அரசாங்கம் அமெரிக்கப் பிரேரணையை அமுல்படுத்தாது வீறாப்பு காட்டினால் பொருளாதார நெருக்கடியை சந்திக் நேரிடும் என ஐ. தே. கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
” இலங்கையின் தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்று நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை மக்கள் நேரடியாகக் காண்கின்றனர். அரசாங்கத்தைச் சார்ந்த பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பதாகவும் ஏற்கனவே ஒரு ஊடகவியலாளரின் கால்களை உடைத்ததாகவும் தெரிவித்திருப்பதை அனைவரும் அறிவர்.
இவ்வாறு மனித உரிமை மீறல்கள்தான் நாட்டில் தண்டவமாடுகின்றன. இவை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்த முன்வர வேண்டும்.
அரசாங்கம் இன்று வெளிநாட்டுக் கொள்கையை சீரழிவுக்குட்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் கிடைத்ததாகவும் 8 நாடுகள் வாக்களிக்கவில்லையென்றும் இதன் மூலம் தமக்கு 23 பெரும்பான்மை இருப்பதாகவும் அரசாங்கம் மார்தட்டுகிறது.
ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்த பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் உறுப்புரிமை இல்லாத இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிறீஸ், செக் குடியரசு உட்பட 27 மேற்குலக செல்வந்த நாடுகள் அமெரிக்காவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
எனவே நாம் உண்மையைப் புரிந்து கொண்டு அதற்கமைய ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் இதில் முற்று முழுதாக தோல்வி கண்டுள்ளது.
சர்வதேசத்திற்கும் அமெரிக்காவுக்கும் வீறாப்பு காட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை. இதனால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் ஆபத்து உருவாகும்.
அரசாங்கம் இந்நாட்டின் ‘தற்காலிக பொறுப்பாளர்களே தவிர நிரந்தர உரிமையாளரல்ல’ என்பதை அரசுசார்ந்த அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.
0 Responses to அமெரிக்காவுக்கு வீறாப்பு காட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை