ஈரானிடமிருந்து இந்தியா தொடர்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்தமைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் விடுத்துள்ளது.
இது அமெரிக்காவை அவமதிப்பதாகவும், அமெரிக்காவின் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது எனவும் அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி நிகோலஸ் பேர்ன்ஸ் (Nicolas Burns) தெரிவித்துள்ளார். முன்னணி சஞ்சிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள கட்டுரை பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரானை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், ஈரானிடமிருந்து தாம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வோம் என கடந்த வாரம் இந்தியா அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவின் கடந்த மூன்று ஜனாதிபதிகளும் இந்தியாவுடன் கொண்டிருந்த சிறந்த நல்லுறவுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு இது. உலக அரசியலில் முக்கியத்துவமான இந்தியா போன்ற நாடு, இது போன்ற தீவிரமான பிரச்சினையை சர்வதேசம் எதிர்கொள்ளும் போது ஆதரவான செயற்பாட்டை வழங்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் 12% வீதத்தை ஈரானிடமிருந்து இறக்குமதி செய்வதால், இத்தொடர்பை முறிக்க முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை ஈரான் அதிரடியாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதாக ஐரோப்பிய நாடுகள் பல எச்சரித்திருந்த நிலையில், ஈரானே முந்திக்கொண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தம்மிடம் எரிபொருள் கொள்வனவு செய்யும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானிய பெற்றோலிய கூட்டுத்தாபனம் அனுப்பியுள்ள கடிதத்தில், எண்ணெய் இறக்குமதியை நீண்டகாலத்திற்கு தொடர்வதற்கு சம்மதித்து கையெழுத்து போடுமாறும், இல்லையேல் எண்ணெய் வழங்கல் இப்போதே இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



0 Responses to அமெரிக்காவின் முகத்தில் அறைகிறது இந்தியா : நிகோலாஸ் பேர்ன்ஸ்