Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு கதிரை வெறுமையாக இருந்தால் அதில் யார் வேண்டுமானாலும் அமரலாம் அல்லது அமர்த்தப்படலாம். இந்த வெறுமை அதில் எவரையாவது இழுத்துப் பிடித்து இருத்துவதற்கோ அல்லது அதில் இருக்க தவிப்பவர்களிற்கான வாய்ப்பாகவோ, அல்லது தயாராகவுள்ளவர்களிற்கான அதிஷ்டமாகவே கூட அமையலாம்.

ஆக, இந்த நிலை விரோதிகளிற்கோ, துரோகிகளிற்கோ அல்லது எதுவித பொருத்தமும் அற்றவர்களிற்கோ கூட கிடைக்கவே இந்த வெறுமை இன்று வழி வகுத்துள்ளது.

இந்த நிலையை மனதிற்கொண்டே தாயகத்தில் தேர்தலைப் புறக்கணித்த பழைய கூட்டணியினரும், ஏன்? புலிகளும் கூட பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றக் கதிரைகளைக் கூட நிரப்பி வந்தனர்.

எனவே தான் கூட்டமைப்பினரைப் போல், சர்வதேச அரசியல் வெளியில், உலக அரசுகளுடன் ஒத்தியங்க வல்ல ஒரு சமூக அல்லது இன அமைப்பின் தேவை வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன் பொருள் தேவையை இலட்சியத்தை கை விடுவதோ விலை போவதே அல்ல. கதிரையில் துரோகிகளும் விரோதிகளும் கூலிகளும் இருந்து விடக் கூடாது என்பது மட்டுமே.

கூட்டமைப்பினர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து தமது அரசியலைத் தொடர்வதற்கான அரசியல் வெளி கடலால் சூழப்பட்டுள்ள இலங்கைத் தீவுள் இல்லை. அதுமட்டுமன்றி அதற்காக பிரச்சாரம் செய்யவதற்கான சுதந்திரமும் கூட அங்கில்லை.

இதே சமயம், கடலால் சூழப்பட்டுள்ள உலக சர்வ தேச அரசியற் தளத்திலும் தமிழர் பிரிவிணைக்கான “அரசியல் ராஜீக வெளி” இன்னமும் இல்லை.

ஆனால் மனம் விரும்பும் உணர்ச்சி வேஷக் கோஜங்களை எழுப்புவதற்கான சுந்திரமும் இது பற்றி அரசியல்வாதிகளையும் , அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதற்கான கருத்துச் சுதந்திர ஜனநாயக சூழ்நிலையும் மட்டும் இங்கு உண்டு.

ஆனால் இதனையே சிலர் ஆதரவாகவும் அனுசரணையாகவும் அங்கீகாரமாகவும் காட்டிக் கொண்டு தமது போட்டி அரசியற் பயணத்தை தொடர்கின்றனர். இதன் பொருள் நாடு கடந்த அரசு தேவையில்லை என்பதல்ல.

அது எதிர் காலத்தில் சர்வதேச அரசியற் கால நிலையோ உலக பூகோள அரசியல் மற்றும் வர்த்தகத் தேவைகளோ தேவைப்படலாம். தவிர தமிழரின் இறைமை, சுய நிர்ணயம் போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்த அது நிச்சயமாகத் தேவை.

அதாவது பூநகரான் பார்வையில் நாடு கடந்த அரசு என்பது இறந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எதிர்காலத் தேவையாகும். அதே சமயம் நிகழ்காலமே வெற்றுப் படகாகவோ வெற்றுக் கதிரையாகவோ தான் காணப்படுகிறது.

கனேடிய தமிழக் காங்கிரசைத் தவிர இங்குள்ள ஏனைய அமைப்புக்கள் இதுவரை பாராளுமன்றத்திற்குள் பேசக் கூட சென்றதாக இல்லை. இங்குள்ள எந்த அமைப்பும், ஐ.நாவையோ அமெரிக்காவையோ இந்தியாவையோ சீனாவையோ நோக்கி வடிவமைக்கப்பட்டவை அல்ல.

அவை தங்களது குடை கொடி ஆலவட்டங்களுடன் கனடாக் கந்தசாமி கோயில் வீதியில் வலம் வருகின்றன. தமிழ் மக்களை கவர யாப்புக்களையும் இலட்சனைகளையும் வரைந்துள்ளன.
இவை உலக அரசுகளை நோக்கியவை அல்ல. தேசியம் தன்னாட்சி சுய நிர்ணயம் ஆகிய மூன்றும் வட்டுக்கோட்டைக்குள் அடங்கும். அதையே அதீத தேசியவாதமென இன்றைய உலகம் மறுதலிக்கிறது.

