சனல் 4 வெளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன்னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிலங்காவிற்கு மிக ஆபத்தான தயாரிப்பு…
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார தலைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் போர்க்குற்றவாளிகள் என்று அறுதியாகவும், உறுதியாகவும் வாதிடும் சட்ட பூர்வமான அற்புதமான ஆவணமாக இருக்கிறது.
சிங்கள அரசு எந்தப்பக்கத்தாலும் தப்பியோட முடியாதபடி எங்குமே ஓட்டை வைக்காத சுற்றுமதிலாக உள்ளது.
ஒரு போர்க்குற்ற ஆவணத்தை சர்வதேச சமுதாயம் ஏற்றுக்கொள்ளும்படி எப்படித் தயாரிப்பது என்பதற்கு சில உறுதி செய்யப்பட்ட சர்வதேச நியமங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அமைவாக தயாரிக்கப்படும்போதுதான் ஓர் ஆவணம் சர்வதேச சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அப்படி ஏற்றுக் கொள்ளப்படுவதையே குறியாக வைத்து சட்டபூர்வமான இறுக்கத்துடன் தயாரித்துள்ளார்கள்.
01. ஐ.நாவின் உதவியை வழங்க முடியாது தடுத்து, பாதுகாப்பு வலயம் என்ற போலி வலயத்தை வரையறை செய்து, அங்கு திட்டமிட்ட தாக்குதலை நடாத்தி இனப்படுகொலை செய்துள்ளார்கள் – இதற்கு ஐ.நாவே சாட்சி.
02. உணவு, மருந்து உட்பட அனைத்து வசதிகளையும் திட்டமிட்டே தடை செய்து மாபெரும் மனிதப் பேரவலத்தை விளைவித்து, பாவிக்கக் கூடாத ஆயுதங்களை பாவித்து மக்களை கொன்றுள்ளார்கள்.
03. அதிபர் மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ பேச்சாளர் ஆகிய மூவரும் கூறும் அப்பட்டமான பொய்கள் காரண காரியங்களுடன் அம்பலப்படுத்திப்படுகின்றன. மூன்று இலட்சம் பேர் உணவின்றி, நீரின்றி குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டு கிடக்க, வெறும் ஐயாயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்ற ராஜபக்ஷவின் வாய் கூசாத அப்பட்டமான பொய் அம்பலப்படுத்தப்படுகிறது. அவர் ஐ.நா தொடக்கம் ஆற்றிய பொய்களை வரன்முறைப் படுத்துகிறது.
04. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா உட்பட டேவிட் மெலிபான்ட் வரை சிறீலங்கா அரசின் இனவாத அழிப்பை ஒப்புக் கொள்வது தெட்டத்தெளிவான ஆவணமாக எழுதிச் செல்லப்பட்டுள்ளது.
05. பாதுகாப்பு வலயம் என்பது படுகொலை வலயம் என்பதை அந்த வலயம் குறுகிச் செல்ல செல்ல உணர முடிகிறது. கடைசியாக முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் அடக்கப்படுகின்றபோது அங்கும் தாக்குதல் நடாத்தப்படுகிறது. நிறைவாக காயப்பட்டவர்களையும், சரணடைந்தவர்களையும் யாதொரு குழப்பமும் இல்லாமல் படுகொலை செய்து முடிக்கிறது சிங்கள அரசு. அவர்களுடைய திட்டவட்டமான ஒரேயொரு நோக்கம் தமிழின அழிப்பு மட்டுமே என்பதை சர்வதேச சமுதாயத்தின் முன்பாக தெளிவாக பதிவு செய்கிறது இந்த ஆவணம்.
06. இந்தப் படை நடவடிக்கையில் பங்கேற்ற சர்வதேச போர்க்குற்றவாளிகளான சிறீலங்காவின் கட்டளை தளபதிகளில் ஒருவர் ஐ.நாவிலும், இன்னொருவர் இங்கிலாந்து இலங்கை தூதரகத்திலும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மிகப்பெரும் கொலைஞர்கள், சர்வதேச குற்றவாளிகள் எப்படி தப்பான இராஜதந்திரிகளாக நடமாட விடப்பட்டு, சர்வதேச சமுதாயத்தை அவமதித்துள்ளார்கள் என்றும் காட்டுகிறது.
