Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செத்தும் கொடுத்த சீதக்காதி கேள்விப் பட்டிருப்போம். அது மரணத்தின் பின்தான ஒரு வாழ்வைக் குறிக்கும்.

மரணத்தின் பின்னதான வாழ்வு குறித்து இந்தப் பதிவும் பேசுகிறது. ஒரு மாணவனின் மரணத்தின் பின்னும் அவனை வாழ வைத்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள். விபரம் அறியத் தொடர்ந்து வாசியுங்கள்..

7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன் திருப்பூரில் நெஞ்சை உருக்கிய சம்பவம். மாணவன் சஞ்சயின் தாயார் நமது முகநூல் நண்பர் M Venkatesan MscMphil அவர்களது மாணவி ஆவார் .

திருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் கவிதா என்ற மனைவி, சஞ்சய்(15), சந்தோஷ்(13) என்ற 2 மகன்களோடு திருப்பூர் நல்லூர் அருகே வசித்து வந்துள்ளார். இருவரும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 6ந்தேதி மாலை திருப்பூர் காங்கயம் சாலையில் சஞ்சய்க்கு 2 சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, நினைவிழந்த நிலையில் இருக்கும் சஞ்சய்யை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி திருப்பூர் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் எவ்வளவு முயன்றும் நினைவை கொண்டு வர முடியாமல் மருத்துவர்கள் போராடினார்கள். இறுதியில், மூளைச்சாவு குறித்த ஆய்வு மருந்தை செலுத்தி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு மருந்தும் போடப்பட்டது.

இந்த மருந்து செலுத்தப்பட்டு குறிப்பிட்ட மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் மூளைச்சாவா என்பது குறித்து தெரியவரும். நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் நேரத்தில் இதற்கான அறிவிப்பிற்காக சஞ்சயின் பெற்றோர்களும், உறவினர்களும் கனத்த இதயத்தோடு காத்திருந்தனர். அறிவிப்பு வெளியானதும் மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது. சஞ்சயின் பெற்றோர் கதறி அழுதனர். ‘உங்கள் மகன் உயிரோடு இருப்பார், ஆனால் அவரால் இயங்க முடியாது. நினைவுக்கு வரமுடியாது’ என்று மருத்துவர்கள் பெற்றோர்களிடம் கூறினர்.

அந்த சோதனையான சூழ்நிலையிலும் சஞ்சயின் பெற்றோர்கள் எடுத்த முடிவு அங்கு சூழ்ந்திருந்த உறவினர்களிடமும், நண்பர்களிடமும், மருத்துவர்களிடமும் மிகப்பெரிய மரியாதையையும், கவுரவத்தையும், பெருமையையும் ஏற்படுத்தியது.

ஆம், மூளை இறந்து உயிரோடு கிடக்கும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து கொடுக்க சஞ்சயின் பெற்றோர்கள் முன் வந்தனர். இது குறித்த தகவல், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வரும் சென்னைமோகன் பவுண்டேஷன் அமைப்பிற்கு தரப்பட்டது.

அவர்கள் மூலம் சஞ்சயின் கண்கள், சிறுநீரகம், இதய வால்வுகள், ஈரல் போன்ற உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேற்று காலை இதற்கான சிறப்பு மருத்துவக்குழுவினர் சென்னையில் இருந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு வந்தனர். பகல் 11 மணிக்கு மேல் உயிரோடு மட்டுமே இருந்து மூளையில் இறந்து போயிருந்த சஞ்சயின் உடலை மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் பாகங்களை சேகரிக்கப்பட்டன.

கோவையில் உள்ள சங்கரா மருத்துவமனைக்கு 2 கண்களும், கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 2 சிறு நீரகங்களும், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு ஈரலும் கொண்டு செல்லப்பட்டன. இதய வால்வுகளை சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து சஞ்சயின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருப்பூரில் உள்ள சஞ்சயின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அஞ்சலி செலுத்தியபின் இறுதி சடங்குகள் நடந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து சஞ்சயின் தந்தை சுரேஷின் சகோதரி விஜயகுமாரி கூறியதாவது:

சிறு வயதில் இருந்தே சஞ்சய் புத்திசாலியாக விளங்கி வந்தான். என்.சி.சி., மாணவனாகவும் இருந்தான். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளான். கடந்த அக்டோபர் மாதம் 22ந்தேதி அவன் பிறந்த நாளின்போது, உடல் தானம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது நானும் உடல் தானம் செய்வேன் என்று கூறினான். பிறந்த நாளும் அதுவுமாக ஏன் இப்படி பேசுகிறாய்? என்று அவன் பெற்றோர்கள் அப்போதே அவனை சத்தம்போட்டனர். ஆனால் இன்று அவன் சொன்னபடியே அவன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு விட்டன, என்று கூறி கதறி அழுதார்.

இது குறித்து உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மோகன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்டோபர் கூறியதாவது:

சஞ்சயின் கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவற்றின் மூலம் உடனடியாக 5 பேர் மறுவாழ்வு பெறுவார்கள். இதய வால்வுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவமனையில் சேமித்து தேவைப்படும் போது மற்றவர்களுக்கு உதவுவார்கள். இதன் மூலம் 2 அல்லது 3 பேர் உயிர் பிழைப்பார்கள். மொத்தத்தில் சஞ்சய் மூலம் 6 அல்லது 7 பேர் உறுதியாக மறு வாழ்வு பெறுவார்கள் என்பது உறுதி. தங்கள் மகன் இறந்து போன சோகமான நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன், உறுதியாக செயல்பட்ட சஞ்சயின் பெற்றோர்கள் சுரேஷ், கவிதா ஆகியோரை எப்போதுமே மறக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

இறந்து போன சஞ்சய் 10ம் வகுப்பு மாணவர். தற்போது அரசு தேர்வு நடைபெற்று வரும் வேளையில் கடந்த 4ந்தேதி தமிழ் தேர்வு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vinayaka Moorthy

0 Responses to மரணத்தின் பின்னும் வாழலாம் - வாழ்கிறான் மாணவன் சஞ்சய்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com