வரலாற்று வழிவந்த இறைமைக்கும், போராடிப்பெற்ற இறைமைக்கும் மற்றும் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலகத்தால் வழங்கப்பட வேண்டிய இறைமைக்கும் உரித்துடைய தேசம் என்ற அடிப்படையில், சுதந்திரமும், இறைமையுள்ள தமிழீழம் என்ற உன்னத இலக்கை அடைவதற்கான இலட்சியப் பயணத்தில்...
அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பயணிக்க, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் 2012 ஜூலை மாதம் 27 தொடக்கம் 29ம் திகதிவரை ஒன்று கூடிய கீழ் கையொப்பமிட்டுள்ள 11 நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர் மக்கள் கட்டமைப்புக்களாகிய நாம் உறுதி பூணுகிறோம்.
அத்துடன், தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு முகம்கொடுத்து வருகின்ற தேசம் என்ற அடிப்படையில், எமது மக்களின் கௌரவாமானதும், சுதந்திரமானதுமான வாழ்வென்பது சுதந்திர தமிழீழத்திலேயே உறுதிப்படுத்தப்படும் என்ற அடிப்படையில், தமிழீழத்தின் பிறப்புக்கும், அங்கீகாரத்திற்குமாக சர்வதேச நியமங்களின் அடிப்படையிலான சர்வசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக மீள்வலியுறுத்துகிறோம்.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதன் பிரகாரம், இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து நீதி வழங்குவதற்காக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உலகிடம் கேட்டு நிற்கிறோம்.
இனஅழிப்பினை தீவிரப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாத அரசு, தற்போது தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை துண்டாடுவதோடு, பொருண்மிய வளங்களை சிதைத்து, தமிழ் மக்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் முனைப்புடன் அழித்து வருகிறது.
அதனால், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் அடிப்படை உரிமைகள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுவருவதுடன், அவர்களின் இயல்புவாழ்வென்பதும் சீரழிந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் ஆக்கபூர்மாக செயற்படுவோம் என உறுதிகொள்வதோடு, தாயகத்திலுள்ள எமது மக்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தி, சுபீட்சமான வாழ்வை அவர்கள் அடைவதற்கு துணைபுரிவோம் என திடசங்கற்பம் பூணுகிறோம்.
மேற்குறித்த செயற்பாடுகள் அனைத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்காக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்புக்கள் அனைத்தும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு உறுதிகொள்வதோடு, எமது மக்களின் வளமான எதிர்காலத்தையும், எமது சுதந்திரப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களையும் மனதிற்கொண்டு, ஓரணியில் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து ஐக்கிய முன்னணியாக செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியத்திற்காக பணியாற்றக்கூடிய அனைத்து அமைப்புக்களுக்கும் நேசக்கரம் நீட்டுகிறோம்.
”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
இங்ஙனம்,
கனடியத்தமிழர் தேசிய அவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
டென்மார்க் தமிழர் பேரவை
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
ஒல்லாந்து ஈழத்தமிழர் பேரவை
சுவிஸ் ஈழத்தமிழரவை
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
பிரித்தானியா தமிழர் பேரவை
தமிழ் இளையோர் அமைப்பு - நியூசீலந்து
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்



0 Responses to ஈழத்தமிழர் இறைமைப் புரிந்துணர்வை வலுப்படுத்தும் ஒஸ்லோ பிரகடனம்