07. இந்த நிகழ்வுகளின் கூட்டுப்பங்காளி இந்தியா என்பதை வசனங்களால் சொல்லாமல், மகிந்தவின் முன்னாள் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் இந்திய பிரதிநிதிகளான மலையாள நாராயணன், மேனன் ஆகிய இருவரையும் காட்டுகிறார்கள். அந்த இரண்டு பேர் போதும் இந்தியாவை அடையாளம் காண.
08. ஆவணப்படங்களில் சாதாரண மக்கள் விரும்புவதுபோல புதிய ஒளிப்படங்கள் குறைவாகவே உள்ளன. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட காணொளி காண்பிக்கப்படுகிறது. ஓர் அரசு போர்க் கைதிகளை கொன்றது குற்றம், அதிலும் குழந்தை போர்க்கைதிகளை கொன்ற கொலைஞனாகவும் நிற்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார்கள். பிள்ளைகளை படைகளில் சேர்ப்பது குற்றம் என்று வாதிடும் சனல் 4, அதைவிட மோசமானது குழந்தைகளை கொல்வது என்று ஒரு படி மேலே போகிறது. பாலச்சந்திரன் படுகொலை மன்னிக்க முடியாத இடத்திற்குள் சிறீலங்கா உயர் பீடத்தை மாட்டியிருக்கிறது.
09. சனல் 4 ன் முன்னைய காணொளி – 1 ற்கு எதிராக சிறீலங்கா வெளியிட்ட மறுப்பு பிரச்சாரத்தின் போலித்தனங்களையும் மறந்துவிடாமல் அம்பலப்படுத்துகிறது. வன்னியில் இருந்தபோது அரசை கண்டித்த வன்னி வைத்தியர்கள், பின் சிறையில் இருந்த பின்னர் பல்டியடித்ததை அப்பட்டமாக வெளியில் போட்டு கிழிக்கிறது. உயிருக்கு பயந்து உண்மை ஊமையாகவில்லை, தடம் மாறியிருக்கிறது இல்லை விபச்சாரம் செய்திருக்கிறது என்பதை இரு தமிழ் வைத்தியர்கள் வாயாலும் அம்பலமாக்குகிறது.
மாபெரும் குற்றவாளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை சனல் 3 இலகுவாக தப்பவிட்டிருக்கிறது..
இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் ஐ.நா பார்க்க வேண்டும், மொத்தத்தில் ஐ.நா ஏமாற்றப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இனி நடக்கக்கூடாது என்று கூறுவது மட்டுமல்ல நடந்த தவறுக்கு ஐ.நாவே பொறுப்பேற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறவில்லை.
ஆனால்..
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பித்தலாட்டமானது என்பதை அம்பலப்படுத்துகிறது..
மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ இருவரும் போர்க்குற்றங்களுக்கு தண்டனை பெற வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று வாதாடியிருக்கிறது.
ஒன்றுமே இல்லாதிருந்த வெற்றிடத்தில் பற்றிக்கொள்ள ஓர் ஆவணமாக வெளிவந்துள்ளது. தமிழ் மக்கள் கருத்தின்றி உறைந்து கிடக்கிறார்கள். ஆனால் இரண்டொரு தினங்களில் இது ஏற்படுத்தப் போகும் தாக்கம் அவர்களை அதிசயப்பட வைக்கும்.
மிக நிச்சயமாக..
இந்த ஆவணப்படம் சிறீலங்காவை பெரும் சிக்கலில் மாட்டும், சிலசில குறைபாடுகள் இருந்தாலும் ஒரு கிரிமினல் சட்டத்தரணியின் வாதம் போல சகல பின்னணிகளையும், சர்வதேச சட்டங்களையும் கற்று அதற்கு அமைவாக குற்றவாளிகளை ஒல்லாந்து கேக் நகரில் உள்ள போர்க்குற்ற நீதிமன்று அனுப்ப வேண்டிய பாதைக்கு வழிகாட்டியுள்ளது.
சனல் 4 ன் இரண்டாவது ஆவணப்படம் போல கடந்த 30 வருட வரலாற்றில் சர்வதேச சட்ட நியமங்களை புரிந்த வேறொரு ஆவணம் வெளிவரவில்லை என்று துணிந்து கூறலாம்..
இது மிகப்பெரிய அதிர்வலைகளை படித்த, அதிகாரமுள்ள தலைவர்கள் மட்டத்தில் ஏற்படுத்தும்..
கனவு மெய்ப்படும்…
அலைகள்
The latest one is very matured and will bridge in carrying the right message to all sects of people, particularly in bringing the hard minds to the right path -in stressing International Investigation on Crimes in Lanka.
arumaiyana kaddurai. unmai ,unmai ,unmai