Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் இந்திய அரசு, இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டதன் காரணமாகவே, இன்று வடமராட்சி கடற்றொழிலாளர்கள் மூலம் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் எனும் பெயரில் இந்தியாவிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்திய மீனவர்களின் றோலர் படகுகளினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர்கள், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் பாரிய போராட்டங்களை நடாத்த பொலிஸ் அனுமதி கோரியிருந்தனர். ஆயினும் இதற்கான அனுமதியை பொலிஸார் மறுத்து வந்தனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்பட்டதும் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் எனும் பெயரில் இந்தியாவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக இப்போராட்டத்திற்கு பொலிஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈ.பி.டி.பி யினரையும் அரச புலனாய்வாளர்களையும் வைத்துக் கொண்டே இச்செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இன்றைய தினம் இப்போராட்டத்தின் போது, பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மட்டும் மகஜர் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு பக்ஸ் மூலம் மகஜரின் பிரதிகளை அனுப்பி வைப்பதாகவும் முன்னர் திட்டமிடப்பட்டது.

பின்னர் யாழ்.அரச அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொண்டு சென்று மகஜரை கையளிக்குமாறு கடற்றொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்திய துணைத்தூதரகத்திற்கு மகஜரின் ஒரு பிரதி அனுப்பி வைப்பதாக திட்டமிடப்பட்டது.

இதற்கு புலனாய்வாளர்கள் ஆதரவு தெரிவித்த போதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டைத் தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதேவேளை, ஈ.பி.டி.பி யின் அமைப்பாளர் ஒருவர், இது தொடர்பில் கடற்றொழிலாளர் சமாச தலைவர் தவரட்ணத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்னால் பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இந்திய றோலர் படகுகளால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது உண்மையாக உள்ளபோதும் இதனை தனது சுயலாப நலனுக்காக இலங்கை அரசாங்கம் பாவிக்க முயல்கின்றது என்பது மட்டும் உண்மையாகவுள்ளது.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர், இலங்கை கடற்படைக்கு இந்திய றொலர்களை கட்டுப்படுத்துவதென்பது மிகவும் சுலபமான ஒன்றாகும். ஆயினும், அரசியல் தலையீடு காரணமாக அதனை அவர்கள் செய்யாதுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜெனீவா தோல்விக்கு இந்தியாவை பழிவாங்கவே வடக்கில் மீனவப் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com