Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருவாரியான சர்வதேச ஆதரவுடன் தொடுக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு எதிரான போரின் இறுதியில் சிங்கள தேசம் வெற்றியின் விளிம்பிற்கே சென்றது. பயங்கரவாதத்தை அழித்து விட்டதாகவும், சிறிலங்காவில் இனப் பாகுபாட்டுக்கு இடம் அளிக்கப் போவதில்லை என்கிற வகையில் பிரசாரங்களை சிங்கள அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை அழித்தார்கள் என்று சிங்கள அரசு தொடர்ந்தும் தெரிவித்து வந்தது. அப்படியாயின்,1956, 1958, 1977, 1979, 1981 மற்றும் 1983 ஆண்டுக் காலப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்களை யார் செய்தார்கள் என்கிற வினா எழுகிறது.

இவற்றினை தாம் செய்யவில்லை என்று சிங்கள அரசுகளினால் தெரிவிக்கவோ அல்லது மூடி மறைக்கவோ முடியுமா? நிச்சயம் இவர்களினால் மறுக்க முடியாது. அதற்கான தகுந்த ஆதாரங்களும் இருக்கிறது.

சிங்கள ஏகாதிபத்திய அரசுகளின் நேரடித் தலையீட்டுடனும்,சிங்கள அரச அமைச்சர்களின் நேரடி அறிவுறுத்தலின் பேரிலேயும்தான் இவ் அனைத்துச் சம்பவங்களும் இடம்பெற்றன.

தமிழர்களின் பாரம்பரியக் கலையமைப்புடன் கட்டப்பட்ட யாழ் நூலகத்தை யார் எரித்து சாம்பலாக்கினார்கள் என்கிற கேள்விக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்தவரே சம்பவத்தை தாமே மேற்கொண்டதாக ஒப்புக் கொண்டார்.

சிங்கள அரசின் இரு முக்கிய அமைச்சர்களே யாழில் இருந்துகொண்டு நூலகத்தை எரிக்க கட்டளையிட்டதுடன், குறித்த சம்பவம் இடம்பெற்றது நூறு வீதம் சரியானதொன்றேயென அப்போதைய அரச தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் நியாயம் கூறினார்கள்.

பயங்கரவாதத் தாக்குதல்களை தாம் மேற்கொண்டுவிட்டு தமிழ்ப் போராளிகள் மீது பழியைப் போடுவது அபத்தமான செயல். இதனையே தொடர்ந்தும் செய்தன சிங்கள அரசுகள்.

தமிழர்களின் தார்மீகப் போராட்டம்

தமிழ்ப் போராளிகள் ஆயுத வழியிலான போராட்டத்தை1970- இன் ஆரம்பத்தில் ஆரம்பித்தாலும், அவர்களை மறைமுகமாக வளர அனுமதித்ததுகூட சிங்கள அரசுகள்தான். தமிழ்ப் போராளிகளை முடக்குவதென்று கூறி, பல அடாவடித்தனங்களைத் தமிழர் பகுதிகளில் செய்தது சிங்கள அரசுகள். உலகத் தமிழ் மாநாடு யாழில் நடைபெற்ற வேளையில், அதைக் குழப்பும் வகையில் பல அட்டூழியங்களைச் செய்தது சிங்கள அரசு.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு பல அப்பாவி இளைஞர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தமிழ் போராளிக் குழுக்கள் ஆயுதத் தாக்குதல்களை சிங்கள அரச படையினருக்கு எதிராக செய்வதற்கு முன்னரேதான் இச்சம்பவங்கள் அனைத்தும் இடம்பெற்றன.

விடுதலைப்புலிகள் சுகவாழ்வுக்காக போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா அளிக்கவிருந்த பல கோடி ரூபாக்களையும், மேலும் பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு செல்வாக்கான வாழ்க்கையை அனுபவித்திருப்பர் விடுதலைப்புலிகளின் முன்னணிப் போராளிகள்.

அவர்கள் அப்படிச் செய்யாமல், அடர்ந்த காட்டுக்குள்ளும் பதுங்கு குழிகளுக்கும் மறைந்திருந்து பல தசாப்தங்களை ஈழத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்துப் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

தமது சொந்தப் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துத் தேவையான கல்வியறிவையும் மற்றும் தொழில்சார் அறிவுகளையும் பெற்றபின் மீண்டும் தாயகம் திரும்புமாறு கட்டளையிட்டவர்கள்தான் விடுதலைப்புலிகளின் தலைமைப் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினொரு ஆண்டுகள் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வெள்ளையினத்தவர் ஒருவருக்கு திருமணமும் செய்துவைத்து, லண்டனில் மிகப்பெரிய மாளிகையைக் கட்டி வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்.

இப்படிப்பட்டவர்கள்,விடுதலைப்புலிகளைப் பற்றியோ அல்லது அவர்களின் ஆத்மீக போராட்டத்தைப் பற்றியோ பேச அருகதையற்றவர்கள்.

பொய்யே வாழ்க்கையானது.

மே 2009-இல் முடிந்த நான்காம் கட்ட ஈழப்போரில் 7,000 வரையிலான தமிழர்கள் மட்டுமே இறந்தார்களென அடித்துக் கூறிவந்தார் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன். வெறும் 0 மக்களே இறந்தார்களென்று சிங்கள அரசு தொடர்ந்தும் கூறி வந்தது.

