ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 19-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. 20 ஆண்டுகள் என்பது ஆயுள் தண்டனையைவிட கூடுதலான தண்டனையாகும்.
உலக அளவில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது.
ஒரு பற்றரி வாங்குவதற்கு உதவி செய்த குற்றத்துக்காக பேரறிவாளன் என்ற தமிழ்நாட்டு இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக் கொண்டு, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
15 August 2011
0 Responses to மரணதண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்