Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின அழிப்பை முழுமூச்சாகக் கொண்டு சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றிய கொடூரப் படுகொலை வரலாற்றின் ஓர் அங்கமாக சொஞ்சோலை சிறுவர் காப்பகம் மீது மேற்கொள்ளப்பட்டு 61 சிறுமிகளைப் பலிகொண்டு நூற்றுக்கணக்கானோரைப் படுகாயப்படுத்திய தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளை கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு இன்று நினைவுகூருகின்றது.
இது ஈழத்தமிழராகிய எம் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத ஒரு வடு. இன்றுடன் ஐந்து ஆண்டுகள் கடந்து போயினும் எம் மனங்களில் இன்னும் ஆறாத வலியாய் இது உள்ளது.

படுகொலைகளுக்கு உள்ளாகும் வலிநிறைந்த வரலாற்றின் பக்கங்கள் ஈழத்தமிழர் வாழ்வியலோடு பல தசாப்தங்களாகவே தொடர்கின்றன. தமிழர் என்பதால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உள்ளாவதும், பாடசாலை எனத் தெரிந்தும் பள்ளிச் சிறார்கள் மீது தாக்குதல் தொடுப்பதுவும், வைத்தியசாலைகள் தகர்க்கப்படுவதும், வழிபாட்டிடங்கள் சிதைக்கப்படுவதும், வாழிடங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதும் எம் வரலாற்றில் அவ்வப்போது சிறிலங்காவினால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. முப்படைகளையும் கொண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களம் அரங்கேற்றியது நவீன உலகில் எங்குமே கண்டிராத ஓர் இனவழிப்பு நடவடிக்கை.

முள்ளிவாய்க்காலுடன் முழுமையான சமாதானத்தை எட்டிவிட்டதாக உலகுக்கு எடுத்தியம்பிவரும் சிங்களத்தின் படுகொலைகள் இன்னும்கூட முற்றுப்பெற்றபாடில்லை. மாறாக, போரின் சத்தம் ஓய்ந்த பின்னும் சத்தமின்றி முழுமூச்சாக தமிழர் தாயகமெங்கும் இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொன்டேதான் இருக்கின்றது. எம் இளய தலைமுறை இன்று தமிழர் தாயகமெங்கும் திட்டமிட்டு அழிப்புக்குள்ளாக்கப்படுகின்றது.

இதற்கு இன்று உலகெங்கும் வெளிவர ஆரம்பித்திருக்கும் காட்சிகளே சாட்சிகளாகும். அண்மையில் வெளியாகிய ‘சனல் 4’ இனதும், இந்திய ‘ஹொட்லைன்ஸ் ருடே’ போன்ற தொலைக்காட்சிகளினதும் காணொளிகள் உலகின் கண்களை தமிழர் பக்கம் சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன என்பது எம் இனத்துக்கு சிறிதளவேனும் ஆறுதலை அளித்துள்ளது. சிங்களம் புரிந்துவந்த கொடூரங்களுக்கு இதனூடாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், இனக்கொலை புரிந்த இனவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும், அதன்மூலம் ஈழத்தமிழர்தம் பக்கமுள்ள நியாயம் வெளிக்கொணரப்பட்டு தமிழர்தம் அபிலாசைகள் நிறைவேற வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பு.

எனவே, உலகின் பார்வையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தொடர்ந்தும் உறுதி தளராது எமது தாயகம் நோக்கிய இலட்சியப் பாதையில் நாம் அனைவரும் போராட வேண்டும் என்பதே இன்று எமக்கு காலம் இட்டுள்ள கட்டளை. இதையே இன்று செஞ்சோலைப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டை நினைவுகூருவதனூடாக கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு உறுதியெடுத்துக் கொள்கின்றது.

0 Responses to செஞ்சோலைப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு: கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com