உச்சிதனை முகர்ந்தால் அனைவரும் வரவேற்க வேண்டிய நல்லதோர் முயற்சி!
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் உச்சிதனை முகர்ந்தால் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்களால் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தை நேற்று கேர்னிங் திரையரங்கில் பார்த்த பின்னர் எழுதப்படும் பக்கச்சார்பற்ற அவதானிப்புக்கள் இவையாகும்..
பாராட்டப்பட வேண்டிய விடயங்கள்..
01. இப்படியொரு முயற்சிக்குள் புகழேந்தி தங்கராஜ் துணிச்சலோடு இறங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
02. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை (இரண்டொரு இடத்தைத் தவிர) கதைக்கோர்வை மிக நேர்த்தியாக நகர்கிறது.
03. திரைக்கதை எழுத்தாளராக இல்லாவிட்டாலும், தமிழருவி மணியன் உரையாடலை பிரச்சார நெடி இன்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்.
04. இரண்டு பாடல்கள் அழகாக அமைந்துள்ளன, இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் கவிஞர் காசி. ஆனந்தன் இருவரும் மனதில் மகிழ்வோடு வருகிறார்கள்.
05. சத்தியராஜ், சங்கீதா, சீமான், நாசர், பெண் வைத்தியர், புனிதவதி ஆகிய பாத்திரங்களை சிதைவடையாது அளவோடு பாவித்துள்ளார். அனைவருமே மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.
06. திருநங்கையர், ஆட்டோ சாரதி என்று ஏழை மக்களின் உதவும் நல்ல மன இயல்புகளை வெளிக்காட்டியுள்ளார்.
07. இந்திய சென்சார் சட்டங்களுக்குள்ளால்தான் கதையை நகர்த்த வேண்டும் என்பதைப் புரிந்தால் அவருடைய கதைத் தேர்வு அறிவு பூர்வமானதாக உள்ளது.
08. இடைவேளை வரை பார்வையாளரின் கண்களில் பல தடவைகள் கண்ணீரை வரவழைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
09. புனிதவதி பாத்திரத்தில் தமிழகத்தின் சிறுமி ஒருத்தியை ஈழப் பெண் போலவே காட்டி வெற்றி பெற்றுள்ளார்.
10. போராளிகளுடன் சிறுமிக்கு வரும் பாடல் நன்றாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிறப்புக்கள்:
11. கதாபாத்திரமான புனிதவதி போலீஸ் நிலையத்தில் இந்திய குடியரசு சின்னப் பொம்மையை ஏதோ விளையாட்டு பொருள் என்று எடுக்க, குறுக்கிட்ட சத்தியராஜ் ஐயையோ இது விளையாட்டு சின்னமல்ல என்று அதனுடைய அபாயமான பின்னணியை சொல்லிவிடுகிறார். இந்தியாவை அடையாளம் காட்ட இது போதும்.
12. அமுதன் என்ற நாய்க்கு இருக்கும் மனித நேயம்கூட இல்லாமல் சிலர் வாழ்கிறார்களே என்ற சத்தியராஜ் வேதனை பலருக்கு அடியாக இறங்குகிறது.
13. சிங்கள இராணுவம் குழு முறை பாலியலில் ஈடுபடும் காடையர் கூட்டம் என்று திரைப்படம் கூறியது பழைய செய்தி, ஆனால் அவர்களில் எயிட்ஸ் நோயை பரப்பும் கிருமிகளும் கலந்துள்ளதாக தெரிவிப்பது பிரச்சார உலகிற்கு புதிய செய்தியாகும்.
14. சீமான் போன்றவர்கள் இருந்தால் தமிழ் நாட்டு போலீஸ்கூட நாகரிக மனிதர்களாக மாறும் என்ற செய்தி சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
15. திருநங்கைகளை சரியான முறையில் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
படத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
தற்போது புகழேந்தியின் திரைப்படம் அரைப்பங்கு திரையரங்கை நிறைக்குமளவுக்கு வளர்ந்துள்ளது. அவருடைய முன்னைய காற்றுக்கென்ன வேலி திரைப்படத்துடன் ஒப்பிட்டால் இன்றைய வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளது. அவருடைய அடுத்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பின்வரும் கருத்துக்கள் நட்புடன் முன்வைக்கப்படுகின்றன.
