கனடா போர்க்குற்றநாள் நிகழ்வு ஸ்காபறோ சிவிக் சென்ரர் முன்றலில் உள்ள அல்பேட் காம்பல் சதுக்கத்தில் மே 18ம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்காணோர் மிகவும் உணர்வுபூரமாக கலந்துகொண்டனர் நிகழ்வுகள் அமைதி வணக்கத்துடனும் மலர் வணக்கத்துடனும் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் கனடாவின் ஆளும் கட்சி, எதிர் கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்ராரியோ மாகாண பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோக் சென்ரர் தொகுதியின் ஆளும் கடசியான கொன்சவேற்றிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் அட்லர் (MP Mark Adler - Conservative - York Center) ஸ்பாபுரோ அஜின்கோட் தொகுதி லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ் (MP Jim Karigiyanis - Liberal - Scarborugh Agincourt) ஸ்பாபுரோ றூஜ்றிவர் தொகுதி என்டிபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், ரொறன்ரோ சென்ரர் தொகுதி லிபரல் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உநுப்பினர் கிளன் முறே (Glen Murray - MPP Toronto Centre) பீச்சஸ் ஈஸ்ற்யோக் தொகுதி என்டிபி கட்சி ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் புறூ (Michael Prue - MPP for Beaches-East York) ஒன்ராரியோ மாகாண என்டிபி கட்வித் தலைவர் நீதன் சாண் (Neethan Shan - President – ONDP) மார்க்கம் ஏழாம் வட்டார கவுன்சிலர் லோகன் கணபதி (Logan Kanapathi - Councillor for Ward 7 -Town of Markham) மற்றும் ஊடகவிலாளர்கள் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் என பல பிரமுகர்கள் உரையாற்றினர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் சிஃபெய்ன் மக்டொனா அவர்களும் உலக்தமிழர் பேரவை தலைவர் அருட் தந்தை எஸ்.ஜே இம்மானுவல் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் சிஃபெய்ன் மக்டொனா பிரித்தானியா பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான விவகாரத்திற்கான அமைப்பின் உப தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது. இவர் கனடிய பாராளுமன்றத்திலும் தமிழருக்கான அனைத்துக்கட்சி குழுவை அமைப்பதற்கான ஆதரவையும் வெளியிட்டார்.
மேலும் தென் ஆபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சிசா அவர்கள் தனது போர் குற்ற நாளுக்கான ஆதரவு செய்தியை அனுப்பி வைத்திருந்தார். மற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பைர்ட் அவர்களும் மற்றும் பல அமைச்சர்கள், பாராளுமன்ர உறுப்பினர்கள் இன் நிகழ்வுக்கான ஆதரவு செய்தியை தெரிவித்திருந்தனர்.
தமிழ் நாட்டிலிருந்து திரு. பழ நெடுமாறன் திரு. காசி ஆனந்தன் திரு அறிவுமதி திரு. வைகோ திரு. சத்தியராஜ் அவர்களும் ஆதரவு செய்தியை அனுப்பி இருந்தனர்.
நிகழ்வில் எழுச்சிப்பாடல்களுக்கான நடனங்கள் நடன ஆசிரியை பூங்குழலி இளங்கோவன் ஆசிரியையின் சாந்தநாயகி கலைக்கோவில் நடனப் பள்ளி; , ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம் ஆசிரியையின் அபிநயாலயா நடனப்பள்ளி, ஆசிரியை பத்மினி ஆனந்த் ஆசிரியையின் இந்தோ கனடா நடனப்பளள்ளி ஆகிய நடனப்பள்ளிகiளை சேர்ந்த மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது. எழுச்சிப்பாடல்களை வாணம்பாடிகளைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் செந்துரரன் அழகய்யா ஆகியோர் பாடினர்.
