தமிழ் புத்தாண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது இதில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டை சுய விளம்பரத்திற்காக கருணாநிதி மாற்றினார் என்று சாடினார்.
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலையில் இருந்து கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய தமிழ் அறிஞர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்னும் பழமையுடைய இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியை பேசுபவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கான அடிப்படை காரணங்கள் பல உள்ளன.
சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வாண நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதில் இருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் அந்த மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்.
உதாரணமாக சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதேபோன்று வைகாசி மாதத்தில் பவுர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன.
சித்திரையே வா, நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால் சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என்று தெய்வத்திரு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழ கால கல்வெட்டுகளிலும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் 60 ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அகத்தியர் பன்னிராயிரத்தில் பங்குனி மாதம் கடைசி மாதம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நக்கீரரும் இந்த கருத்தை கூறி இருக்கிறார். ராமலிங்கம் பிள்ளையும் சித்திரை மாத தொடக்கத்தை தனது வாழ்த்து பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to சுயவிளம்பரத்திற்காக தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார் கருணாநிதி