01. திரைப்படத்தைத் தயாரிக்கும்போது ஏற்பட்ட நிதித் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் சமரசம் காண வேண்டி நேர்ந்துள்ளது. ஆனால் திரைப்படம் பார்க்க வரும் ரசிகனுடன் நாம் அந்த சமரசத்தை பேச முடியாது. 100 கோடியில் தயாராகும் தமிழ்ப்படத்திற்கு கொடுக்கும் கட்டணத்தையே அவன் இலட்சங்களில் தயாராகும் படங்களுக்கும் கொடுக்கிறான். எனவே தயாரிப்பில் சமரசம் காணாதிருக்க மேலும் அதிக முதலீடு செய்து தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.
02. திரைப்படத்தின் வர்ணம் சரியாக பொருந்தவில்லை. அதற்கான டிஜிற்றல் இமேஜ் செய்ய நிதி கைகொடுக்கவில்லை. அதனால் மிகச்சாதாரண தொடர் நாடக தரத்திற்கு படத்தின் அவுட்புட் வந்துவிடுகிறது. (உதாரணம்: குண்டு வீச்சு விமானக் கிளிப்)
03. கிராபிக்ஸ் பொருந்தி வரவில்லை, உதாரணம்: தீ காட்சிகள். பிரேம் கோபாலின் பாடலின் பிற்சேர்க்கையின் லைற்றிங் பொருந்தவில்லை. மேலும் சிறந்த நடனக்காரராக இருந்தாலும், பிறேம்கோபாலின் பாடல் பொருத்தமில்லாத இடத்தில் வருகிறது. கதை கிளைமாக்சிற்குள் போன பின்பு ஒரு பாடல் தேவையற்றது.
04. இடைவேளைவரை சிறப்பாக வந்த திரைப்படம் சங்கீதாவின் தாய் வில்லியாக வந்து புகுந்ததும் உறொட்டி பாய்ந்து, தொடர் நாடகம் போல ஆகப் பார்க்கிறது. அந்த இடத்தில் மெல்ல சரிந்த திரைக்கதை மறுபடியும் இறுதிவரை எழுந்து நிற்கமுடியாதளவுக்கு சிரமப்படுகிறது. அதை கிளைமாக்சிலும் நிமிர்த்த முடியவில்லை.
05. திரைப்படத்தின் ரீ ரிக்காடிங்கில் பின்னணி இசை மாஸ்ரரைஸ் பண்ணப்படாமல் எகிறிக் குதித்து குழப்புகிறது. சாதாரண கீ போட்டில் சீரியலுக்குக் கொடுக்கும் பின்னணி இசை திரைப் படத்தின் பின்னணி இசையாக வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது..
06. முதலில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி ரசிகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பின்னர் அவள் கர்ப்பிணியாக இருப்பது பேரதிர்ச்சியாகிறது, இடைவேளை யின்போது அவளுக்கு எயிட்ஸ் என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியாகி ரசிகனை அதி உச்சக்கட்டத்திற்கு கொண்டு போய்விடுகிறது. அதற்குப் பிறகு படத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல இடமில்லாமல் போக, கதைக்கான விறுவிறுப்புப் பற்றாக்குறை ஆரம்பிக்கிறது.
07. கதையை நல்லபடியாக நகர்த்திவந்த தமிழருவி மணியன் எயிட்ஸ் வந்தவுடன் தமிழ் நாட்டுக்கான எயிட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கிவிடுகிறார். அந்த இடைவெளியில் சிங்கள பேரினவாதம் வசதியாக தப்பித்து ஓடிவிடுகிறது. ரசிகனுடைய கவனம் சிதறடிக்கப்பட்டு எயிட்ஸ் நோய்க்குள் வசமாக சிக்குப்பட்டுவிடுகிறது. கடைசியில் புனிதவதியை எயிட்ஸ் கொல்லுகிறபோது அவளை கர்ப்பமாக்கிய சிங்களக் காடையர்களை ரசிகன் அடியோடு மறந்துவிடுகிறான். படத்தின் பிரதான பிரச்சனை எயிட்சாக மாறி படம் முடிகிறது.
