சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சென்ற ஆண்டு உலகில் இடம் பெற்ற தூக்குத் தண்டகைன் 2010 ஐ விட அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது. மரண தண்டனை வீதங்களை அதிகரிப்பது உலக நாகரிகத்திற்கு உகந்த செயல் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு உலகம் முழுவதும் 676 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 2010 ம் ஆண்டு தண்டனைகளுடன் ஒப்பிட்டால் 149 பேர் அதிகமானதாகும். தூக்குத் தண்டனை விதிப்பதில் விண்ணாதி விண்;ணர்களாக மத்திய கிழக்கு நாடுகளே இருந்து வருகின்றன. இந்த வட்டகையில் எண்ணெய் உற்பத்தி பெருகாவிட்டாலும், தூக்குத்தண்டனை உற்பத்தி சுமார் 50 வீதம் பெருகியுள்ளது. ஈரான், சவுதி அரேபியா இரண்டும் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. அது போல ஈராக், ஏமன் போன்ற நாடுகளிலும் தூக்கிட்டு கொல்லப்படுவோர் தொகை அதிகரித்துள்ளது. ஈரானில் வயது குறைந்த சிறுவர்கள் கூட தூக்கில் போடப்படுவதும், மனித நாகரீகத்தின் மோசமான வீழ்ச்சி நடைபெறுவதும் தொடர்ந்து அதிகரிக்கிறது.
இதேவேளை பிரான்சில் ஏழு பேரை கொன்ற சீரியல் கொலையாளியும், அல் குவைடா பயங்கரவாதியுமான முகமட் மராக் வெளியிட்ட ஒளி நாடாக்களை அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். மேற்கண்ட ஒளி நாடாவை ஒளிபரப்பு செய்யக் கூடாதென பிரான்சிய அதிபர் ஸார்கோஸி தடை விதித்துள்ளார். இதன் பிரதி பிரான்சிய போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சிய அதிபரின் வேண்டுதலை அல் ஜஸீரா ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஸார்கோஸி நன்றி கூறினார். முன்னர் மூன்று இராணுவத்தினரை சுட்டதும், பின்னர் பாடசாலை சிறுவர்களை சுட்டதும் இதில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியபடி இவர் எப்படி வீ.டீ.ஓ படத்தையும் எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரை கொன்ற பிரான்சிய போலீசார் இவரை 22 துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொன்று கோபம் ஆறியுள்ளார்கள்.
மறுபுறம் நோர்வேயில் உள்ள மந்திரிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட முல்லா காரிக்கார் என்று அழைக்கப்படும் நஜிமுடீன் பராய் அகமட் என்பருக்கு நோஸ்க் நீதிமன்று ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர் கடந்த 1991 ல் இருந்து நோர்வேயில் இருந்து வருகிறார். பயஙகரவாதம் தொடர்பான பேச்சுக்களை நடாத்தியபோது சன்னதமேறி கொலை மிரட்டல் விட்டு மாட்டிக் கொண்டவராகும். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அடையாளமாகியுள்ளார்.
அதேவேளை ஜேர்மனி மொத்தம் 130 இஸ்லாமிய தீவிரப் போக்குடையவர்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் இணைய மூலமாக மத உச்சாடனம் ஏற்றப்பட்டு வருகிறார்கள் என்றும் ஜேர்மனிய அமைச்சர் கூறுகிறார். பயங்கரவாத செயல்களுக்கு துணை போவதும், அத்தகைய கருத்துக்களால் தூண்டப்பட்டு கூத்தாடுவதும் மேலை நாடுகளால் சகிக்க முடியாத குற்றச் செயல் என்பது கவனிக்கத்தக்கது.
இது ஒரு புறம் நகர பாப்பரசர் தற்போது கியூபா சென்றடைந்துள்ளார். முன்னரே கம்யூனிச திரையை விலத்தி இனிமேலாவது கியூபா இளைஞர்களை உலகத்தோடு இணைந்து வாழ விடுங்கள் என்று கூறியிருந்தார். இவருக்கு சுமார் 150 பேர் வரை கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்பரசர் அங்கு மூன்று தினங்கள் தங்கியிருந்து ஆராதனைகளை நடாத்தவுள்ளார். கம்யூனிச கியூபாவில் பாப்பரசர் இறங்குமளவுக்கு போயுள்ளது பிடல் காஸ்ரோவின் கம்யூனிசத்தின் நிலை.
பாப்பரசர் இறங்கிய செய்திகள் வந்து கொண்டிருக்க லிபியாவின் தென் புறத்தில் போராளிக் குழுக்களிடையே மோதல் நடந்த செய்தியும் கூடவே வெளியானது. காரில் போன போராளி ஒருவரை இன்னொரு போராளிக்குழு சுட்டுக் கொன்றது. இதனால் கோபமடைந்த மற்றைய போராளிக்குழு சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இரண்டு தரப்பும் தாங்கள் யார், தமது முட்டாள்தனம் எத்தகையது என்று தெரியாது சகட்டுமேனிக்கு சுட்டு 20 பேர் வரை மடிந்தார்கள். சுற்றி நின்ற 40 பேர் இந்த மோதலில் காயமடைந்தனர். அரைத்த மிளகாய் தின்ற குரங்குகள் ஆளையாள் அடித்து இறப்பது போல இவர்கள் இறந்துள்ளனர்.
பிந்திய செய்திகளின்படி முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் சிரியாவில் மேற்கொண்டுள்ள பேச்சுக்கள் ஒரு படி முன்னேற்றகரமாக உள்ளதாக சற்று முன் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளார்கள். கொபி அனானின் திட்டம் பிரச்சனைக்கான தீர்வாக இல்லாவிட்டாலும் ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் ஆதரித்திருப்பதால் ஒரு படி முன்னேற்றமானது என்று டேனிஸ் ஆய்வாளர் பீட்டர் ஸீபியா தெரிவித்தார்.
0 Responses to படுகொலைக் காணொளி காண்பிக்க அனுமதி இல்லை...