முதலிலில் உரிமைப் பறிப்பு! பின்னர் நாட்டுப் பறிப்பு! அதன் பின்னர் உயிர்ப் பறிப்பு! இப்போ தொடர்வது வீட்டுப் பறிப்பு!.. ஆம், எங்களது போராட்ட இலக்கையும், போராடும் வலுவையும் கூட சிங்கள இனவாதம் பலவீனப்படுத்தி, நெற்களஞ்சிய வன்னி மக்களையே முகாங்களில் உணவிற்காய் வரிசையில் நிற்கவைத்து இன்று நிலமீட்பிற்காக போராட வைத்துள்ளது.
அதாவது ஐம்பதிற்கு ஐம்பது கேட்ட இனத்தை 13 ஐயும் மறக்கச் செய்து, காணிக்கும் வீட்டிற்கும் போராடும் அவலநிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. நாளைக்கு தண்ணீரிற்கும் நாளை மறுதினம் சுவாசிக்கும் காற்றிற்கும் கூட போராட்டம் நடாத்தும் நிலையைக் கூட மகிந்த அரசு தமிழரிற்கு ஏற்படுத்தலாம்.
இந்தநிலைதொடராது, திருமுறிகண்டி நிலமீட்புப் போராட்டம் என்பதில் உள்ள நிலம் என்ற பதமானது தாயக நிலத்தை சுட்டுவதாகமாற்றவல்ல ஆற்றல் புலம் பெயர் தமிழர்கள் வழங்கும் “பொருத்தமான”ஆதரவிலேயே தங்கியுள்ளது. உண்மையில் ஈழம் என்பது இலங்கைத் தீவுமுழுவதினதும் மறு பெயராகும்.
ஆனால் வட்டுக் கோட்டைத் தீர்மானத்துடன் ஈழம் என்றசொல் வடகிழக்கை மட்டும் குறிப்பதாக மாறியது. இன்று கிழக்கை மட்டுமல்ல வடபுலத்தையும் அதற்கும் அப்பால், கடலையும் கூட இழக்கும் நிலையே உள்ளது.
ஈழக் கோட்பாட்டை பூஜ்ஜியமாக்குவதே மகிந்தவின் நோக்கம். அதை முள்ளிவாய்க்காலுள் நிறைவேற்றிவிட்டதாக சிங்கள இனவாதம் நம்பியதால் முழு இலங்கையையுமே அது விழுங்க முயல்கிறது.
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 2009 இறுதிப் பகுதியில் வடமராடசிக்கு சென்று திரும்பிய ஒருதமிழ் உறவு அங்கு இப்போது ஒருபிரச்சனையுமில்லை என்று இங்கு வந்து சாட்சியமளித்தது.
தமிழ் அமைச்சர்களும் வெளிநாடுகளில் உள்ள பல தமிழர்களும் கூட புலிகளிடமிருந்து தமிழரை மீட்டதாக குரலெழுப்பினர். சிங்கள அரசும் அதன் தூதர்களும் கூட இதையே கூறினர்.
இப்போ மீட்கப்பட்ட தமிழர்கள் தாம் இரையாகாமல் தங்களையும் தங்கள் வீடுகளையும் காணிகளையும் தோட்டந்துரவுகளையும் மீட்க உயிரைப் பணயம் வைத்து ஜனநாயகப் போராட்டம் நடாத்த வேண்டியுள்ளது.
இந்தநிலையில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் தூக்கத் தள்ளப்பட்டார்கள் என்பதை சர்வதேச தலைமைகளிற்கும், உலகஊடகங்களிற்கும் வெளிநாடுகளில் உள்ள சீனா, ரஸ்யா இந்தியா அடங்கலாக சகலநாட்டுத் தூதரகங்களிற்கும் நினைவுபடுத்துவது அவசியம்.
சிறீலங்காத் தூதரகத்தைமட்டுமன்றி ஜெனீவாவில் கியூபா அடங்கலாக சிறீலங்காவிற்கு ஆதரவு அளித்தநாடுகளையும் புலம் பெயர் தமிழர்கள் அணுகவேண்டும். நிலையையை விளக்கி நீதி கேட்க வேண்டும். வெளியில் நின்று கோஜமிடுவதுடன் ஓய்ந்து விடலாகாது.
ஜெனீவாவில் சிறீலங்காவிற்காக, மீள்குடியேற்றத்திற்கு மேலதிககாலம் வழங்குமாறு கேட்டீர்களே, அவர்களோ நிலத்தை அல்லவா பறித்து தமிழரை நிரந்தர அகதிகளாக்குகிறார்கள் என்று நீதி கேட்க வேண்டும்.
இந்தநிலையில் அமைச்சர்களாக உள்ள தமிழர்கள் அனைவரும் கூட இதர முஸ்லீம் தலைவர்களைப் போல், அரசியல்நிலை வேலியைத் தாண்டி இனம் சார்ந்து தமது உள்ளக் கிடக்கைகளை வெளியிட வேண்டும்.