படத்தைப் பார்க்கும்போது உள்ளத்தை உறுத்தும் கேள்விகள்:
01. சிறுமியை காப்பாற்றும் நடேசன் இந்திய சட்டங்களின்படி சிறை செல்கிறார். அதே சிறுமியை எயிட்சுக்கு உள்ளாக்கிய கொடியவர்களுக்கு இந்திய சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறது..?
02. இறந்துபோன புனிதவதி பெற்ற எயிட்ஸ் சிறுமியுடன் வீடு திரும்புகிறாள் சங்கீதா அவளுடைய குழந்தையை இந்திய சட்டம் என்ன செய்யப்போகிறது.. ?
03. ஈழத் தமிழன் படும் அவலத்தைப் பாருங்கள்… இதைக்கேட்க நாதியில்லையா..? என்ற அவலத்துடன் படம் முடிகிறது. ஆனால் ஒரு கதையை பதிவு செய்யும்போது அதற்கு ஒரு நல்ல முடிவு இருக்க வேண்டும். இதற்கு என்ன பதிலடி என்ற ரசிகனின் கேள்விக்கான பதிலை தரவில்லையே என்ற ஆதங்கம் வருகிறது.
04. படம் முடியும்போது திரையரங்கில் இருந்து யாரோ ஒரு ரசிகர் மனதுக்குக் கஷ்டமாக இருப்பதாக சொன்னது காதில் கேட்டது. உணர்ச்சியும், உணர்ச்சிக்கவியும், கண்ணீருமல்ல, அறிவார்ந்த ஒரு பதிலுடன் கதை முடிந்திருந்தால் அந்த ரசிகரின் குரல் சங்கடப்பட்டிருக்காது. அந்த ரசிகரின் குரலே திரைப்படத்திற்கான சரியான பொது மக்கள் விமர்சனமாகும்.
இப்படியான மனதுக்குக் கஷ்டமானநிலையில் முடிவடையும் திரைப்படங்களுக்கு பல நல்ல முடிவுகளை ஏற்கெனவே பல இயக்குநர்கள் வைத்துள்ளார்கள்.
அ.) கதை முடிவில் பொறுக்க முடியாத ஒரு சிறுவன் வீதியில் கிடக்கும் கல்லை எடுத்து அதிகார வர்க்கத்தின் சன்னலில் எறிந்து அதை உடைப்பான்.
ஆ.) நிலத்தின் அடியில் இருந்து இறந்துபோன போராளி ஒருவனுடைய கை வெளியே வரும்..
இ.) ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்ட பத்திரிகை ஒன்றை நடேசன் படிப்பது போன்ற காட்சியுடனாவது படத்தை முடித்திருக்கலாம். அதை விடுத்து, ஒரு மனித நேயமுள்ளவனை சிறையில் தள்ளி, ஓர் அபலைச் சிறுமியை கொன்று அனுதாபம் தேட வேண்டிய தேவை இல்லை.
இந்திய குற்றவாளியும், சிங்கள குற்றவாளியும் உலக மன்றில் தப்பித்துப் போக தமிழன் மானமிழந்து கண்ணீருடன் கையேந்தி நிற்கக்கூடாது.
தமிழன் தன்மானத்தை நாய்களுக்கு பயந்து எந்த இடத்திலும் கைவிட்டுவிடக் கூடாது. அடுத்த திரைப்படம் தமிழன் விடுதலைக்கான அறிவுப் பொறியை கிளப்ப வேண்டும். சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களாலும், தமிழருவி மணியனாலும் அது முடியும்.
இதையெல்லாம் சொல்லத் துடிக்கிறது மனது..
மாறாக…
மற்றவர்கள் ஒன்றுமே செய்யாதிருக்க புகழேந்தி தங்கராஜ் இதையாவது செய்திருக்கிறாரே என்பதை நினைத்தால், அவருக்கு மரியாதை செலுத்த தலையில் உள்ள தொப்பியை கழற்ற வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை.
மனதார பாராட்டுக்கிறோம்…
உச்சிதனை முகர்ந்தால் அனைவரும் வரவேற்க வேண்டிய நல்லதோர் முயற்சி!
அலைகள் திரைப்பட விமர்சனப் பிரிவு: 09.01.2012
0 Responses to உச்சிதனை முகர்ந்தால் ஓர் ஐரோப்பிய அவதானிப்பு...