Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதும், பல வருடங்களாக எந்தவித நீதி விசாரணைகளும் இன்றி இலங்கை, இந்திய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் போர் முடிவடைவதற்கு முன்னரும் மற்றும் போர் முடிந்த பின்னருமாக பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் காலவரையறையின்றி எந்தவித நீதிவிசாரணைகளும் இன்றி தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

அதேபோல் இந்தியாவிலும் செங்கல்பட்டு போன்ற சிறைகளில் பல ஈழத்தமிழ் அகதிகள் காலவரையறையின்றியும் நீதி விசாரணைகள் இன்றியும் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் காலவரம்பின்றி எங்கள் ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதென்பது இந்த அரசுகளின் ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான கசப்புணர்வின் வெளிப்பாடாகவே நோக்கத்தக்கதாக உள்ளது.

அண்மையில் இலங்கை வவுனியாச் சிறையிலிருந்து 30 தமிழர்கள் அடித்து கைகள், கால்கள் முறிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த உடைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மூவரின் நிலை மிக மோசக உள்ளதாகவும் அறிகிறோம்.

அத்துடன் அவர்களது காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாமலும் உணவு வழங்கப்படாமலும் தங்கவைக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எங்கள் ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் பல நாட்களாக தொடர்ந்து உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

அகிம்சையை மதிக்கின்ற நாடாகவும் அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றதாகவும் தன்னை கூறிக்கொள்ளும் இந்தியா, சிறைகளில் கொடுமைப்படுத்திவரும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இரக்கமின்றி, மனிதநேயமின்றி செயற்படுவதை ஈழத்தமிழர்களாகிய எமக்கு மிகவும் வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

போர் முடிவடைந்த பின்பும் விடுதலைப் புலிகள் மீதிருந்த தனது கசப்புணர்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்ற செயலாகவே ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை நோக்கக்கூடியதாக உள்ளது.

எனவே, எந்தவித நீதி விசாரணைகளும் இன்றி இலங்கை, இந்திய சிறைகளில் காலவரம்பின்றி தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதையும் அவர்கள் மீது கொடுமைகள், சித்திரவதைகள் இழைப்பதையும் டென்மார்க் தமிழர் பேரவை சார்பாக ஈழத்தமிழர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அத்துடன், இந்த விடயத்தை நாம் டென்மார்க்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் ( European Commission Representation in Denmark) கவனத்துக்கு கொண்டுவந்து அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளோம்.

மேலும்,அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டுவருவதோடு, சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளோடு சந்திப்புகளை மேற்கொண்டு ஈழத்தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தைத் தெரிவித்துவருவதோடு அவர்களை உடனடியாக விடுதலைசெய்வதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் இலங்கை, இந்திய அரசுகளையும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு டென்மார்க் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Responses to இலங்கை, இந்திய சிறைகளில் உள்ள ஈழத்தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க: டென்மார்க் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com