ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 16.02.2014 இன்று 19வது நாளாக காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி 32 கி.மீ தூரத்தைக் கடந்து யேர்மனியின் மற்றுமொரு இடத்தை வந்தடைந்தது.
மதியம் 14:30 மணியளவில் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் நடைப்பயணச் செயற்பாட்டாளர்கள் மக்கள் நடைப்பயணம் முடிவடையும் தினமான மார்ச் 10 அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உரை ஆற்றினர்.
யேர்மனி வாழ் தமிழ் மக்கள் நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள மனிதநேய பணியாளர்களை மகிழ்வுடனும் உரிமையுடனும் வரவேற்று தொடர்ச்சியாக தமது தார்மிக ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார்கள். இன்று யேர்மனி நாட்டினுடைய காவல்துறையினர் நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள மனிதநேய பணியாளர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்றைய தினத்தில் நடைப்பயணத்தைத் தொடர்ந்து தில்லிங்கேன் நகரத்தில் மக்கள் சந்திப்பும் அத்தோடு குர்திஸ்தான் மக்கள் விடுதலைக்காக நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்து கொண்டனர் . இவ் நிகழ்வில் குர்திஸ்தான் மக்கள் ஈழத்தமிழர்களின் விடுதலையை என்றும் ஆதரிப்போம் என்றும் ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கத்தை மிகவும் உயர்வாக மதிக்கின்றோம் என்றும் உறுதியளித்தார்கள்.
நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
0 Responses to உறுதியுடன் 19வது நாளாகத் தொடரும் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப் பயணம்!