Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சம்பள உயர்வு கோரியும், தற்போது வழங்கப்படும் வேலைத்தல பாதுகாப்பு வசதிகளை மேலும் அதிகரிக்கக் கோரியும் ஜேர்மனி பிராங்போட் விமான நிலைய ஊழியர்கள் கடந்த வெள்ளியில் இருந்து கடும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சர்வதேச விமான சேவையில் தொடர் தாமதங்களும், பறப்புக்களின் தடையும் ஏற்பட்டு வருகின்றன. இன்று திங்கள் மட்டும் 223 விமானப் பறப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. டென்மார்க் வரவேண்டிய இரண்டு லுப்ற்தான்சா விமானங்கள் பறப்பை நிறுத்தியுள்ளன. இதனால் விமான நிலையம் முழுவதும் பயணிகள் பலத்த சிரமங்களை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளி முறிவடைந்த பேச்சுக்களை மறுபடியும் நடத்த வரும்படி நிர்வாகம் அழைத்துள்ளது. ஆனாலும் வேலை நிறுத்தம் நாளையும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் சுமார் 200 பேர்வரை இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். பேச்சுக்களால் தீர்வை எட்ட முடியாத நெருக்கடி நிலவுகிறது.

ஜேர்மனியை தொடர்ந்து நேற்று ஸ்பானியாவில் பாரிய ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளது. ஸ்பானியாவின் கொன்ஸ்சவேட்டிவ் அரசு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வழி தொரியாமல் பணியாளர்களின் சம்பளத்தை வெட்டுவதிலேயே அதிக நாட்டம் கொண்டுள்ளது. நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் இல்லாத அரசியல்வாதிகள் தமது வாழ்வை தொடர்ந்து சூறையாடி வருகிறார்கள் என்று மாட்றிட் நகரில் நடந்த ஆர்பாட்டங்களில் பங்கேற்ற பேராசிரியர் ஒருவர் ஸ்பானிய அரசை மோசமாக கண்டித்தார். ஸ்பானியாவின் 57 நகரங்களில் இந்த ஆர்பாட்டங்கள் பூகம்பமாக வெடித்து சிதறியுள்ளது.

ஸ்பானியா, ஜேர்மனியில் வெடித்துள்ள ஆர்பாட்டங்களுக்கு இணையான அவலம் தற்போது கிரேக்கத்தில் நிலவுகிறது. கிரேக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ள 130 பில்லியன் யூரோ கடனுக்கான முக்கிய பேச்சுக்கள் இன்று நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோசோன் விதிக்கும் நிபந்தனைகள் நொந்து நூலாகிக் கிடக்கும் கிரேக்கத்தின் மீது மிக மோசமாக உள்ளது. மேலும் இந்த நிபந்தனைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாது என்று அமெரிக்க நிதியமைச்சர் திமோதி சய்ற்னர் கூறினார். இந்த இக்கட்டான நிலை காரணமாக அமெரிக்கா கிரேக்கத்திற்கு உதவத்தயார் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் கையெழுத்துடன்தான் பணம் பட்டுவாடா செய்யப்படப்போகிறது. துணைக்கு போனாலும் பிணைக்கு போகாதே என்பது அமெரிக்காவுக்கு தெரியும். கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மட்டுமல்ல அமெரிக்காவிடமும் மாட்டுப்படப் போகிறது என்பது இதன் பொருளாகும். உலகிற்கு அறிவு புகட்டிய கிரேக்கத்தின் அவல நிலை இன்று சந்தி சிரிக்கிறது.

இது இவ்விதமிருக்க ஐ.நாவின் சர்வதேச படைகளில் 52 பேரை சூடானிய போராளிகள் குழுவொன்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் தமது பகுதிக்குள் நுழைந்து உளவு பார்க்க முற்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் ஐ.நா – ஆபிரிக்க யூனியன் இரு தரப்பும் இணைந்த படைப்பிரிவாகும். அமைதிப் பணிகளுக்கு போன இவர்கள் சூடானிய உளவுப்பிரிவுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தால் சூடான் ஐ.நா படைப்பிரிவின் தளபதி பதவி இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் தலைவர் ஓமர் கசான் மீது சர்வதேச நீதிமன்று போர்க் குற்றம் சுமத்தியிருப்பது தெரிந்ததே. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

0 Responses to வேலை நிறுத்தங்கள், ஐ.நா படைகள் கைது, கிரேக்கத்திற்கு உதவி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com