ஆனால் எங்களிற்கான தீர்வை கையாள்பவர்களாக ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இந்திய அமெரிக்க சீன அரசுகள் அடங்கலாக உலக நாடுகளும் உள்ளன.

எனவே இன்றைய புலம்பெயர் தமிழரின் தேவை உலகிற்கு உரிய வடிவில் ஒரு பொதுவான புலம்பெயர் தமிழர் அமைப்பை நிறுவுவது தான். இதை 2009 இலேயே நாங்கள் செய்திருக்க வேண்டும்.

எனவே, இந்தச் சமகால தமிழினத்தின் வெற்றிடத்தை புலம்பெயர் தமிழர்கள் நிவர்த்தி செய்யாமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சுத்தமான தமிழர் அரசியல் சுவாசம் செய்ய ஏதுவான பிராணவாயு (ஒட்ஜிசன்) தான் ஓடி வந்து நிரப்பும் என்று எதிர்பார்க்க இயலாது.

அது கரியமல வாயுவாகவே (காபனீரொட்சைட்) அதனையும் விட கொடி விசவாயுவாகவோ கூட இருக்கலாம்.

எனவே இனியாவது ஒதுங்கி ஓரம்போயுள்ள தமிழர்கள், அரசியலிற்குள் திரும்பி வராவிடினும், ஆயுதப் போராட்டத்தை கைக்கொள்ள விரும்பாவிடினும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது இனப் பிரதிநிதித்துவத்தை இனியும் வெற்றிடமாக வைத்திருக்கலாமா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

மேலும், அரசியற் பிரதிநிதித்துவம் மட்டுந்தான் இனப்பிரதிநிதித்துவம் என்பதல்ல. கனேடியன் தமிழக் காங்கிரஸ் போன்ற சிவில் அல்லது சமூக அமைப்புக்கள் தமிழரை “ தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்” பிரதிநிதித்துவம் செய்யலாம்.

இதைப்பற்றியும் போட்டி அவதூறுகள் இருந்தால் அல்லது லிபரல் ஆதரவு என்ற மாயை இருந்தால் இனியாவது புதிதாகவாவது எதுவித அரசியற் கலப்புமற்ற முற்று முழுதான ஒரு சமூக கொம்மினிற்றி அமைப்பை அல்லது கூட்டமைப்பின் கிளைகளை புலம்பெயர் தமிழர்கள் தெரிவு செய்து இந்தக் கதிரையில் அமர்த்த வேண்டும்.

இல்லாவிடின் தமிழ்ச்செல்வனின் கிளிநொச்சி வீட்டில் “கே பி” யை இருத்திய மகிந்த புலம்பெயர் தமிழர்களின் உலகம் ஏற்றுக்கொள்ள வல்ல மிதவாதத் தமிழர்கள் என்று பின கதவால் தூதரகங்களிற்கு சென்று வந்தவர்களை இழுத்துப் பிடித்து அமர்த்தலாம்.

தவறான செயற்பாடுகள் மட்டுமல்ல போட வேண்டிய வேலிகளைக் போடாதிருப்பதும் இனக் குந்தகங்களிற்கு எதிரியால் பயன்படுத்தப்படலாம். எனவே தாயக தழிழரின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் போல் புலம்பெயர் தமிழரிற்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை.
அது யார்? யார்? யார்? கனடாவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியையும் கேட்க வேண்டியிருப்பது வேதனையானது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.

இதற்கு முதலாவதாக தமிழரிற்கு சொந்தமான எங்கள் இனப் பிரச்சினையை தங்களது கோரிக்கைகளாக்கும் போலி அரசியல்வாதிகளிடமிருந்தும், தங்களது யாப்பிற்குள்ளும் அமைப்பு விதிகளிற்குள்ளும் வாக்குகளையும் ஆதரவையும் குறிவைத்து சேர்க்கும் அரசியல் அமைப்புக்களிடமிருந்தும் பொதுவான தமிழர் இனப் பிரச்சினையை முதலில் விடுவிக்க வேண்டும்.

தமிழரின் உரிமை அல்லது சுதந்திரப் பிரச்சனை அரசியல் விவகாரம் அல்ல. அது முதலாவதாக ஒரு மனித உரிமைப் பிரச்சினை. இரண்டவாதாக போர்க் குற்றம் என்று பார்த்தால் அது ஒரு சட்டப் பிரச்சினை. மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் தமிழரிற்கான அரசியற் தீர்வை உலக நிர்வாக பிரச்சினையாக கையாள்கிறது.

அமெரிக்காவின் பாராளுமன்றதிலும், இந்தியாவிலும், இன்று கொழும்பில் சீனாவின் தூதர் மட்டத்திலும் அது நகர்கிறது. ஆனால் நாங்கள் இதனை எங்கள் மட்டத்தில் எங்களிற்குள் போட்டி அரசியலாக்கி இந்த மட்டங்களை எட்டித் தொட முனையாது திண்டாடுகிறோம்.

இந்தத் தமிழ் இனத்தின் பொதுப் பிரச்சனையை திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞரும் தங்கள் கட்சி கோரும் ஒரு பிரச்சினையாக்கி மாநாடு நடாத்தி அதை முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்தும் தமிழக அரசிடமிருந்தும் அந்நியப்படுத்தி, காங்கிரஸ் இந்தியா ஆட்டுவிக்க ஏதுவாக்கியுள்ளார்.

இது இங்கு முன்பு எதிர்வு கூறப்பட்டதே. அதாவது எமது ஈழத் தமிழர் விடயத்தை இதன் மூலமும் கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதாலும் காங்கிரஸ் இந்தியா தன்னுடன் தொடர்புபடுத்தி மேற்குலக அரசுகளின் ஈடுபாட்டை தொடர்பை அறுக்க முயல்கின்றனர்.

எங்கள் தமிழர் பிரச்சனை கலைஞர் ஜெயலலிதா ராதிகா போன்றவர்களின் அனுசரனையுடன் மாநில மற்றும் தேசிய அரசியற் கட்சிகளின் வேறுபாடுகளிற்கு அப்பால் தமிழ் இனத்தின் பொதுவான பிரச்சினையாக வரையறை செய்து ஒரு உலக புலம்பெயர் பொதுத் தமிழர் அமைப்பு இயங்கினால் இந்தக் குழப்பஙங்கள் ஏற்பட சாத்தியமே இருந்திருக்காது.

அதாவது தமிழ் இனத்தின் தீர்விற்கான பிரச்சனையை கையாளும் ஐ.நா வை வலுவிழக்கச் செய்யவே மகிந்த புலம்பெயர் தமிழருடனும் கூட்டமைப்பினருடனும் பேச முயல்கிறார்.

எனவே எதுவித தடைகளுமின்றி ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூனைச் சந்திக்க செல்ல வல்லதான ஒரு இனப் பிரதிநிதித்துவம் உடனடியாக கனேடிய மற்றும் உலக புலம்பெயர் தமிழரிற்கும் உலகெலாம் வாழும் புலம்பெயர் தமிழரிற்கும் அவசியம்.
இது நிறைவேறின் அந்தப் பிரதிநிதிகளுடனும்,
கூட்டமைப்பினருடனும் தான் மகிந்த பேச வேண்டியிருக்கும். எனவே புலம் பெயர் தமிழர்கள் தங்களிற்கான ஒரு சட்ட பூர்வமான ஜனநாயக ரீதியிலான எந்தக் கட்சியையும் எந்த இயக்கத்தையும் எந்தக் குழுவையும் சாராத ஒரு பொது புலம்பெயர் தமிழர் அமைப்பின் தேவை அவசியமானது மட்டுமல்ல அவசரமானதுங் கூட.

ஏனென்றால் சிறீலஙகாவும் இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையை ஐ.நா. கையாள்வதை தடுக்கவே எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். இதைத் தான் மகிந்தவும் செய்ய முயல்கிறார்.

தமது நலத்திற்காகவாவது நமது இனப் பிரச்சனையை கையில் எடுத்துள்ள மேற்குலக அரசுகளையும் ஐ.நாவையும், இந்தியாவும் சிறீலங்காவும் பலவீனப்படுத்த நாம் துணை போகாது நமது இனத்தை ஒரு பொது அமைப்பு வாயிலான பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.

போர்க் குற்றம் பற்றி நகர வல்ல சட்ட வெளிகளும் மனித உரிமை தொடர்பான ராஜீக வெளிகளும் கனடா போன்ற அனைத்து ஜனநாயக நாடுகளிலும் உண்டு. இனியாவது அவற்றை பயன்படுத்துவோமாக!
Poonakaran Kuhathasan - (Kuha9@rogers.com) -Canada

0 Responses to வெற்றுக் கதிரையில் அமர்த்தப்படப் போகும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதி யார்?!– பூநகரான் குகதாசன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com