மேற்குலக நாடுகளின் அழுத்தத்தின் பின்னர் ஜூன் 2010-இல் மூவர் அடங்கிய குழுவை நியமித்தார் மூன்.

மார்ச் 2011-இல் தயாரிக்கப்பட்ட 214- பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 2011-இல் அதிகாரபூர்வமாக ஜ.நா. வெளியிட்டது. இவ்வறிக்கையினூடாக சிங்கள அரச படைகள் செய்த அட்டூழியங்களைப் பகிரங்கப்படுத்தப்படுத்தியது ஜ.நா.

சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐந்து வகை குற்றங்கள் கண்டறியப்பட்டதாக அவ் அறிக்கை தெரிவித்தது, அவையாவன: (1) பாரதூரமான ஷெல் தாக்குதல்களில் பொது மக்களைக் கொன்றது. (2) மருத்துவமனை மற்றும் மனித நேயப் பணிகளுக்குப் பயன்படும் இடங்களைத் தாக்கியது. (3) மனிதாபிமான உதவிகளை செய்யவிடாமல் தடுத்தது .

(4) போரால் பாதிக்கப்பட்டோர் மற்றும் போரில் தப்பிப் பிழைத்தோர் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள். அதாவது இடம்பெயர்ந்தோர் மற்றும் புலிகள் என்ற சந்தேகத்துக்குள்ளானோர் நிலை. (5) போர்ப் பகுதிக்கு வெளியே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் - குறிப்பாக ஊடகங்கள் மீதும் அரசை விமர்சிப்போருக்கெதிராக நடைபெற்ற சம்பவங்கள்.

இப்படியான பாரிய இனவழிப்புக் குற்றச்சாட்டை சுமத்தியது குறித்த குழு. குறித்த நிபுணர்குழுவின் சிபாரிசுக்குப் பின்னர், ஐ.நா. நேரடியாக ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை நியமித்திருக்க வேண்டும். அதனைச் செய்ய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் மற்றும் சிறிலங்காவிற்குப் பக்க பலமாக இருக்கும் சில நாடுகள் விரும்பவில்லை.

ஏதோ தனது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு இறமையுள்ள நாடென்கிற காரணத்தை முன்வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடுத்து தனது நாடே தண்டனையை தனது மண்ணில் வழங்கும் என்று கூறினார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இதனடிப்படையில், 2010-இல் படிப்பினை மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவை நியமித்து அக்குழுவும் நவம்பர் 20. 2011-இல் 407 பக்கங்களையுடைய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

சிறிலங்காவின் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குறித்த எட்டுப் பேர் அடங்கிய குழுவின் நம்பகத் தன்மையைப் பற்றி பலதரப் பட்டவர்களினாலும் சந்தேகம் கிளப்பப்பட்டது. குறிப்பாக, குறித்த அனைவரும் சிறிலங்கா அரசின் முன்னால் மற்றும் இந்நாள் அரச ஊழியர்கள். இவர்கள் அனைவரும் தமது எஜமானுக்கு விசுவாசமாகவும் அவரின் கட்டளையின் அடிப்படையில் மட்டுமே சிபாரிசுகளை வழங்குவார்கள் என்று சொல்லப்பட்டது. அதுவே உண்மையாகியது.

பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்கா அரசின் அப்பட்டமான அரச பயங்கரவாத ஒலிநாடாக்களை ஒளிபரப்பி வேற்றினத்தவரும் அறியும்படி வெளிக்கொண்டு வந்தது.

சிங்கள ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை காப்பாற்றியது. ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சனல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுடன், உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்துக்கும் கொண்டு வந்தது.

அரச பயங்கரவாதத்தை நிரூபிக்கும் சான்றுகள் அனைத்தும் இருந்தும் பல நாடுகள் தொடர்ந்தும் மௌனம் காக்கிறார்கள். வெறும் பேச்சளவில் மட்டும் இருந்து விடாமல் ஆக்க பூர்வமான செயல்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தில் தொடர்புள்ள அனைவரயும் கூண்டில் ஏற்றும் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே இறந்த மக்களுக்கு உலக நாடுகள் செய்யும் காணிக்கையாக இருக்கும்.

மூன்று ஆண்டுகள் யுத்தம் இல்லாத காலத்திலும் தமிழ் மக்கள் அன்றாடம் இராணுவக் கெடுபிடிக்குள்ளேயே வாழ்கிறார்கள். தொடர் கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள், கொள்ளைகள் என்று பல கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடக்கிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளை தமிழ் மக்களின் குறைகளை கேட்க அனுமதி மறுக்கப்படுகிறது.யுத்தக் காலத்தில் செயல்பட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது காரியாலயங்களை தமிழர் பகுதிகளிலிருந்து மூடிவிட்டுச் செல்லும் நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியது.

இப்படியான ஒரு காலப் பகுதியிலேயேதான் தமிழ் மக்கள் இன்று வாழாவெட்டியாக வாழ்கிறார்கள். யுத்தம் முடிந்தால் என்ன முடியாவிட்டால் என்ன தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்துமே அப்படியே இருக்கிறது. பாதைகள் மாறியுள்ளதே தவிர சிங்கள அரசின் தமிழின அழிப்பு வேட்டை மாறியதாக இல்லை.

nithiskumaaran2010@gmail.com

0 Responses to போர் ஓய்ந்து மூன்று ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ மக்களுக்கு தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகிறது | அனலை நிதிஸ் ச. குமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com