1948 ம் ஆண்டிலேயே மலையகமக்களின் குடியுரிமையையும் அதனூடாக அவர்களது வாக்குரிமையையும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கையையும் பறித்த சிறீலங்கா அரசானது படிப்படியாக தமிழர்களின் உரிமைகளைப் பறித்தது.
அப்போது வடகிழக்கு தமிழர்கள் அதற்கெதிராக போராட்டம் நடாத்தியிருக்க வேண்டும். நமது வீட்டிற்கும் இன வாதத் தீ பரவும் வரைநாம் உறங்கிவிட்டோம். இதேபோன்று தமிழகமும் நாளை கவலைப்படலாம். ஏனென்றால் அடுத்த உலக வல்லரசு சீனாதான்.
அதுவரை சிறீலங்கா நேரத்தை எடுத்துக் கொண்டால் நிலை மோசமாகிவிடும். அதன் பின் யாரும் எதுவும் செய்ய இயலாது. இன்றோ, கட்டுநாயக்கா முகட்டு கூரையில் நின்ற தமிழர் ஆயுதப் போராட்டமானது சாத்வீக, அறவழி ஜனநாயகப் போராட்டத்தில் மீண்டும் வந்து நிற்கிறது.
1948 இலேயே, மலையகத்தை அபகரித்த இனவாதம் ஒருதசாப்பதம் தாண்டி, தனிச் சிங்களச் சட்டத்தின் ஊடாக தமிழ் மொழிப் பறிப்பை அதாவது, மொழி அழிப்பிற்கு வித்திட்டது. மீண்டும் ஒருதசாப்தத்தின் பின்னர் அடையாள அட்டை மசோதாவைக் கொண்டு வந்தது.
பின்னர் 1972 இல் ஒரு அரசியல் அமைப்பு மோசடியூடாக, சிறுபான்மையினரிற்கிருந்த சட்டப் பாதுகாப்பையும் நீக்கி, ஈழம், சிறீலங்கா என்று இரண்டு கூறுகளின் கூட்டுமொத்தமாக இருந்த இலங்கைளை ஈழத்தை பூஜ்ஜியமாக சிறீலங்கா ஆக்கியது.
இந்த ஒரே தேசமென்பதற்கும் தனிச் சிங்களச் சட்டத்திற்கும் வேறுபாடு ஏதுமில்லை என்பது சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அகில உலகமுமே தனிச் சிங்களச் சட்டத்தை வெறுப்பது கண்கூடு. எனவே அதன் மறுவடிவமான மகிந்தவின் ஒரேதேசம் ஒரேநாடுஒரே இனம் என்ற கொள்ளை மறுதலிக்கப்பட வேண்டும்.
மகிந்தவின் ஒரேதேசம் என்ற கோஜத்தில் இன ஐக்கியம் அழிக்கப்படுகிறதே ஒழிய ஐக்கியம் உருவாக்கப்படவில்லை. சிறீலங்கா பிறசிறுபான்மை இனங்களைக் கொண்ட, இரு நாடுகளைக் கொண்ட ஒரு பல்லின ஒன்றியமாக வேண்டும். அது முடியாவிடின் பிரிபட வேண்டும்.
முன்பும் பிரிவினை என்பது சுய பாதுகாப்பிற்காகவே வெளிப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இன்று நமக்குள்ள பெரிய பலவீனம் டொக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மௌனமே. இது மௌனமான தந்திரத்தின் வெளிப்பாடல்ல என மன்மோகன் சிங் அவர்களே கூறியுள்ளார்.
பொறுக்க முடியாமல், ஒருதடைவை இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் தான் என்று லால் கிருஸ்ணா அத்வாணி முழங்கினார்.
அதற்கு பதிலளிப்பதைப் போல் திருமன் மோகன் வருமாறு கூறினார். என்னால் சத்தமாகக் கூடப் பேச முடியாது. எங்கள் குடும்பத்தில் யாரும் கூச்சலிடுவதில்லை என்று கூறினார்.
இதன் மொழிபெயர்ப்பு எல். கே. அத்வாணி கோஜமிடுபவர் என்பதாகும்.
மன்மோகனின் தன்மை ஒரு வீட்டை நிர்வகிக்க பொருந்தலாம். ஒரு பெரியவங்கியை நிர்வகிக்க போதுமானதாகலாம். தலைமைவேறு, முகாமைத்துவம் வேறு, நிர்வகித்தல் வேறு என்பது கவனினிக்கப்பட வேண்டும். ( லீடர் - மனேஜர் - அட்மினிஸ்றேற்றர்)
மன்மோகன் சிங் இந்தியாவின் ஒரு தலை சிறந்த நிதி அமைச்சர் என்பதில் சந்தேகமே இல்லை. அவ்வாறே அவரின் மௌனமும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு துணைபோய் விட்டது என்பதை காலம் வரலாறாக்கும்.
