ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மார்ச் 22ம் திகதிக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்திற்கே முதன்மையளிக்கப்படும் என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தாலும், அதனை மீண்டும் உறுதி செய்துகொள்ளும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த இறுதிக்கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனவும் தெரியவருகின்றது.
ஜெனிவாக் களத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்ட அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து சென்று உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என்று ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அமெரிக்காவின் பிரேரணை குறித்து எதுவித கருத்துகளையும் வெளியிடாது மழுப்பல் போக்கைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் அமெரிக்கக் குழு தீர்மானித்துள்ளது என்றும், இந்தச் சந்திப்புக்களின்போது அமெரிக்கப் பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுக்கும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஜெனிவாவில் ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் முதல் தினத்திலேயே 22 நாடுகள் கூட்டாக ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஏட்டிக்குப் போட்டியாக இலங்கையும் உப மாநாடுகளை நடத்தியது. இந்நிலையிலேயே அமெரிக்கா இந்த அவசர இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜெனிவா மாநாடு இறுதித் தறுவாயை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் இலங்கையும் ஜெனிவா இராஜதந்திரச் சமருக்கு முக்கிய அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளமையால் ஜெனிவாக் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையிலேயே, இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு எதிரானது எனக் கூறப்படும் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அது ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
அதேவேளை, அண்மையில் சிரிய விவகாரம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை 37 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று நாடுகளே எதிராக வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாக் களத்துக்கு முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 March 2012
0 Responses to ஜெனிவாக் களத்துக்கு முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா!