இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மே மாத நடுப்பகுதி வரை பொறுத்திருக்குமாறு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திலேயே இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுல், வடக்கு மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் , மற்றும் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தனக்கும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்க மார்ச் மாதம் வொசிடங்டனுக்கு வருமாறு, வெளிவிவகார அமைச்சருக்கு ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பை நிராகரித்து நீண்ட காலமாக பதில் அனுப்பாமல் தவிர்த்திருந்தார் அமைச்சர் பீரிஸ்.
ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதியான நிலையில், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்தக் கடிதத்துக்குப் பதில் அனுப்பியதுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து, கொழும்பிலும் வொசிங்டனிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் நேரம் ஒதுக்குவது பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன.
இதனடிப்படையிலேயே, மே மாத நடுப்பகுதிவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசைச் சந்திப்பதற்கு, ஹிலாரி கிளின்ரனுக்கு நேரம் இல்லை என்று இராஜாங்கத் திணைக்களத்தினால் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு மே மாத நடுப்பகுதியில் வொசிங்டன் செல்லப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to பீரிஸை சந்திக்க நேரமில்லை! ஹிலாரி கிளின்ரன் மறுப்பு!