Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பகரின் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவரும், டென்மார்க்கில் 12 வருடங்கள் வாழ்ந்து டேனிஸ் குடியுரிமை பெற்றவருமான அப்துல்காடி அல் காவ்யாவின் நிலை மிக மோசமாகியுள்ளது. கடந்த 59 நாட்களாக வெறும் நீரை மட்டும் குடித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவருக்கு நீரோடு உப்பும் கலந்து வழங்கப்படுகிறது. பகரினில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருடைய நிலை படுமோசமாகிவிட்டது. மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் எந்த நேரமும் மரணிக்கலாம் என்று இவருடைய சட்டத்தரணி தெரிவித்தார். இவருடைய உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக இன்று பகரினில் சுமார் 5000 பேர் வீதியில் இறங்கி போராடினார்கள். போலீசாரின் வாகனங்களுக்கு கற்களை வீசினார்கள். ஏற்கெனவே இவருடைய மகள் செனப் கைது செய்யப்பட்டு இன்று நீதிபதி முன் நிறுத்தப்படவுள்ளார். இவர் விடுதலை செய்யப்படுவாரா இல்லை சிறையில் தள்ளப்படுவாரா என்ற முடிவை நீதிபதி எடுப்பார்.

அதேவேளை கைதுகள், மனித உரிமைக்கு விரோதமான காட்டுத்தர்பார் காரணமாக மன்னராட்சிக்கு மவுசு குன்றி வருகிறது. ஜனநாயக போராட்டத்திற்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்தது தவறு, அனைத்து ஒடுக்கு முறைகளையும் நிறுத்தி அமைதி காக்கும்படி உலக நாடுகள் கோரியுள்ளன. அத்தோடு கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக டென்மார்க்கும் கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. தனது கணவனின் விடுதலைக்கும் மனித உரிமை மேம்பாட்டுக்கும் டென்மார்க் கொடுக்கும் குரலுக்கு அப்துல்காடி அல் காவ்யாவின் மனைவி பாராட்டுக்களை தெரிவித்தார். தற்போது பகரினில் நடக்கும் போராட்டத்தில்உயிரும், அதிகாரமும் ஒரு நூலின் இரண்டு அந்தங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவருடைய உயிர் போனால் பகரினில் பாரிய போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. அது சிறுபான்மை சன்னி முஸ்லீம் மன்னராட்சிக்கு சவாலாக மாறிவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

அதேவேளை ஏமன் நாட்டில் தந்திரமான நரியாக இருந்து ஆட்சியை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலாவின் ஒன்றுவிட்ட சகோதரர் தனது இராணுவ ஜெனரல் பதவியில் இருந்து விலக மறுத்து கடும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது அண்ணன் நாட்டைவிட்டு விலகிப் போகும்போது ஜெனரல் பதவியில் இருந்து விலக வேண்டாமென தனக்கு கூறிவிட்டு போனதால் பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார். இவருடைய கட்டுப்பாட்டில் இப்போது தலைநகரில் உள்ள விமான நிலையம் இருக்கிறது. ஏதாவது தப்பிதம் நடந்தால் வரும் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய பேர்வழியாக இருப்பதால் இராணுவம் விமான நிலையத்தை சுற்றி வளைத்துள்ளது. பேரம் பேசல்கள் நடைபெறுகின்றன.

மறுபுறம் சிரியாவில் சர்வாதிகாரி ஆஸாட் பேச்சு வார்த்தைக்கு போன கொபி அனானுக்கு கோப்பித்தண்ணி வழங்கி வருகிறார். படைகள் விலகுகின்றன என்றால் படுகொலை ஆரம்பம் என்ற சிறீலங்கா பாணியை அவர் அரங்கேற்றி நாட்டை எரித்துக் கொண்டிருக்கிறார். கடும் தாக்குதல் காரணமாக காடு சுட எலி புறப்பட்டது போல கடந்த 24 மணி நேரத்தில் 2800 பேர் அகதிகளாக துருக்கிக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா செயலர் அவலக்குரல் எழுப்பியுள்ளார்.

சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது.

ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டதாகத் தெரியும் ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறைந்தபட்சம் பதிமூன்று பேரின் சடலங்களை உறுதிசெய்யப்படாத இந்த வீடியோ படம் காட்டுகிறது.

0 Responses to மரணத்துடன் போராடும் பகரின் கைதியின் நிலை தொடர்ந்து மோசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com