மேற்கு மியான்மாரில் பௌத்த மற்றும் முஸ்லிம் இன மக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 78 மக்கள் கொல்லப் பட்டும் ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் உள்ளனர் என ஐ.நா அறிவித்துள்ளது.
இது குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி நவி பிள்ளை கருத்துரைக்கையில் மியான்மாரின் ராக்கையின் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு முயற்சித்த பாதுகாப்புப் படையினர் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
இக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ராக்கைன் இன பௌத்த மக்களும் ரோஹிங்கிய முஸ்லிம்களும் ஆவர். இக் கலவரம் ஏற்படக் காரணமாக மே 28 ஆம் திகதி ராக்கைன் பௌத்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கூறப்படுகின்றது. இதனை மியான்மாரின் மனித உரிமைகள் அமைப்பு (OHCHR) தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் திகதி இனம் தெரியாத குழு ஒன்றினால் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இக்கலவரம் தூண்டப்பட்டது. இக் கலவரங்களால் இதுவரை மொத்தம் 30 000 மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மியான்மார் அரசாங்கத்தால் அந்நாட்டில் மொத்தம் 135 வகை சிறுபான்மை இனத்தவர்கள் வாழ்வதாக 1982 ஆம் ஆண்டு பதிவு செய்யப் பட்டுள்ள போதும் இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to மேற்கு மியான்மார் கலவரங்களில் குறைந்தது 78 பேர் பலி - ஐ.நா