ஏமனில் தலைநகர் சானாவில் ஒரு இராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகையின் போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 70 படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதிபரின் மாளிகைக்கு அண்மையில் உள்ள ஒரு சதுக்கத்தில் நடந்த இந்த குண்டுத் தாக்குதலில் மேலும் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.
தற்கொலைத் தாக்குதலாளி இராணுவ சீருடையில் வந்ததாக செய்திகள் கூறுகின்றன.
தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல்கைதாவை சார்ந்த செய்தி ஆதாரம் ஒன்று கூறியுள்ளது.
அல்கைதாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக்காரர்கள் மீது நாட்டின் தென்பகுதியில் ஏமானிய படையினர் தாக்குதலை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த பெப்ரவரியில் புதிய அதிபர் அப்ட் ரஃபு மன்சூர் ஹாதி அவர்கள் பதவியேற்ற பின்னர் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
நாளை தலைநகரில் நடக்கவிருக்கும் ஒருமைப்பாட்டுத்தின அணிவகுப்புக்காக, காலையில் அணிவகுப்பு ஒத்திகையில் இருந்தவர்கள் மத்தியில் இராணுவ சீருடையில் வந்த தற்கொலையாளி தனது குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
அல்கைதாவை அதனது ஏமன் நாட்டுத் தளங்களில் இருந்து அகற்றுவது என்பது ஒரு நீண்ட, இரத்தக்களரி மிக்க நடவடிக்கையாக இருக்கும் என்ற ஒரு அதிர்ச்சிச் செய்தியை இதன் மூலம் புதிய அதிபருக்கு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த வருடத்தில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பல நகரங்களை அந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டது.
அவற்றை மீளக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ஏமன் நாட்டுப் படையினருக்கு உதவிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு நிலைகொண்டுள்ள அல்கைதாவினரின் குண்டுத் தயாரிப்பு நிபுணத்துவம் குறித்து அமெரிக்கா பெரும் கவலையடைந்துள்ளது.
ஏனெனில், அங்கிருந்து அமெரிக்கா செல்லும் பல விமானங்களில் குண்டுத் தாக்குதல்களை நடந்த அந்த அமைப்பு கடந்த காலங்களில் முயற்சித்திருக்கிறது.
0 Responses to ஏமன் தற்கொலைத் தாக்குதலில் 70 படையினர் பலி