மன்மோகன் பாரதத்தின் தலைவர் அல்ல. காங்கிரஜ் கட்சியின் பாதரட்சையை சிம்மாசனத்தில் வைத்து, இராஜ்ஜிய பரிபாலனம் செய்த பரதன் போல ஒரு பிரதிநிதியாகவே இந்தியாவின் ஆளுகராகவே அவர் காணப்படுகிறார். என் அரசியல் அனுபவம் ராஜீவின் வயதென்றார் ஜே.ஆர் அன்று. ராஜீவிற்கு அஞ்சிய அளவில் எள்ளளவு கூட மன் மோகனிற்கு கொழும்பு அஞ்சுவதாகத் தெரியவில்லை.
13வது சரத்துமாற்றத்தை தீர்வாக ஏற்றுக் கொண்ட அரசியல் அறிவாளி டொக்டர் மன்மோகன் சிங். பொருளாதாரம் ஒரு கற்கைநெறி. ஆனால் அரசியல் ஒரு கலை. எனவேதான் அரசியல் ஞானமற்ற சிங் இந்திய தேசத்தின் தலைமை எடுக்க வேண்டிய முடிவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் விட்டு விட்டு நிர்வாகம் நடாத்துகிறார்.
பார்த்தசாரதி போன்ற தலைசிறந்த ராஜதந்திரிகளையும் மீறிய தலைமைத்துவமும் மிடுக்கும் இந்திராவிடமிருந்தது. இதில் எதுவும் மன்மோகனிடம் இல்லை. பங்களாதேசை மீட்பின் இந்திய இராணுவம் அங்கிருக்கவில்லை. சுதந்திரத்தை வழங்கிவிட்டு இந்திய இராணுவம் திரும்பிவிட்டது.
தான் மக்களை மீட்டதாகக் கூறும் சிறீலங்கா இராணுவம் அங்கிருப்பதுடன் மேலும் முகாங்களை விஸ்தரிப்பது ஏன் என்றுகேட்கக் கூடத் தெரியாதவர் மன் மோகன். இந்தியா இராணுவம் டாக்காவை நெருங்கிக் கொண்டிருந்த போது அமெரிக்காவின் ஏழாவது கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்துள் நுழைந்தது. பதறிப் போன பாரத்தசாரதி, இந்திரா அம்மையாரின் கதவை நள்ளிரவென்றும் பாராது தட்டினார்.
“அஞ்சவேண்டாம், பதற்றப்படாமல் போய்த் தூங்குங்கள் நான் எற்கனவே இது பற்றி ரஸ்சியாவுடன் பேசிவிட்டேன் என்று இந்திரா கூறியது அன்றைய செய்தியாகும்”.
இவ்வாறான தீர்க்கமும், தலைமையும் மன்மோகனிடம் கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கு பொருத்தமான திறமையான ஆட்கள் இல்லாத போது நியமனம் பெற்ற நாராயணனிற்கும் இந்தத் திறமை கிடையாது.
சிறீலங்காவிற்கு வரவுள்ள சிவகசங்கர் மேனனிடமும் ஏதும் இருந்திருந்தால் இப்படி ஓடிவர வேண்டியதில்லை. இந்த நேரத்தில் ராஜதந்திரத்துடன் உலகத்துடன் இணைந்து சென்று தற்காத்துக் கொள்ள வேண்டிய பணிபுலம் பெயர் தமிழர்களிடமே சுமத்தப்பட்டுள்ளது.
தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரே நேர் கோட்டில் பயனிப்பதைவிட்டு, அதனைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு அதனை விமர்சிக்கும் நேரமல்ல இது. வெளிநாடுகளில் தாயகத்தில் நடக்கும் நிலமீட்புப் போராடத்திற்கான ஆதரவு தமிழ் மக்களின் ஆதரவாக இருப்பதுடன் அதனை சிறீலங்காதிரித்து பொய்ப் பரப்புரை நடாத்த புலம் பெயர் தமிழர்கள் வாய்ப்பளித்தாலும் நோக்கம் நிறைவேறாது.
பேயிடமாவது உதவிபெறுவோம் என்றவர்கள் சர்வதேசப் பிசாசை எமக்கு எதிராக ஏவியே பலமான புலிகளைப் பலி கொண்டனர். இந்தப் படிப்பினைகளை மனதிற் கொண்டே புலம் பெயர் தமிழர்கள் செயற்பட வேண்டும்.
சர்வதேசத்துடன் முரண்படட்டும் என்றே தலைவர் பிரபாகரன் ரணிலைத் தவிர்த்து மகிந்தவை தேர்தலில் வெல்ல அனுமதித்தார் என்பது புலம் பெயர் தமிழழர்கள் அறியாததது அல்ல.
இதன் பொருள் சர்வதேசத்துடன் முரண்படக் கூடாது என்பதுடன் மகிந்தவை சர்வதேசத்துடன் சேரவிடாதும் பார்க்க வேண்டும் என்பதாகும்.
என்னைப் பொறுத்தவரை பிரபாகரனின் சிந்தனையையே சம்பந்தர் அமுல்படுத்துகின்றார். இதற்குபுலம் பெயர்ந்த தமிழராகிய நாம் ஆதரவு அளிக்க வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
kuha9@rogers.com
0 Responses to வீட்டுப் பறிப்பாகிவிட்ட நாட்டுப் பறிப்பு: பூநகரான்