வெள்ளிக் கிழமையன்று வேலை நாளாக இருந்தபோதும் கூட வேலைக்கு விடுப்பெடுத்து பெருந்திரளான மக்கள் மாலை ஜந்து மணிக்கே திரள ஆரம்பித்துவிட்டனர். அதிகளவிலான மக்கள் கனடியத்தமிழ் தேசிய அவையினானல் வழங்கப்பட்ட 'போர்க்குற்ற நாள்' இலட்சனை குறிக்கப்பட்ட மேலங்கிகளை (T-shirt) அணிந்து வந்திருந்தனர். நிகழ்வுக்கு வந்திருந்த மக்களுக்கு வல்வெட்டி நலன்புரிச்சங்கத்தினரால் தேநீர் வழங்கப்பெற்றது.
கனடியத்தமிழர் தேசிய அவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் தொண்டர்கள் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற பல நாட்களாக கண்தூங்காது செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் பாரட்டுக்குரிய சாதனையாளாகள் என்று சொன்னால் மிகையாகாது. நிகழ்வுகளை தமிழ் இளையொர் அமைப்பைச்சார்ந்த செல்வி லக்சான பாஸ்கரன், கனடியத்தமிழர் தேசிய அவை உறுப்பினர் திரு தேவா சபாபதிப்பிள்ளை ஆகியோர் திறம்பட தொகுத்து வழங்கியிருந்தனர்.
போர்க் குற்றநாளை குழப்பவதற்காக பல இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்போதும். இக் குழப்பங்களையும் தாண்டி மக்கள் கலந்துகொண்டமையானது மக்கள் தமிழ் தேசியத்தில் தாம் வைத்திருக்கும் பற்றுதலை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இறுதி நிகழ்வாக கனடியத்தமிழர் தேசிய அவையினரால் போர்க்குற்றநாள் குறித்து பிரகடனம் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து உறுதி மொழியுடன் இரவு 10.00 மணியளவில் நிகழ்வு முழுமையுடன் நிறைவுபெற்றது.
பிரகடனம்:
மே மாதம் 18ம் திகதி 2012 வெள்ளிக்கிழமை கனடாவில் அல்பெட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெற்ற போர்க்குற்றநாள் நிகழ்வின் பிரகடனம்
தாயக உணர்வுடனும் தேசிய உறுதியுடனும் தன்னாட்சிப் பற்றுடனும் இங்கு கூடியிருக்கும் அன்பான உறவுகளே! முள்ளிவாய்க்காலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத் தமிழினம் சந்தித்த பேரவலத்தின் வேதனைகண்டு துவண்டு தூங்கிவிடாமல் அதற்காக ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டு துக்கம் கொண்டாடி இனி என்ன செய்வோம் என்று ஓலமிடாமல் முள்ளிவாய்க்காலுடன் எல்லாவற்றையும் மூடிவிட முப்பதூண்டுகள் போராடவில்லையென்ற உணர்வு பீறிட்ட நிமிர்ந்த நெஞ்சோடும் உயர்ந்த தோள்களோடும் நாம் ஒன்றாகக் கூடியிருக்கம் இவ்வேளையில்..
முள்ளிவாய்க்கால் முடிவல்ல இதுவே ஒரு முடிவிற்கான ஆரம்பமென்ற புத்துணர்வுடன் 'வலியைத் தந்தவனுக்கே வலியைக் கொடுப்போம்' என்ற தேசியத் தலைவரின் வீரிய சிந்தனைக்கு நேரிய வடிவம் கொடுக்க இன்று கூடியிருக்கும் இந்த நிலத்தை எங்கள் முள்ளிவாய்க்காலாகச் சித்தரித்து நாமனைவரும் ஓர்மத்துடன் ஒன்றுதிரண்டிருக்கும் இவ்வேளையில்...
