Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுடில்லி, இலங்கை விவகாரத்தில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையெடுக்கும் என தன்னை சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றின் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் இலங்கை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் ஒரு சேர குரல் கொடுத்ததால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினம் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மனு கையளிப்பு இதனைத்தொடர்ந்து ஞானதேசிகன் எம்.பி. தலைமையிலான தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

இதன்போது பிரதமரிடம் காங்கிரஸ் எம்.பிக்களான சுதர்சன நாச்சியப்பன், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி, பி. விஸ்வநாதன், எஸ். எஸ். ராமசுப்பு, மாணிக் தாகூர், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோர் கையெழுத்திட்ட மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், போரின் போது அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்த பல சர்வதேச, உள்நாட்டு பார்வையாளர்கள் அனைவரும் போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு சரியான செயற்றிட்டத்தை வகுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளன. இதனைக் குறிப்பிட்டுத்தான் அமெரிக்காவும் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா உடன்படிக்கையின்படி, இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுத்தரும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

இலங்கையில் வட கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள நாடு இந்தியா மட்டுமே என்ற உணர்வுடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருப்பதாகக் கூறினார்.

மேலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்ததாக பிரதமருடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன் தெரிவித்தார்.

0 Responses to தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்!: மன்மோகன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com