு மரணம் இன்னொரு புதிய வெளிச்சத்தை, புதிய சக்தியை உருவாக்கின்றது. ஆனால் வேதனை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஒவ்வொருவரினது வேதனையும் துயரமும் இன்று செத்துப்போன நம்மவர்களின் குருதியில் எழுதப்பட்ட வரலாறுகள். அது இன்று உலகத்தின் காதுகளிற்குச் சென்று எமது சுதந்திரத்தைப் பற்றி ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் என்று கேட்கின்றன. மௌனமாக இருந்த ஐ.நா வின் மனதை உலுக்கியுள்ளது. போராட்டமென்பதும் விடுதலையின் ஆவேசமென்பதும் ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதியில் நடைபெற்றது என்பதை உலகளாவிய ரீதியில் பாரிய பெரும் தீயாக இன்று முள்ளிவாய்க்கால் துயரம் மாறியிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை மகிந்த ராஜபக்ச அரசை போர்க்குற்றவாளியாகக் கண்டிருக்கின்றது. ஆனால் அதற்குரிய தண்டனையைக் கூறவில்லை. ஏனென்றால் இதில் விடுதலைவேண்டும் தமிழினம், இனவழிப்பிற்கு உள்ளானவர்கள் தொடர்பாக என்ன சொல்லுகின்றார்கள் என்பதற்கே ஆகும். அதன் முடிவைத் தமிழர் பக்கம் விட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் ஒவ்வொரு தமிழனும் விழிப்பாக இருக்க வேண்டும். இதில் சிங்களம் பாரிய நெருக்கடியை இன்று சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. மகிந்த ராஜபக்ச தனக்குச் சார்பான நாடுகைளத் துணைக்கு அழைக்கின்றார். மேலும் மேலும் தமிழ்க்குழுக்களை உருவாக்கித் தனக்குச் சாதகமாக அரசியலைக் கொண்டு நகர்த்துகின்றார். அதற்கு எம்மவர்கள் துணைபோகின்றார்கள் விலை போகின்றார்கள். மே-18 இறுதிநாள் நடந்த துயரங்களை அவர்கள் மறந்து விட்டார்கள்.
தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டுதலில் மூன்று பத்தாண்டுகள் கடந்துவிட்ட ஒரு தனியரசின்கீழ் எல்லோரும் வாழ்ந்துள்ளோம். எமக்கென்று நிலம், மொழி, கலாச்சாரம் என்பதுடன் அரசநிர்வாகங்களையும் ஏற்று வாழ்ந்துள்ளோம். அந்த வாழ்க்கையை எமக்கு யாரும் தரவில்லை. எமது இனம் போராடி அமைத்துக் கொண்டது. இலங்கையில் இரண்டு அரசுகள் இருந்ததென்றும் இரண்டு இராணுவங்கள் இனமுரண்பாட்டிற்காகப் போராடினார்கள் என்பதையும் உலகம் அறிந்த உண்மை. வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழீழம் என்னும் நாட்டை உருவாக்கி முப்படைகளுடன் தேசியக் கொடியுடன் வாழ்ந்து வந்ததை இன்று சிங்கள இராணுவம் வலிந்து ஆக்கிரமித்துள்ளது. புலத்தில் போராட்டம் நசுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சங்களை வீச்சாக்கியுள்ளது. எனவே ஐ.நா எமக்களித்த போர்க்குற்றமே இன்றைய தமிழர்களின் ஆயுதமாகும். அதை நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து உயர்த்தவேண்டும். சிறீ லங்காவின் இராஜதந்திர நகர்வுகளை முறியடிக்க வேண்டும். இழந்துவிட்ட அரசை, எமது உரிமைகளை மீளவும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது தேசியக் கொடி வானத்தில் உயரப் பறக்கவேண்டும். இதுவே இன்றைய ஒவ்வொரு தமிழனும் மனதில் நிறுத்திக்கொண்டு எமது இலக்கில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
நன்றி
தாயகத்தில் இருந்து அகத்தீ
மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள்.தாயகத்தில் இருந்து அகத்தீ
பதிந்தவர்:
தம்பியன்
17 May 2012
0 Responses to மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள்.தாயகத்தில் இருந்து அகத்தீ