காலஞ்சென்ற ஐ.தே.க பிரதமர் டட்லிக்கு விவசாய மன்னன் என்று சிங்களவர்கள் தலைப்பாகை கட்டிவிட்டது பழைய கதை.
கமேராவுடன் போய் பசுமைகளை படம் பிடிக்கும் இவர் ஒரு தடவை மொனராகலை சென்றார்.
இவர் வருகிறார் என்று தெரிந்ததும் அங்கிருந்த பா.உ வேறெங்கோ விளைந்த கோவாக்களை லாரி லாரியாக ஏற்றிவந்து காய்ந்த மொனராகலையில் நட்டு, தண்ணீர் விசிறி விவசாய வளர்ச்சியை காட்டினார்.
அடடா.. இதுவல்லவோ வளர்ச்சியென… விவசாயத்தின் வளர்ச்சியை மெச்சிவிட்டு, டட்லி போனதும் கோவாக்கள் பிடுங்கி சிங்களவர்கள் கறி சமைத்தார்கள்.
இப்படி மாதனமுத்தா பாணியில் அரசியல் நடாத்திய சிங்கள தலைவர்கள் அமெரிக்காவில் போய் வடக்கில் வசந்தமென நட்ட டட்லிகாலத்து றெடிமேட் கோவாவை நட்டுள்ளனர்.
இது குறித்த செய்தி வருமாறு :
போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தமது முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து, அமெரிக்காவைத் திருப்திப்படுத்த இலங்கை அரசு தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர், ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்கள் உள்ளிட்ட அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களைச் சந்தித்திருந்தனர்.
எனினும் இந்தக் குழுவினர் போருக்குப் பிந்திய நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, அமெரிக்க அதிகாரிகளிடம் காண்பிக்கத் தவறியுள்ளனர்.
இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாகத் தமது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இலங்கைக் குழுவின் பயணம் உதவவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது எந்தப் புதிய முன்னேற்றங்கள் குறித்தும் இந்தக் குழு பேசவில்லை.
வொஷிங்டனில் முன்னர் நடத்திய சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேசியிருந்தார். அவர் வழக்கம் போலவே இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் மீளக்குடியமர்வு, புனர்வாழ்வு, அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேசினார். அமெரிக்க அதிகாரிகள் இதனை எதிர்பார்க்கவில்லை.
எவ்வாறாயினும், முக்கிய அமெரிக்க அதிகாரிகளான சசமந்தா பவர், மற்றும் ஹிலாரி கிளின்ரன் ஆகியோர், நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
சமந்தா பவருடனான சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தியிருந்தார். அதன் பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படு கிறது என்று விளக்கமளிக்குமாறும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டிருந்தார்.
அத்துடன், வடக்கு,கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், வடக்கில் படைக்குறைப்புச் செய்யப்பட வேண்டியது குறித்தும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரில் கண்டறிய வருமாறு சமந்தா பவருக்கு பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Responses to டட்லி சேனாநாயக்காவுக்கு கோவா நட்ட கதையும் பிசுபிசுத்த பீரீசும்..