பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரடியாகச் சந்திப்பதே தமது சிறிலங்காவுக்கான விஜயத்தின் முக்கிய நோக்கம் என இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா விஜயம் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த குழுவிலிருந்து அ.தி.மு.க விலகிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அவரின் அந்தக் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சுதர்சன நாச்சியப்பன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, அந்நாட்டில் இந்திய அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே தாங்கள் செல்கின்றோம், என அவர் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்ற குழுவினரின் பயணத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாததால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்தக் குழுவினரின் பயணத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் பார்ப்பதை விட, சிறிலங்கா அமைச்சர்களை சந்திப்பதும் ஜனாதிபதியுடன் விருந்து உண்ணுவதுமான நிகழ்ச்சி நிரலிற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியே அ.தி.மு.க புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.
0 Responses to பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திப்பதே நோக்கம் நாச்சியப்பன்