மாற்றானுக்கு மண்டியிடாமல் மண்ணின் உருத்துக்காரரான எங்களைப் புலம் பெயரவும் இடம் பெயரவும் வைத்து மண்ணோடு மண்ணாகக் கொன்று குவித்த வகை தொகையற்ற எண்ணிக்கையில் எம்மவரைக் காணாமல் போகச்செய்து எஞ்சியவர்களை ஏதிலிகளாகவும் பரதேசிகளாகவும் அலையவிட்டு இதனையே தங்களின். போர்வெற்றியாகச் சிங்கள தேசம் மார்பு தட்டி ஆர்ப்பரித்து அட்டகாசமாக மகிழ்ந்துநிற்கும் இவ்வேளையில்...
சரித்திரமாகிவிட்ட எம்மக்களையும் கதாநாயகர்களாக நிற்கும் எம்மாவீரர்களையும் எங்கள் வழிகாட்டிகளாக உள்ளத்தேயிருத்தி அவர்கள் வீரத்தையும் அவர்தம் தியாகத்தையும் எம் கண்முன்நிறுத்தி மனித குலத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்கு உரத்த குரலில் நியாயம் கேட்கும் கனடிய மண்ணின் தனித்துவ நகரமான ரொறன்ராவில் நாம் திரண்டிருக்கும் இவ்வேளையில்...
நாமனைவரும் ஏற்றத் தாழ்வின்றி ஆண் பெண் பெரியவர் சிறியவரென்ற வேறுபாடின்றி முள்ளிவாய்க்கால் சாம்பல் மேட்டில் நின்று வீரசபதமொன்றெடுக்கின்றோம். முள்ளிவாய்க்கால் ஒரு முடிவிற்கான ஆரம்பமென்பதை எங்கள் நெஞ்சுக்குழிக்குள் ஆழமாக விதைப்போம். எமக்கு வலியைத் தந்தவனுக்கு அதனையே திருப்பிக் கொடுப்போம். எமக்காக நியாயம் கேட்கும் உலக நாடுகளினதும் அனைத்துலக நாடுகளினதும் நேசக்கரங்களை இறுகப்பற்றி தமிழீழ தேசத்தை அழிக்க முனைபவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.
போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆட்சிப் பீடத்தைத் தண்டிக்க வேண்டுமென்பது எங்களின் இன்றைய குரல். ஆனால் இது எங்களின இறுதிக் குரலல்ல. போர்க்குற்றமென்று இன்று திறக்கப்பட்டுள்ள சர்வதேசப் பாதையின் வழியாகச் சென்று சிங்கள அரசை இனப்படுகொலைக்கான குற்றக் கூண்டில் நிறுத்தும்வரை
நாம் ஓயமாட்டோம்! நாம் ஓயமாட்டோம்! நாம் ஓயமாட்டோம்!
என்று போர்க்குற்றத்தின் மூன்றாம் ஆண்டான இன்றைய நாளில் எங்கள் விழுதுகளை அணைத்து எங்கள் வேரோடு இணைத்து சபதமெடுக்கின்றோமெனப் போர்க்குற்றநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
உறுதிமொழி.
அதனைத் தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட உறுதிமொழி. அன்பான உலகத் தமிழ் உறவுகளே!
சிறிலங்காவின் இனப்படுகொலையின் போர்குற்ற நாளான மே 18. இந்நாளில் தாயக நோக்கோடும் தன்னாட்சியத்திற்கும் நீதியைப் பெறுவதற்குமாகத் தங்கள் உயிர்களை ஈந்த அந்த வீரமறவர்களினதும் மக்களினதும் நினைவுநாளில் நாங்கள் உறுதியெடுத்துக்கொள்வோம்.
தமிழீழ மக்களின விடிவிற்காக எங்கள் தாயக மண்ணின் விடுதலைக்காக உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து ஈழ விடுதலைக்காக இறுதிவரை உழைப்போமென இத்தால் உறுதி எடுத்துக்கொள்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!
ரொறன்ரோ போர்குற்ற நாளில் பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாக பங்கேற்பு
பதிந்தவர்:
தம்பியன்
20 May 2012
0 Responses to ரொறன்ரோ போர்குற்ற நாளில் பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாக பங்கேற்பு