தமிழ்ச் சிறைக்கைதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றால் உடனடியாக விடுதலை கிடைக்கும். எனவே தமிழ்ச் சிறைக்கைதிகள் அனைவரும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்து உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சற்றுமுன் தெரிவித்தார்.
கொழும்பு நிபோன் ஹோட்டலில் சற்றுமுன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
‘விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடமையாற்றிய கருணா அம்மன் என்று அழைக்கபடும் முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்தமையால் பிரதியமைச்சராகவும், பிள்ளையான் என்று அழைக்கப்பட்ட சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருப்பதோடு எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட உள்ளார்.
மேலும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தற்போது அரசாங்கத்தின் விருந்தினராக இருக்கின்றார். இவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்ப்பட்டவர்கள். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தமையால் இவர்கள் இவ்வாறான ஓர் உயர் நிலையில் இருக்கின்றனர்.
ஆனால் சிறிய குற்றங்கள் செய்த தழிழ்ச் சிறைக்கைதிகள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினிக்கு புனர்வாழ்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய விடயம்தான். ஆனால் சாதாரண தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் புனர்வாழ்வு வழங்க அரசு தயங்குவதேன்?
மேலும் தற்போது வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளாலும் பாதுகாவலர்களாலும் தாக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான நிமல ரூபன் நேற்றிரவு மரணமடைந்துள்ளார். இவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சில கைதிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாங்கள் இந்த விடயத்தை சர்வதேச மயப்படுத்துவோம். நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. நாங்கள் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படவில்லை. எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காககவே போராடுகின்றேம்” என்றார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மனோ கணேசன்,
ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஜயசூரியசோசலிச பாட்டி சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த தேவகே, நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்ண, அருட்தந்தை சக்திவேல், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
0 Responses to தமிழ்க் கைதிகள் அரசாங்கத்துடன் இணைந்தால் மட்டுமே விடுதலை